தலைநகரின் குடிசன மற்றும் வாகன நெரிசல்களை கட்டப்படுத்த வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!

Thursday, March 28th, 2019

கொழும்பு நகருக்குள் காணப்படுகின்ற வாகன நெரிசல்களையும், குடியிருப்புகளின் நெரிசல்களையும் அவதானத்;தில் கொண்டு, உரிய மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் உணர்த்தப்பட்டு வருகின்றது. என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு, மகாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –

கொழும்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தற்போது சுமார் 3.5 மில்லியன் அளவு மக்கள் தொகை வசித்து வருவதாகக் கூறப்படுகின்றது. இதில், கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் மாத்திரம் சுமார் 7 இலட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டில் வாழ்ந்து வருகின்றனர் எனக் கூறப்படுகின்றது.
இந்த மக்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் சேரிகளிலிலேயே இன்னமும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களது வாழ்விடங்;கள் போதுமான வசதிகளை கொண்டிராததும், சுகாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய நிலைமைகளிலுமே இருக்கின்றன.
புகையிரதப் பாதையை அண்டியதாக பம்பலப்பிட்டீ, வெள்ளவத்தை பகுதிகளில் பல குடும்பங்கள் இதே நிலைமையிலேயே வாழ்ந்து வருகின்றன. இவர்களுக்கு மின்சார வசதிகள்கூட கிடையாத நிலையே காணப்படுகின்றது.
மேலும், கொழும்பில் பல இடங்களிலும் நகரப்பகுதிகளை சார்ந்து, வெளித் தெரியாத நிலையில் பெரும்பாலாக சேரிகளே காணப்படுகின்றன.
இத்தகைய மக்களுக்கு நல்ல வகையிலான வீடுகள் அமைத்து, அவர்களை அங்கங்கு குடியமர்த்துவது நல்ல முயற்சி என்றாலும், இவர்களில் பெரும்பாலானவர்களது வாழ்வாதாரங்கள் அவர்கள் தற்போது வசித்து வருகின்ற சேரிப் பகுதிகளை அண்டிய நகரங்களையே மையமாகக் கொண்டுள்ளன.
குறிப்பாக, குணசிங்கபுர, மாளிகாவத்தை, பஞ்சிகாவத்தை, புதுக்கடை, தெமட்டகொடை போன்ற பகுதிகளில் சேரிகளில் – தோட்டங்களில் வாழுகின்ற பலரும் கொழும்பு மெனிங் சந்தை, புறக்கோட்டை நடைபாதை கடைகள், மற்றும் பிராதான பஸ் நிலையம், துறைமுகம்; போன்றவற்றை மையமாகக் கொண்டு, தங்களது வாழ்வாதாரங்களை நாளாந்த ரீதியில் ஈட்டுகின்றவர்களாகவே காணப்படுகின்றனர்.
எனவே, இவர்களை வேறு இடங்களில் குடியமர்த்துகின்றோம் எனக் கூறி, தூர இடங்களில் குடியமர்த்தினால், இவர்களது வாழ்வாதாரங்கள் பாதிப்படையக் கூடும் என்பதையும் மனதில் கொண்டே இத்தகைய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.
அதேநேரம், கொழும்பு நகரில் காணப்படுகின்ற அரச அலுவலகங்களை கொழும்புக்கு வெளியில் – கொழும்பினை அண்டிய பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்படுவது நல்ல முயற்சியாகும். முன்னாள் ஜனாதிபதி, அமரர் ரணசிங்க பிரேமதாச அவர்கள் இதே கொள்கையுடனேயே அப்போது பல ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தார்.
அதேநேரம், அனைத்து அரச அலுவலகங்களையும் ஒரே பகுதியை நோக்கி நகர்த்துவதாலும், பிற்காலத்தில் இன்னொரு நெரிசல் மிக்கப் பகுதி உருவாகுவதற்கான சாத்தியம் இருக்கின்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மேல் மாகாணத்தில் தற்போது கிட்டத்தட்ட 6 மில்லியனுக்கு சற்று குறைவான சனத்தெகை இருக்கின்ற நிலையில், இன்னும் சில வருடங்களில் இத்தொகையானது மேலும் 3 மில்லியன்களால் அதிகரிக்க முடியும் எனவும் எதிர்வு கூறப்படுகின்றது.
மேலும், கொழும்பு குப்பைகளை புத்தளம், அறுவாக்காடு பகுதிக்கு கொண்டு செல்கின்ற திட்டம் தொடர்பில் அண்மையில் அதற்கெதிரான போராட்டமொன்று புத்தளம் நகரப் பகுதியிலே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஏற்கெனவே இந்த நாட்டில் குப்பை மேடு தொடர்பில் எமது மக்களுக்கு மீதொட்டமுல்லை குப்பை மேடு ஒரு பாடமாக அமைந்துள்ள நிலையில், ஒரு பகுதியிலிருந்து குப்பைகளை இன்னொரு பகுதிக்குக் கொண்டு செல்லப்படுகின்றபோது, அந்தப் பகுதி சார்ந்த மக்களின் எதிர்ப்புகள் ஏற்படுவதை நாம் இப்போது மட்டுமல்ல, இதற்கு முன்னரும் கொழும்பிலே கண்டிருக்கின்றோம்.
இந்த குப்பை பிரச்சினை மட்டுமல்ல, பொது மக்கள் சார்ந்த எந்த விடயமானாலும், அதனை மேற்கொள்வதற்கு முன்னர் மக்களுக்கு அது தொடர்பில் தெளிவூட்டல்களை மேற்கொள்ள வேண்டும் என்பதை நான் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றேன்.
அது அரசியல் யாப்பு திருத்தமாகவும் இருக்கலாம், கொழும்பு குப்பையாகவும் இருக்கலாம். அவை தொடர்பில் முதலில் மக்களுக்குத் தெளிவுபடுத்துங்கள். மக்கள் விளங்கிக் கொள்வார்கள். அதன் பின்னர் திட்டங்களை செயற்படுத்தங்கள் எனக் கேட்டுககொள்கின்றேன்.

Related posts: