தெற்கில் தொழில்துறை போராட்டம் வடக்கில் வாழ்வுக்கான போராட்டம் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.

Thursday, August 23rd, 2018

தென்னிலங்கையில் தொழில்சார் உரிமைகளுக்கான போராட்டங்கள், துறைசார் போராட்டங்கள் என இடம்பெற்று வருகின்ற நிலையில், வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் வாழ்வு சார்ந்த போராட்டங்களே தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்ற நிலையில், பல்வேறு ஆக்கிரமிப்புகளும், அட்டூழியங்களும், அபகரிப்புகளும் தொடரந்தவண்ணமே இருக்கின்றன என நாடாளுமன்றில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்

நாடாளுமன்றில் இன்றையதியதினம் மதுவரி திருத்தச் சட்டமூலம், அமரதேவ அழகியல் மற்றும் ஆராய்ச்சி நிலையச் சட்டமூலம், 1989ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க உற்பத்தி வரி விஷேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழான விவாதத்தில் கலந்துகொண்ட உரையாற்ஞறுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டங்களும் தொடர்வதையே கடந்த 21ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற பல்கலைக்கழக மாணவர்களது போராட்டம் எடுத்துக் காட்டுகின்றது. அதற்கு முந்தையதாக புகையிரதத் துறை சார் போராட்டம், தனியார் பஸ் சாரதிகளின் போராட்டம், மருத்துவர்களது போராட்டம், தபால் துறை ஊழியர்களது போராட்டம் என தொடர்ந்திருந்த நிலையே காணப்பட்டது.இன்றும் கூட கடற்றொழிலாளர்கள் தங்களுக்கான எரிபொருள் மானியம் கேட்டு கொழும்பில் ஜனாதிபதியின் செயலகத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்றே தெரியவருகின்றது

எமது மக்களின் வாழ்வுக்கான உரிமைகள் நேரடியானதும், மறைமுகமானதுமான மறுதலிப்புகளுக்கு உட்படுத்தப்பட்டும், விருப்பமின்மை, அக்கறையின்மை மற்றும் ஆளுமையின்மை காரணமாக புறக்கணிக்கப்பட்டும் வருகின்ற செயற்பாடுகள் இன்றைய – நேற்றைய முயற்சிகளாக அல்லாமல், இத்தகைய முயற்சிகள் சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டம் முதல் தொடர்ந்து வந்ததாலேயே கடந்த சுமார் முப்பது வருட கால அழிவுகளுக்கு அவை வித்திட்டிருந்தன.

அந்த அழிவுகளுக்கு வித்திட்ட காரணிகள் அறியப்படாமலும், அறியப்பட்டும் அவை களையப்படாமலும் நகர்த்தப்பட்டு வருகின்ற கால நகர்வுகளுக்கு மத்தியில் எமது மக்களது வாழ்வு மீதான பன்முக ஒடுக்குமுறைகள் தொடர்கின்றன என்றே கூற வேண்டியுள்ளது.

இத்தகைய நிலைமையினுள் எமது மக்களது வாழ்வாதார மற்றும் பொருளாதார பிரச்சினைகள் தொடர்பிலான கோரிக்கைகள் போராட்ட வடிவங்களைப் பெறாமலேயே தற்கொலை முயற்சிகளில் தங்கிவிடுகின்ற நிலைமைகளும், அவற்றை மூடி மறைக்கின்ற உபாயங்களான மது பாவனையை அதிகரித்தல் – போதைப் பொருளுக்கான அதிக விற்பனை வாய்ப்பு போன்ற அணுகுமுறைகள் எமது பகுதிகளில் பாரிய சமூக – கலாசார சீர்கேடுகளுக்கும் வழிவகுத்து விட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:


சம்பூரில் காணி, நிலங்களை விடுவித்தோம் என மார்தட்டிக் கொள்வதில் பயனில்லை மக்கள் மீள்குடியேற என்ன செ...
ஊர்காவற்றுறை மக்களது குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தர தீர்வு: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடி...
கூட்டமைப்பின் தடையினால் வெடுக்குநாரி விவகாரத்தை தீர்க்க முடியவில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதங்...