திறமையானவர்களுக்கு உரிய சந்தர்ப்பங்கள் வழங்கப்படுவதில்லை – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, May 22nd, 2019

விளையாட்டுத் துறையைப் பொறுத்தவரையில் ஊக்கவிப்புப் பதார்த்தங்கள் பயன்பாடு என்பது இன்றைய நிலையில் உலக நாடுகளில் ஒரு பெரும் பிரச்சினையாக இருக்கின்ற நிலையில், இலங்கை மேற்பபடி சமவாயச் சட்டத்தை கொண்டுவந்திருப்பது வரவேற்கத்தக்கது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற 2013ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க விளையாட்டுத்துறையில் ஊக்குவிப்பு பதார்த்த பயன்பாட்டிற்கு எதிரான சமவாயச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டபின் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

2016ஆம் ஆண்டில் இந்த நாட்டில் தடைசெய்யப்பட்ட ஊக்குவிப்பு பதார்த்தங்கள் உட்கொண்டிருந்த 5 விளையாட்டு வீரர்கள் இனங்காணப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது. தற்போதைய நிலைமையிலும்கூட ஊக்க மருந்து பாவனை என்பது எமது விளையாட்டு வீரர்களிடையே அதிகரித்து வருவதாகவும் தெரிய வருகின்றது.

அண்மையில்கூட சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டிருந்த 400 மற்றும் 800 மீற்றர் ஓட்ட வீராங்கனைகளான இருவர் மேற்படி ஊக்க மருந்து பாவனைக்கு உட்பட்டிருந்தனர் என இனங்காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இருவரும் தற்காலிகத் தடைக்கு ஆளாகியுள்ளனர் எனவும் தெரிய வருகின்றது.

இருப்பினும், தற்போது பாவனையில் இருந்து வருகின்ற பாரம்பரிய மருந்து வகைகளிலும் தடைசெய்யப்பட்டதாகக் கூறப்படுகின்ற ஊக்குவிப்புப் பதார்த்தங்களுக்குரிய தன்மைகள் அடங்கப் பெற்றிருக்கலாம். எனவே, இத்தகைய சந்தர்ப்பங்களில் அது தொடர்பில் மிகக் கவனமான கையாளுகைகள் தேவைப்படுகின்றன.

அதேநேரம், இவ்வாறு தடைசெய்யப்பட்ட ஊக்குவிப்புப் பதார்த்தங்கள் உட்கொண்ட ஒருவரை இந்த நாட்டில் வைத்து பரிசோதனை செய்வதற்குரிய வசதிகள் – உபகரணங்கள் எந்தளவிற்கு இருக்கின்றன என்பது குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என்தையும் இங்கு கேட்டுக் கொள்கின்றேன்.

இந்த நாட்டைப் பொறுத்தவரையில் அனைத்துத் துறைகளும் வீழ்ச்சி கண்டு வருகின்ற நிலையில், விளையாட்டுத்துறை எந்தளவிற்கு முன்னேறி இருக்கின்றது? எனப் பார்க்கின்றபோது, பத்தோடு பதினொன்றாகத்தான் எல்லாத்துறைகளுடன் சேர்த்து விளையாட்டுத் துறையும் காணப்படுகின்றது என்பதில் சந்தேகமில்லை என்றே எண்ணுகின்றேன்.

விளையாட்டுத் துறைகளுக்குப் பொறுப்பாக இருக்கின்ற சபைகள், கழகங்கள், சங்கங்கள் போன்றவற்றின் அதிகாரிகளாக நியமனம் பெறுகின்றவர்கள் தங்களது சுயலாபங்களுக்காக மறைமுக விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டு இருக்கின்றார்களே தவிர, திறமையான விளையாட்டு வீரர்கள் தங்களது திறமைகளைக் காட்டுவதற்கு உரிய சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொடுப்பதாகத் தெரிய வருவதில்லை என்றே மக்கள் மத்தியில் ஒரு பொதுவான கருத்து நிலவுகின்றது.

எனவே, ஊக்குவிப்புப் பதார்த்த தடையுடன் மறுபக்கத்தில் விளையாட்டுத்துறையை ஊக்குவிக்கக் கூடிய யதார்த்தங்கள் குறித்தும் மிக அதிகளவிலான அவதானங்களை மேற்கொள்ள வேண்டும்.

இந்த நாட்டில் விளையாட்டுத் துறையானது எவ்வாறு வகுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் இதுவரையில் 5 அறிக்கையில் தயாரிக்கப்பட்டுள்ளன என நினைக்கின்றேன்.

1971ஆம் ஆண்டில் குணவர்தன ஆணைக் குழு அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது. 1988ஆம் ஆண்டில் ஹயின் கொமிட்டி அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது. 1996ஆம் ஆண்டில் விளையாட்டு அபிவிருத்தி தொடர்பிலான மகாநாட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது.. அதன் பின்னர் 2001ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய விளையாட்டுத்துறை நிபுணரான பேராசிரியர் ஜோன் பு@ம்பீல்ட் ஓர் அறிக்கையினைத் தயாரித்திருந்தார்.

இந்த அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டிருந்த வகையில் இந்த நாட்டு விளையாட்டுத் துறை வகுக்கப்படவில்லை என்ற நிலையில், இறுதியாக 2018ஆம் ஆண்டு இலங்கையின் கணக்காய்வாளர் நாயகமாக இருந்த காமினி விஜேசிங்க அவர்கள் ‘இலங்கையின் விளையாட்டுத் துறையும், அதன் நிர்வாகமும்’ தொடர்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: