துப்பாக்கியால் எமது மக்கள் பட்டபாடு போதும் மாற்று வழியை சிந்தியுங்கள்: அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை!
Monday, August 24th, 2020துப்பாக்கிகளைப் பயன்டுத்தியதால் எமது மக்கள் கடந்த காலங்களில் எமது மககள் பட்டபாடுகள் அனைத்தும் போதும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மாற்று வழியை ஆராயுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் பெருமளவான காணிகள் பல்வேறு திணைக்களங்களினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றை விடுவித்து அடுத்த போகத்திற்கான பயிர்செய்கையை ஆரம்பிக்க வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர், அதற்காகவே குறித்த மீளாய்வுக் கூட்டம் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் முன்னாய்வு கூட்டம் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிலையில் அமைச்சரினால் குறித்த கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற குறித்த முன்னாய்வு கூட்டத்தில், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்துரையாடப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.
இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் குரங்குத் தொல்லைகள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்ட போது, சிறிய ரகத் துப்பாக்கிகளை விவசாயிகளுக்கு வழங்குவதன் மூலம், பயிர்செய்கைகளுக்கு நாசம் விளைவிக்கும் குரங்குகளை கட்டுப்படுத்த முயற்சிக்கலாம் என்று சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்ட போதே மேற்குறித்த கருத்தினை தெரிவித்த அமைச்சர், மாற்று வழிகள் தொடர்பாக ஆராயுமாறு தெரிவித்தார்.
அத்துடன், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை என்பவற்றின் அடிப்படையில், பயன்படுத்தப்படாமல் இருக்கின்ற காணிகளில் விவசாய நடவடிக்கைகளை மேற்காண்டு விவசாயத்தில் தன்னிறைவு எட்டுவதே நோக்கமாக இருககின்ற நிலையில் வன வளத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் போன்றவற்றினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள காணிகளை பயிர் செய்கைக்கு பயன்படுத்துவதற்கு ஜனாதிபதியின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்பதாக கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவிற்கான முன்னாய்வுக் கூட்த்தினை நடத்துவதற்காக கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கிளிநொச்சி அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டார்.
இந்நிலையில் கிளிநொச்சி, ஆணைவிழுந்தான் கமக்கார அமைப்பின் அழைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு இணை தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதேச மக்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.
இதன்போது எங்களுக்கு சொந்தமான நிலங்களில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதியை பெற்றுத்தாருங்கள் என்று தெரிவித்துள்ள கிளி. ஆணைவிழுந்தான் கிராம அபிவித்தி சங்கத்தின் முன்னாள் தலைவர் விஜயராஜா, தங்களது கிராமம் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவதாகவும், எதிர்காலத்திலாவது கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமது தேவைகளை நிறைவேற்றித் தரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|