தேசிய கொள்கை அமைப்பதனூடாகவே விவசாயிகள் நன்மை பெறமுடியும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Tuesday, October 9th, 2018

நாட்டின் விவசாயத் துறையினை எடுத்துக் கொண்டாலும் அதனது முன்னேற்றத் தன்மை வெகுவாகக் குறைந்துகொண்டே வருகின்றது. விவசாயத் துறை தொடர்பில் இதுவரையில் இந்த நாட்டில் ஒரு தேசிய கொள்கை இல்லாத நிலையில் நாட்டில் ஒரு புறத்தில் மக்கள் மரக்கறி வகைகளுக்கு அதிக விலையினைக் கொடுக்க வேண்டிய நிலையில் இன்னொரு புறத்தில் மரக்கறி உற்பத்திகள் ஆயிரக் கணக்கான டொன்கள் அளவில் காட்டு யானைகளுக்கு கொட்டப்படும் நிலை ஏற்பட்டு வருகின்றது.

இதன்காரணமாக ஒரு புறத்தில் நுகர்வோரும் மறுபுறத்தில் விவசாய உற்பத்தியாளர்களுமே பாதிப்புகளை எதிர்நோக்குகின்றனர். இந்த நாட்டில் தற்போதைக்கு விவசாயத் துறையில் ஈடுபடுகின்ற மக்கள் பெருமளவில் குறைந்து 20 வீதமான மக்களே அதில் ஈடுபடுகின்ற நிலை எற்பட்டுள்ளது. இந்த மக்களிலும் இன்று விவசாயத்துறை தொடர்பில் விரக்தி நிலையே ஏற்பட்டு வருகின்றது. இந்த நாட்டில் மிகவும் குறைந்த வருமானம் ஈட்டுகின்றவர்களாகவும் விவசாயத் துறை தொழிலாளர்களே காணப்படுகின்றனர்.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியிழப்பு அதிர்ச்சிக்கு எதிராக வெங்காயம் உருளைக்கிழங்கு அரிசி போன்ற உள்ளூர் உற்பத்திகள் மக்களுக்கு உதவியாக அமையுமென அண்மையில் மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருந்தன. இவை மட்டுமல்ல தற்போதைய இந்த நாட்டு பொருளாதார நெருக்கடி நிலைமையிலிருந்து மீள உள்ளூர் உற்பத்திகளின் பல்வேறு பொருட்களின் உதவிகளைப் பெற முடியும். இதையே நானும் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்துள்ளேன். ஆனால் அதற்கான ஏற்பாடுகள் இதுவரையில் மேற்கொள்ளப்பட்டதாகவே இல்லை.

இறக்குமதிகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் தற்போது பேசப்படுகின்றது. இது உங்களால் எந்தளவுக்கு சாத்தியமாகும் எனக் கூற முடியாது. அதற்குரிய அடிப்படை ஏற்பாடுகள் இந்த நாட்டில் அத்திவாரமாகக் கூட இன்னும் உருப்பெறாத நிலையே காணப்படுகின்றது.

இது 1970ல் இந்த நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இருந்தும் பிற்காலமானது அதை நிராகரித்திருந்த பயணத்தை ஆரம்பித்துத் தொடர்ந்ததால் அதனது பயன்பாடு இந்த நாட்டுக்கு போதியளவில் கிட்டவில்லை என்றே கருத வேண்டியுள்ளது.

ஆனால் 1997ல் இது மலேசியாவில் சாத்தியமானது. அமெரிக்க பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து பொருளாதார ரீதியில் முன்னேறி இன்று தனது நாட்டுப் பொருட்களை உலக நாடுகள் கொள்வனவு செய்யக்கூடிய வகையிலான வழிவகைகளை இத்திட்டம் ஏற்படுத்திக் கொடுத்தது. சுமார் 6 வருட காலம் இறக்குமதிகள் நிறுத்தப்பட்டு தேசிய உற்பத்திகள் வலுப்படுத்தப்பட்டன. மலேசியா அன்று முன்னெடுத்திருந்த இத் திட்டம் அந்நாட்டு மக்களின் அங்கீகாரத்துடன், அர்ப்பணிப்புகளுடன் மேற்கொள்ளப்பட்டதால் அது வெகுவாகவே சாத்தியமடைந்திருந்தது.

இந்த நாட்டில் உள்ளூர் உற்பத்தியாளர்கள் நடுத் தெருவுக்கு வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். உற்பத்திகள் உறங்கிக் கொண்டிருக்கின்றன. இறக்குமதிகள் நிறைந்து கொண்டிருக்கின்றன.

நாட்டிலே ஏற்றுமதி உற்பத்தி வலயங்கள் தொடர்பில் அதிகளவு அக்கறையில்லாத நிலைமையே காணப்படுகன்றது. தீப்பெட்டி தொழிற்சாலைகளைக்கூட மூடுமளவுக்குக் கொண்டு வந்தாகிவிட்டது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் 2018ஆம் ஆண்டின் அரையாண்டு அரசிறை நிலைமை தொடர்பான அறிக்கை பற்றிய சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts:

முகமாலை பகுதியில் மிதிவெடிகளை அகற்றும் பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டியது அவசியமாகும்! டக்ளஸ் தேவான...
நற்பண்புகள் சொல்லில் மட்டுமல்ல செயலிலும் காட்டப்படவேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
கோவிலாக்கண்டி கடற்கரையில் பொழுதுபோக்கு மையம் - பொருத்தமான இடம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

பலாலி விமான நிலையப் புனரமைப்புப் பணிகள் தற்போது என்ன நிலைமையில் இருக்கின்றன? - மன்றில் டக்ளஸ் தேவானந...
ஆணைக்குழுக்களின் உருவாக்கம் என்பது நாட்டின் முன்னேற்றம் கருதியதானதாக அமைய வேண்டும் - டக்ளஸ் தேவானந்த...
யுத்தகாலத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு விரையில் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் - அமைச்சர...