தாயகத்தில் வாழும் உறவுகளின் வாழ்வியலை முன்னேற்ற புலம்பெயர் தேச உறவுகள் முன்வரவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, November 24th, 2018

புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் மக்கள் தாயகத்தில் வாழும் எமது மக்களது வாழ்வாதார மேம்பாடுகளுக்காக தமது பங்களிப்புகளை வழங்குவதனூடாக துவண்டு கிடக்கும் எமது மக்களின் வாழ்வியலை தூக்கி நிறுத்த முடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரான்ஸ் கிளை உறுப்பினர்களுடனான கலந்துரையாடலொன்று அண்மையில் நடைபெற்றது. இதில் தொலைபேசியூ
டாக கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு கூறினார் .

மேலும் அவர் தெரிவிக்கையில் –

புலம்பெயர் தேசத்தில் இன்று ஏறக்குறைய 15 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் தம்மாலான உதவிகளை செய்ய முன்வருவார்களேயானால் தாயகத்தில் வாழும் எமது மக்களின் வாழ்வியல் நிலையை முழுமையாக மாற்றியமைக்க முடியும். அதற்கான நாம் ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும்.

நாம் கற்பனையில் வாழ்பவர்கள்   அல்ல, போலி அரசியல் செய்பவர்களல்ல . யதார்த்தமாக சிந்தித்து செயலாற்றுபவர்கள். அடைய முடியாத விடயங்களை கூறி ,மக்களை உசுப்பேற்றி வாக்குகளை பெற்று நாடாளுமன்றம் சென்றுவிட்டால் மட்டும் போதும் என்று எண்ணுபவர்களல்ல .  சரியான ,சுபீடசத்துக்கான பாதையையே நாங்கள் காட்டுகின்றோம் .

தமிழ் மக்களின் அபிலாஷைகளை  பூர்த்தி செய்யக்கூடிய ,யதார்த்தமான தீர்வை நாம் அன்று   முன்வைத்தபோது அதை எள்ளி நகையாடியவர்கள் பலர் .ஆனால் அதுதான் இன்று யதார்த்தமாகியுள்ளது . அண்மைய டெல்கி பயணத்தின்போது அது நிரூபிக்கப்பட்டுள்ளது .

மக்களுடன் மக்களாக இருந்து செயற்படுபவர்கள் என்ற வகையில் ,மக்கள்  எதிர்நோக்கும் பிரச்சனைகளை நன்கு அறிந்தவர்கள் நாங்கள் .அவற்றை தீர்த்து ,மக்களின் வாழ்வாதாரத்தை பல மடங்கு உயர்த்த விரும்புகின்றோம் . எங்களுக்கு கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பங்களையும் மக்களின் உயர்ச்சிக்காக , எங்களது சக்திக்கும் அப்பாற்ப்பட்ட வகையில் பயன்படுத்தியிருக்கின்றோம் .

தேர்தல் வெற்றிக்காக இனவெறியை கக்குபவர்கள் அல்ல நாங்கள் . தேர்தல் வெற்றி ஒன்றையே நோக்காக கொண்டு  போலியான தேர்தல்  கூட்டுக்களை ஏற்படுத்துபவர்கள் அல்ல நாங்கள் .இருந்தும் ,  1994  ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து மக்கள் எம்மை தங்கள் பிரதிநிதிகளாக தொடர்ந்து   தெரிவு செய்து வருகின்றார்கள் என்றால் ,நாம் மக்களின் மனங்களிலே   வாழுகின்றோம் என்பதையும்,  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தனித்துவத்தையும்   மக்கள் உணர்ந்திருக்கின்றார்கள் என்பதுதான் அர்த்தமாகும் .

புலம்பெயர் நாடுகளில் பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் ,பண வசதி படைத்தவர்கள் என பல தரப்பட்டவர்கள் இருக்கின்றார்கள் .அவர்கள் கட்சி பேதங்களுக்கு அப்பால் எமது மக்களுக்கு எதோ ஒரு வகையில் உதவ வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் .

Related posts: