தெல்லிப்பழை புற்று நோய் வைத்தியசாலையில் காணப்படும் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்!

Monday, December 4th, 2017

 

தெல்லிப்பளை புற்று நோய் வைத்தியசாலைக்கு 2015ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட 1000 மில்லியன் ரூபா நிதி இன்னமும் முழுமையாக செலவு செய்யப்படாமல் உள்ளதாகத் தெரிய வருகின்றது. அந்த நிதியை முழுமையாக செலவிட்டு அங்குள்ள தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டிய நிலை காணப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தர்மபுரம் முழங்காவில் வைத்தியசாலைகளுக்கு நிரந்தரமான வைத்தியர்கள் இல்லாத நிலை காணப்படுகின்றது. முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலையில் தாதியர் விடுதிகள் இல்லாத நிலை பொது மற்றும் சத்திர சிகிச்சை நிர்ணர்கள் தட்டுப்பாடுகள் நிலவுகின்றன. வவுனியா வைத்தியசாலையை எடுத்துக் கொண்டால் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியத் தேவை இருக்கின்றது. மேலும் சிறுநீரக நோயாளர்கள் மிகவும் அதிகரித்துள்ள மாவட்டமாக வவுனியா மாவட்டம் வடக்கு மாகாணத்தில் காணப்படுவதால் செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் அதற்கான வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டிய அவசியமும் தற்போது ஏற்பட்டுள்ளது. மன்னார் வைத்தியசாலையை எடுத்துக் கொண்டாலும் பழைமையான கட்டிடங்கள் புனரமைக்கப்பட வேண்டிய தேவைகள் இருக்கின்றன. கடல் மட்டத்தைவிட தாழ்வான பகுதியில் இவ் வைத்தியசாலை அமைந்திருப்பதன் காரணமாக மழைக் காலங்களில் பொது மக்கள் பாரிய சிரமங்களுக்கு உட்படுகின்ற நிலை ஏற்படுகின்றது. அந்த வகையில் நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளன. மேலும் தரமுயர்த்தப்படவுள்ள முருங்கன் வைத்தியசாலைக்கும் அடிப்படை வசதிகளின் தேவை இருக்கின்றன.

தற்போது வடக்கில் டெங்கு நோய் தொற்று அதிகரித்துக் காணப்படுவதாலும் மழைக் காலம் ஆரம்பித்துள்ளதாலும் இத்தகைய நோய்களின் தாக்கங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதாலும்இ ஆய்வுகூட நிபுணர்களின் தேவை அதிகமாக உள்ளதால் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத் தேவையும் உண்டு.

அந்த வகையில் யாழ் போதனா வைத்தியசாலை உட்பட வடக்கு மாகாணத்தில் செயற்பட்டு வருகின்ற வைத்தியசாலைகளில் தற்போது நிலவுகின்ற பிரச்சினைகளில் முக்கியமான பிரச்சினைகள் தொடர்பில் இங்கு சுட்டிக்காட்டியுள்ளேன். கௌரவ அமைச்சர் அவர்கள் தனது அவதானங்களை இது தொடர்பில் செலுத்துவார் என நம்புகின்றேன். அவர் வடக்கு மாகாணத்திற்கு பல தடவைகள் நேரில் வந்து அங்குள்ள நிலைமைகளைக் கண்டறிந்தவர் என்ற வகையில் எமது பகுதியின் சுகாதாரத்துறை மேம்பாட்டிற்கு மேலும் உதவுவார் என்ற எதிர்பார்ப்பு எமது மக்களிடையே இருக்கின்ற

வடக்கு மாகாண சபையானது அக்கறையின்மை ஆற்றலின்மை முயற்சிகளின்மை காரணமாக இத்தகைய தேவைகள் மற்றும் பிரச்சினைகள் அதிகரித்துள்ள நிலையில் இவற்றை நிவர்த்திக்கின்ற வகையில் கௌரவ அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்கள் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி இத் தேவைகள் மற்றும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன் – என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய தினம் சுகாதார போசணை சுதேச மருத்துவம் மற்றும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சு ஆகிய இரு அமைச்சுக்கள் தொடர்பான குழநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts: