தீராப் பிரச்சினைகளுக்கு உரிய வகையில் தீர்வு காணப்படவேண்டும் என்பதில் அக்கறையுடன் உழைத்து வருகின்றோம் – டக்ளஸ் எம்.பி.தெரிவிப்பு!

நாட்டுப்பற்றாளர்கள் தாமே எனக் கூறிக் கொண்டு மக்களின் வாக்குகளை அபகரித்தவர்களால் இது வரையில் எவ்விதமான மக்கள் நலன் சார்ந்த திட்டங்களையும் முன்னெடுக்க முடியாதுள்ளமைக்கு அவர்களது ஆற்றலற்ற அக்கறையற்ற தன்மையே பிரதான காரணங்கள் என டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகைதந்த மக்கள் பிரதிநிதிகளுடனான சமகால கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
தாமே நாட்டுப்பற்றாளர்கள் எனக் கூறிக் கொண்டும் போலித் தேசியவாதம் பேசிக் கொண்டும் மக்களை உசுப்பேற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் உரிய அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை.
இதற்குக் காரணம் அவர்களுக்கு மக்கள் மீதான அக்கறையோ மக்கள் நலன் சார்ந்த செயற்திட்டங்களை முன்னெடுக்கக் கூடிய ஆற்றல்களையோ அவர்கள் கொண்டிருக்கவில்லை. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் மக்களிடம் காணப்படும் பிரச்சினைகளை தீராப் பிரச்சினைகளாக வைத்துக் கொண்டு அதனூடாக தமது சுயலாப அரசியலையும் சுகபோகத்தையும் அனுபவிக்கவே விரும்புகின்றனர்.
ஆனால் நாம் மக்களின் தீராப் பிரச்சினைகளுக்கு உரிய வகையில் தீர்வுகளைக் காண வேண்டும் என்பதிலேயே எப்போதும் அக்கறையுடன் உழைத்து வருகின்றோம். அந்த வகையில் தான் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் மக்கள் எமக்கு வாக்களித்து எம்மை வெற்றி பெற வைப்பார்களேயானால் நிச்சயம் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை காணமுடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|