திட்டங்களுக்கு சிங்களப் பெயர்கள் சிறுபான்மை மக்களுக்கு பயனில்லை – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, March 10th, 2019

தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பப்போவதாக கூறிக்கொண்டு, அரசாங்கம் அறிமுகப்படுத்தும் திட்டங்களுக்கு சிங்களத்திலேயே பெயரிட்டு வருவது சிறுபான்மை இனங்களை அவமதிக்கும் செயலாகும் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, கம்பெரலிய, சுவசெரிய, கம்உதாவ, சுறக்ஷ போன்ற பெயர்களிலான பல திட்டங்கள் தொடர்பாக சிறுபான்மை மக்களுக்கு தெளிவற்ற நிலையும், அவற்றின் அர்த்தங்களைத் தெரிந்து கொள்ளமுடியாத நிலையுமே தொடர்கின்றது.
இந்த நிலையில் அந்தத் திட்டங்கள் ஊடாக உரிய பலாபலன்களையும், நன்மைகளையும் சிறுபான்மை மக்கள் பெற்றுக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால், புரியாத பெயர்களோடு அரசு அறிவிக்கும் திட்டங்கள் வெற்றியளிக்காமலே போகின்றன.
மக்கள் நலத்திட்டங்கள் என்று கூறும் அரசாங்கம் திட்டங்களின் பெயர்களை சிறுபான்மை மக்களும் தெரிந்துகொள்ளும் வகையில் பொறுத்தமான தமிழ்ப் பெயர்களையும் வெளிப்படுத்துவதன் ஊடாகவே திட்டங்களின் தரமான பயனை மக்கள் பெற்றுக்கொள்வார்கள்.
உதாரணத்திற்கு கம்பெரலிய திட்டத்தை சிறுபான்மை மக்கள் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை. அந்தத் திட்டத்தையும், அதன் உள்ளடக்கத்தையும் மக்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பதால், வடக்கு, கிழக்கில் குறிப்பாகத் தமிழ் மக்கள் கம்பெரலிய திட்டத்தை அறியாதிருப்பதால், கம்பெரலிய திட்டத்தை அரசியல் வேலைத்திட்டமாகவும், அரசியல் வாதிகளின் தயவிலேயே கம்பெரலிய திட்டத்தின் பயன்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் நம்பும் நிலையே ஏற்பட்டுள்ளது.
“அபிவிருத்தி வேண்டாம். அரசியல் தீர்வே வேண்டும்” என்று கூறிவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தற்போது தமிழ் மக்களுக்கு வழங்கிய எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றமுடியாத நிலையில் குறிப்பாக அரசியல் தீர்வையும் பெற்றுக்கொடுக்க முடியாத நிலையில், தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்ளும் போராட்டமாக அபிவிருத்தி தொடர்பாக பேசத் தொடங்கியுள்ளார்கள்.
அதற்காக அரசின் கம்பெரலிய திட்டத்தை அபிவிருத்தி என்ற பெயரில் தமது கைகளில் எடுத்துக் கொண்டு அதற்குள்ளே அதிகாரத்து~;பிரயோகத்தையும், மோசடிகளையும் செய்துவருகின்றனர்.
கம்பெரலிய திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது அரசியல் நலனுக்காகவும், வாக்குகளை திரட்டிக்கொள்ளும் உள்நோக்கத்துடனுமே கையாண்டுவருகின்றனர்.
இதனால் அரசின் திட்டங்களானது வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் அதிகாரத்து~;பிரயோகம் செய்யப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர் என்றும் அந்தச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Related posts:

நற்பண்புகள் சொல்லில் மட்டுமல்ல செயலிலும் காட்டப்படவேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
இடர்பட்ட எமது மக்களின் வாழ்வை புதிய பாதையில் முன்னெடுத்துச் செல்வதே எமது நோக்கமாகும்  - முல்லைத்தீவி...
பணமோசடி செய்த சப்றா நிறுவன உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்...