தலைமுறைகளுக்கு சொத்துச் சேர்க்கும் அக்கறை தமிழ் மக்கள் மீது இல்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Friday, July 26th, 2019

இன்று நிலையில்லாத ஓர் அரசாங்கம் இருந்து கொண்டிருக்கின்ற நிலையில், இந்த அரசாங்கத்திற்கு முன்னைய அரசாங்கங்களைப் போல் அல்லாத வகையில் நிறையவே பிரச்சினைகள் உருவாகியிருக்கின்றன. இத்தகைய பிரச்சினைகள் ஒருபுறமிருக்க, அடுத்து வரவிருக்கின்ற தேர்தலுக்கு தென்பகுதி வாக்குகளை எப்படிக் கவர்வது? என்ற சிந்தனையிலேயே தென் பகுதி அரசியல் கட்சிகள் இப்போது மும்முரமாகச் செயற்பட்டு வருகின்றன.

இத்தகையதொரு நிலையில், தென்பகுதிக் கட்சிகள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்கு முன்வருமா? என்பது குறித்துக்கூட யோசிக்கின்ற அளவுக்கு இந்த தமிழ்த் தரப்பினருக்குத் தேர்தல் ஒன்று நெருங்குகின்ற இந்தக் காலகட்டத்தில் புத்தி பேதலித்துவிட்டது என்று எடுத்துக் கொள்ளலாமா? எனச் சிலர் கேட்கின்றனர்.

அவ்வாறு புத்தி பேதலிப்பு எனப் பொதுமக்கள் நினைக்கின்ற அதே நேரம், இதையே இந்தத் தமிழ்த் தரப்பினர் புத்தி சாதுர்யம் என நினைக்கிறார்களாம் என்றும் கூறப்படுகின்றது.

அதாவது, எதுவுமே நடக்கப் போவதில்லை என்று தெரிந்தும் இப்படி ஒரு நாடகத்தை ஆடி, எமது மக்களிடம் நல்ல பெயர் வாங்க முடியும் என இவர்கள் நினைக்கிறார்களாம்.

தங்களது பல தலைமுறைகளுக்குப் பணம், சொத்துச் சேர்த்து வைப்பதில் இந்தத் தரப்பினர் காட்டும் ஆர்வத்தில் ஒரு சிறிதளவாவது எமது இந்தத் தலைமுறை மக்கள்மீது காட்டியிருந்தால், எமது மக்கள் தலை நிமிர்ந்து வாழக்கூடிய வாய்ப்பாவது கிடைத்திருக்கும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் மறுசீரமைப்பு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இந்த விவாதத்தைக் கொண்டு வந்துள்ளவர்கள், தாங்களே கொண்டு வந்ததாகச் சொல்கின்ற இந்த ஆட்சியின் – பின்னர் பலமுறை ஆட்சி கவிழாது தாங்கிப் பிடித்துக் கொண்டுள்ள இந்த ஆட்சியின் தலைவர் அண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்த சமயம், ‘தேசியப் பிரச்சினைக்கு இன்னும் இரண்டு வருடங்களுக்குள் அரசியல் தீர்வு பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும்’ எனத் தெரிவித்திருக்கின்றார்.

இதன்போது பக்கத்தில் இருந்து கொண்டே அவரைப் புகழ்ந்த இதே தமிழ்த் தரப்பினர், அவர் யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேறியதும், அவரது கூற்றை நம்ப முடியாது என ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டது வேறு கதையாகும்.

அதாவது, பெற்றுக் கொடுப்போம் என்று அல்ல, பெற்றுக் கொடுப்பது நோக்கமாகும் என்றே கூறியுள்ளார்.

ஆக, இந்தத் தமிழ்த் தரப்பினரது நம்பகரமான தலைவர் அவர்களே இன்னும் இரண்டு வருடத்தின் பின்னர்தான் அது பற்றிப் பேசப்படும் எனத் தெரிவித்துள்ளமை தெரிய வருகின்றது.

ஆகவே, தேசியப் பிரச்சினைக்கு இப்போiதைக்குத் தீர்வு சாத்தியமில்லை எனத் தெரிந்து கொண்டுதான் இந்தத் தமிழ்த் தரப்பினர் எமது மக்களை இதுவரையில் ஏமாற்றி வந்துள்ளனர் என்பது தெட்டத் தெளிவாகின்றது. எனவேதான், இந்தத் தமிழத் தரப்பினர் தீபாவளிக்குத் தீபாவளி ஏதோ தீபாவளிப் பட்டாசு போல், அரசியல் தீர்வு அடுத்த தீபாவளிக்கு வரும் – அடுத்த தீபாவளிக்கு வரும் எனக் கூறிக்கொண்டு வந்துள்ளனர் என்றே தெரிய வருகின்றது.

இன்று இந்த நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு மத்தியில், முஸ்லிம் அமைச்சர்கள் தங்களது சமூகம் சார்ந்த பிரச்சினைக்கு முன்பாக, எல்லோருமாகத் தங்களது பதவிகளை இராஜினாமா செய்து இந்த அரசுக்கு தங்களது நிலைப்பாட்டினை உணர்த்தியிருக்கின்றார்கள்.

இந்த நிலையில், முஸ்லிம் மக்களது பிரச்சினைகளை ஒரு வாரத்தில் தீர்ப்பதாக பிரதமர் உறுதியளித்திருப்பதாக ஊடகங்களில் கூறுகின்ற நிலையிலும், முஸ்லிம் அமைச்சர்கள் இன்னமும் பதவிகளை எற்காமல் இருப்பதானது அவர்களது சமூகம் சார்ந்து அவர்கள் கொண்டிருக்கின்ற அக்கறையினையே எடுத்துக் காட்டுகின்றது.

ஆனால், இந்தத் தமிழ்த் தரப்பினரின் தமிழ் மக்கள் மீதான அக்கறையின்மை காரணமாகவும், தங்களது சுயதேவைகள் மட்டுமே இவர்களது தேவை என்பதாலுமே, ஒரு வாரத்தில் முஸ்லிம்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதாகக் கூறுகின்ற பிரதமர், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இரண்டு வருடங்களின் பின்னர் யோசிப்போம் என்கிறார். இதுதான் உண்மையான நிலைமை என்றே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

Related posts: