திலீபன் உட்பட புலித் தலைவர்களின் உறவினர்கள் அவர்களை நினைவு கூருவதற்கான உரிமையை மதிக்கின்றேன் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, January 20th, 2021

ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட போராளி என்ற அடிப்படையில் திலீபன் உட்பட புலித் தலைவர்களின் உறவினர்கள் அவர்களை நினைவு கூருவதற்கான உரிமையை மதிக்கின்றேன். ஆனால் புலித் தலைமைகளின் தவறான வழிநடத்தல் மற்றும் தீர்மானங்களால் தமிழ் மக்களுக்கும் ஆயுதமேந்தி உரிமைக்காக போராடிய ஏனைய அமைப்புகளுக்கும் ஏற்படுத்தப்பட்ட அழிவுகளையும் இழப்புகளையும்  ஏற்றுக்கொள்ள முடியாது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொதுவான நினைவு தூவி ஒன்று அமைக்கப்பட்டு அதில் பொதுவான நினைவு நாள் ஒன்றில் ஆயுதப் போராட்டத்துடன் தொடர்புடைய அனைவரும் நினைவு கூரப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. அதற்கான முயற்சிகளை நான் முன்னெடுத்து வருகின்றேன் எவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலின்போது பொதுவான நினைவு நாள் ஒன்றில் ஆயுதப் போராட்டத்துடன் தொடர்புடைய அனைவரும் நினைவு கூரப்பட வேண்டும் என்கிறீர்கள். ஆனால் கடந்த முறை திலீபனின் நினைவு தினம் தொடர்பாக காட்டமான கருத்துக்களை வெளியிட்டிருந்தீர்கள். இங்கே ஒரு முரண் நிலை காணப்படுகின்றதே என வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

உங்களுக்குத் தெரியும் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப கால உறுப்பினர்களில் நானும் ஒருவன். எனவே புலிகளின் அமைப்பு சார்பாக உயிரிழந்தவர்களின் தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும்  மதிக்கின்றேன்.  ஆனால் அந்த தியாகங்கள் புலித் தலைமைகளின் தவறான வழிநடத்தல் மற்றும் தீர்மானங்கள் காரணமாக தவறாக வழிநடத்தப்பட்டு விட்டது என்பதுதான் என்னுடைய கோபம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன்டன் இலங்கை – இந்திய ஒப்பந்த்தின் பின்னர் மாறிய சூழலை கருத்தில் கொண்டு சரியான தீர்மானங்களை மேற்கொண்டிருந்தால் இந்தளவு அழிவு ஏற்பட்டிருக்காது. அதற்கு பின்னர் ஏற்பட்ட அழிவுகளை கடந்த 11 வருடங்களில் மீள உருவாக்க முடியவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும்  தற்போது இலங்கை வந்திருந்த இந்திய வெளிநாட்டு அமைச்சரை சந்தித்த கூட்டமைப்பினர் நிலைமையை புரிந்து கொண்டு தங்களுடைய சுருதியை மாற்றி மாகாண சபை முறை பற்றி பேச ஆரம்பித்திருக்கின்றார்கள். இதேபோன்றுதான் அப்போதும் இந்தியாவினால் அனைத்து தரப்பினருக்கம் தெளிவான பல விடயங்கள் சொல்லப்பட்டன. ஆனால் புலித் தலைமை அதனை கணக்கில் எடுக்காமல் மக்களுக்கு தவறான பிம்பங்களை காட்டியதன் விளைவைத்தான் தற்போதும் நாம் எதிர்கொள்ளுகின்றோம்.

அத்தோடு பொறுப்புக்கூற வேண்டிய புலித் தலைமைகளின் பட்டியலில் திலீபனும் அடங்கும். என்னால் உருவாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஈ.பி.ஆர்.எல்.எப். போராளிகளிகளையும் ஏனைய இயக்கப் போராளிகளையும் உயிரோடு எரித்துக் கொலை செய்வதற்கான உத்தரவிட்டு சகோதரப் படுகொலைகளுக்கு காரணமாக இருந்த ஒருவனை தியாக தீபம் என்றும் அகிம்சாவாதி என்றும் சொல்வதற்கு என்ன அருகதை இருக்கின்றது? அதைத்தான் நான் தெரிவித்திருந்தேன்.

அதாவது திலீபனின் செயற்பாடுகளின் அடிப்படையில் என்னுடைய கருத்துக்களை தெரிவித்திருந்தேனே தவிர தமிழ் மக்கள் சார்பில் உருவாக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட போராளி என்ற அடிப்படையில் நினைவு கூரப்படுவது தொடர்பாக எனக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் கிடையாது. அதேபோன்று திலீபன் உட்பட்ட புலித் தலைவர்களின் உறவினர்கள் அவர்களை நினைவு கூருபவதற்கான உரிமையையும் மதிக்கின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


எமது கலாசார விழுமியங்களை மென்மேலும் வளர்த்தெடுக்க என்றும் துணை நிற்பேன் - கலைஞர் கௌரவிப்பு நிகழ்வில்...
வடக்கு - கிழக்கிற்கு சமச்சீரற்ற விசேட அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந...
மன்னார் புதைகுழியில் அதன் உண்மையையும் புதைத்துவிடாதீர்கள் - டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் சுட்டிக்காட...