தேசியம் பேசி வெற்றிகளை அபகரித்துக் கொள்பவர்கள் வழியில் சென்று இனி ஒரு தடவையேனும் ஏமாறாதீர்கள் – முல்லைத்தீவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, December 27th, 2019

தேர்தல் காலங்களில் தேசியம், சாதி, கூட்டு என்று கூறிக்கொண்டு மக்களிடம் வாக்கு கேட்டு வெற்றிகளை அபகரித்துக் கொள்பவர்கள் வழியில் எதிர்காலத்திலும் எமது மக்கள் செல்வார்களேயானால் அவர்களின் வாழ்வுநிலை மேலும் அதலபாதாளத்திற்கு செல்லும் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாவட்டத்தில் பலதரப்பட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ள நிலையில் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேள் நிகழ்வில் கலந்துகொண்டு மக்களது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டபின் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்ககையில் –

தமது தேர்தல் வெற்றிக்காக மட்டும் மக்களிடம் வரும் சக தமிழ்க் கட்சியினர் தேசியம் சாதி கூட்டு என்று கூறிக்கொண்டு ஆணை கேட்டபார்கள். அதுமாத்திரமன்று நடைமுறைச் சாத்தியமற்ற விடயங்களை எல்லாம் தேர்தல் வாக்குறுதிகளாக வழங்கி அதனூடாக மக்களின் வாக்குகளை அபகரித்துக் கொள்ளுகின்றார்கள். இதனூடாக அதிகப்படியான  நாடாளுமன்ற உறுப்புரிமைகளை வென்றெடுப்பது மட்டுமன்றி மாகாணபையின் ஆட்சி அதிகாரங்களையும் கடந்த காலங்களில் கைப்பற்றியிருந்தார்கள்.

குறிப்பாக மலர்ந்தது தமிழர் அரசு என் கூறி வடக்கு மாகாண சபையின் அதிகாரத்தை பெற்றவர்கள் அதன் 5 வருட காலப்பகுதியில் எதனையும் செய்து முடிக்காத நிலையில் அந்த ஆட்சியை கைப்பற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பினரே இன்று மாகாணசபையின் ஆட்சியை தாமே வீணடித்துவிட்டதாக கூறுகின்றார்கள்.

அதுமட்டுமல்லாது நல்லாட்சி அரசை தாமே ஆட்சி மாற்றத்துடன் கொண்டுவந்ததாகவும் அதனூடாக பல விடயங்களை மக்களுக்காக செய்து முடிப்போம் என்று கூறியவர்கள் இறுதியாக எதனையும் செய்து முடிக்காத நிலையில் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் ஏதிலிகளாக நடுத்தெருவில் விட்டுள்ளார்கள்.

அந்தவகையில் இனிவரும் காலத்திலாவது மக்கள் எம்மை நம்பி எமக்கு வாக்களித்தால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அனைத்துக்கும் நாம் தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம் என்றும் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  நாம் எப்போதும் நடைமுறைச் சாத்தியமான விடயங்களையும் மக்கள் எதிர்கொண்டுவருகின்ற அடிப்படை மற்றும் வாழ்வாதார பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் நோக்கிலேயே கடந்த காலங்களிள் செயற்பட்டுமிருக்கின்றோம். தற்போதும் அதையே முன்னெடுத்து வருவதுடன் இனியும் செயற்படுவோம் என்றும் தெரிவித்தார்.

Related posts: