துறைமுகம் அமைக்கப்பட்டால் மக்களின் வாழ்வியல் பறிபோகும் – டக்ளஸ் தேவானந்தாவிடம் கடற்றொழிலாளர்கள் சுட்டிக்காட்டு!
Monday, April 24th, 2017பருத்தித்துறை கொட்டடிப் பகுதியில் துறைமுகம் நிர்மாணிக்கப்படும் பட்சத்தில் 200ற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக பருத்தித்துறை நகர கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க வளாகத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுடன் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.
கொட்டடி கடற்கரையோர பகுதியில் அரசினால் உத்தேசிக்கப்பட்டுள்ள துறைமுகம் அமைக்கப்படும் பட்சத்தில் அங்கு தொழில் புரியும் 200ற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் படகுகளை கட்டுவதில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும், அதுமட்டுமன்றி கடற்றொழிலை தமது வாழ்வாதார தொழிலாளாக கொண்டிருக்கும் கடற்றொழிலாளர்களுக்கு இது பாரியதொரு பாதகமான சூழலை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் குறித்த கடற்கரை பகுதியில் 15ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அங்கு துறைமுகம் அமைக்கப்படும் பட்சத்தில் அந்த மக்களுக்கான நிரந்தர வதிவிடங்களை பெற்றுக்கொடுப்பதிலும் அவர்கள் தொழில்துறை நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதனிடைய குறித்த பகுதியில் உள்ள நடராஜா அரங்கு உட்பட்ட கடற்கரை பகுதியின் விசாலமான பகுதி இந்தத் துறைமுக நிர்மாணத்திற்காக உள்வாங்கப்படும் பட்சத்தில் தமது கலை கலாசார விழாக்கள் மற்றும் நிகழ்வுகளைக் கூட அரங்கேற்றவதற்கு உரிய அரங்கு இல்லாதொரு சூழலும் உருவாகும் நிலை உள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|