தெளிவற்ற வரிச் சுமையை மக்களே சுமக்கின்றனர் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Thursday, September 20th, 2018

‘ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணல்’ எனச் சொல்வார்கள். அந்த வகையில்தான் இந்த நாட்டின் வரி விதிப்புகள் இருக்கின்றன என்றே கருத வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளை, மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான கட்டளைகள், பொருளாதார சேவை விதிப்பனவு மற்றும் பெறுமதி சேர் வரி தொடர்பிலான சட்டமூலங்கள் தொடர்பில் இடம்பெறுகின்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் –

முறையான பொருளாதார கொள்கை இல்லாததன் காரணமாக, கண்ட, நின்ற அனைத்திற்கும் வரி விதிப்புகள் எனத் தொடர்வதையே இங்கு சுட்டிக்காட்ட வேண்டியிருக்கின்றது. வரி அறவீடுகள் தொடர்பான சட்டமூலங்களை நீங்கள் கொண்டு வருவதும், அவை தொடர்பில் இங்கே விவாதிக்கப்படுவதும், பின்னர் அவை நிறைவேற்றப்பட்டுவிடுவதும் இங்கே வாடிக்கையான நிகழ்வாகவே தொடர்ந்திருநதாலும், இந்த வரிகளின் சுமைகளால் எமது மக்கள் அனுபவித்து வருகின்ற துன்ப, துயரங்கள் பற்றி எவரும் அலட்டிக் கொள்வதாக இல்லை.

அண்மையில் மாவின் விலை கிலோவுக்கு 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, மறுநாளே 450 கிராம் பாணின் விலையும் 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு விட்டது. தற்போது ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. இந்த நாட்டில் முறையான திட்டம் இல்லாததால் மேற்படி உற்பத்திப் பொருட்களின் நிறை தொடர்பில் பாரிய பிரச்சினைகள் இருப்பதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். நுகர்வோரைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரச் சபை, முறையாகச் செயற்பட்டு, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாததாலேயே இந்த நிலை உருவாகியுள்ளதாகவும் பேக்கரி உரிமையாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இதனைப் பார்க்கின்றபோது, அதிகார சபைகள் உருவாக்கப்பட்டு, அவற்றில் பணியாற்றுகின்றவர்களுக்கு ஊதியங்கள், ஏனைய கொடுப்பனவுகள் உள்ளிட்ட அனைத்து செலவீனங்களையும் மக்களது பணத்திலிருந்து வழங்கப்பட்டு வந்தாலும், அவை மக்களது நலனில் அக்கறை கொண்டு செயற்பாடாத நிலையே காணப்படுகின்றது. இதனால், அதற்கும் நட்டஈடு செலுத்துகின்ற நிலை எமது மக்களுக்கே ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், சீனியின் இறக்குமதி வரியும் 12 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிய வருகின்றது. இதனால், சில்லறை விலையில் மாற்றங்கள் ஏற்படாது என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளதாகவும் தெரிய வருகின்றது. இதை எல்லாம் நம்புகின்ற நிலையில் இந்த நாட்டு மக்கள் இருக்கின்றார்களா? என்பது ஒருபுறமிருக்க, எரிவாயுவின் விலையையும் 190 ரூபாவினால் அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகத் தெரிய வருகின்றது. வாழ்க்கைச் செலவுக் குழு இதற்கான பரிந்துரையை செய்திருப்பதாகத் தெரிய வருகின்றது. உண்மையில் இப்படியொரு குழு செயற்படுவது குறித்து எமது மக்கள் உணர்ந்திருப்பதற்கு வாய்ப்புகள் இருக்காது என்றே – நாளுக்கு நாள் அதிகரிக்கின்ற பொது மக்களின் வாழ்க்கைச் செலவீனங்கள் தொடர்பில் ஆராய்கின்றபோது தெரிய வருகின்றது.

இந்த நாட்டில் பொருளாதாரத்துறையினை மேம்படுத்துவதற்கு ஏற்றவாறான தேசிய பொருளாதாரக் கொள்கை இன்மையும், ஏற்படுத்தப்படுகின்ற பொருளாதாரக் கொள்கைகளில்கூட தொடர்ச்சியின்மைகள் ஏற்படுவதும் காரணமாக இந்த நாட்டின் பொருளாதாரம் இன்று மிகவும் அபாயமானதொரு காலகட்டத்தை எட்டியுள்ளது.

இந்தக் கட்டமைப்பினை சீர் செய்யாமல், வெறுமனே எடுத்ததற்கெல்லாம் வரிகளை அதிகரித்து, பொருட்களின் விலைகளை அதிகரித்து, அதன் மூலமாக பொருளாதாரத்தினை சரி செய்து கொள்ளலாம் என எதிர்பார்ப்பதானது, எமது மக்களை உயிரோடு படுகுழிக்குள் தள்ளிவிட்டு, மண் அள்ளி மூடுவதை ஒத்த செயலாகும் என்பதையே இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

Related posts: