தற்கொலையிலிருந்து மக்களைக் காப்பாற்ற மத்திய அரசிடமோ மாகாண அரசிடமோ உரிய திட்டங்கள் எதுவும் கிடையாது!

Monday, November 27th, 2017

தற்கொலையிலிருந்து மக்களைக் காப்பாற்ற மத்திய அரசிடமோ மாகாண அரசிடமோ உரிய திட்டங்கள் எதுவும் கிடையாது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் சமூக வலுவூட்டல் நலன்புரி மற்றும் மலையக மரபுரிமைகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் –

கடந்த கால யுத்தமானது எமது நாட்டில் ஏற்படுத்திச் சென்றுள்ள ஆழமான வடுக்கள் ஏராளம். இதன் தாக்கங்களிலிருந்து எமது வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள பெரும்பாலான மக்கள் இன்னமும் முழுமையாக மீளாத நிலையிலேயே இருந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்களின் நிலைமையானது மிகவும் பாரதூரமான மட்டங்களில் காணப்படுகின்றன.

வடக்கு மாகாணத்தில் 40 ஆயிரம் பெண்களும் கிழக்கு மாகாணத்தில் 49 ஆயிரம் பெண்களும் குடும்பத் தலைமைகளை ஏற்கும் நிலையில் இருப்பதாகத் தெரிய வருகின்றது. அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள எண்ணிக்கையின் பிரகாரம் இத்தொகைக் கூறப்பட்டாலும் பதிவு செய்யாதவர்கள் இன்னும் இருக்கலாம்

இன்று வடக்கு மாகாணத்திலே தற்கொலைக்கு முயற்சிப்போர்களது எண்ணிக்கை வருடத்திற்கு 1000தைத் தாண்டுகின்றது. இத்தகைய முயற்சிகளினால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்போரின் எண்ணிக்கை சுமார் 400ஐயும் தாண்டுவதாகவே தெரிய வருகின்றது. இத்தகைய தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுகின்றவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களாகவே இருக்கின்றனர்.

கடுமையான மன அழுத்தங்கள் இளையோர் முரண்பாடுகள் குடும்பத்தகராறு போன்ற காரணங்களும் அதிகளவில் வறுமை நிலையின் காரணமுமே இவர்களை இந்த நிலைக்குத் தள்ளிவிட்டுள்ளன.

இந்த மக்களை வாழ்க்கையின்பால் மீட்டெடுப்பதற்கென மத்திய அரசிடமோ மாகாண அரசிடமோ உரிய வகையிலான திட்டங்கள் எதுவுமற்ற நிலையிலேயே இந்த நிலை தொடர்கின்றது. இதனை நன்கறிந்து கொண்டுள்ள சில நுண் கடன் நிறுவனங்கள் எமது மக்களை – குறிப்பாக வறுமை நிலை மிகக் கொண்ட குடும்பத் தலைமைத்துவம் கொண்ட பெண்களை குறிவைத்து விரட்டி விரட்டி கடன் கொடுத்துவிட்டு பின்னர் அவர்களை மிரட்டி மிரட்டி அவர்களிடம் மிச்சம் மீதி இருப்பவற்றையும் இறுதியில்  அவர்களது வழ்க்கையையுமே பறித்தெடுக்கின்ற நிலைமைகள் தொடர்கின்றன.

இதற்கிடையில் பால்நிலை சார் வன்முறைகள் திணிக்கப்படுகின்றன. சமூகம்  சார்ந்த புறக்கணிப்புகள் தொடர்கின்றன. சமூகப் பாதுகாப்பு இல்லை. உரிய உதவிகள் இல்லை. சமூக வழிகாட்டல்கள் இல்லை. உழைப்பிற்கு வழி இல்லை. உழைத்தாலும் உழைப்பிற்கேற்ற ஊதியங்கள் இல்லை.

காணிகளையும் வளங்களையும் கடலையும் சுற்றி வளைத்துப் பிடித்துக் கொண்டு ஆண் துணைகளற்ற நிலையில் குடும்பத்தின் தலைமையை ஏற்று வாழச் சொன்னால் இந்தப் பெண்கள் வாழ்வதற்கு எங்கே போவார்கள்? எனவே இறுதியில் தற்கொலையைத் தேர்ந்தெடுக்கின்றனர். முழுக் குடும்பத்தையும் சேர்த்து தற்கொலைக்கு அழைத்துச் செல்கின்றனர். இது தவறு என உணர்த்துவதற்குகு; கூட எமது சமூகத்தில் எவ்விதமான ஏற்பாடுகளும் போதியளவில் இன்றிய நிலையே காணப்படுகின்றது.

இந்த நிலைமையினைக் கருத்தில் கொண்டுதான் யுத்தம் காரணமாகப் பெரிதும் பாதிப்பிற்கு உட்பட்டுள்ள எமது பெண்களின் வாழ்வாதாரங்களை மீளக் கட்டியழுப்பும் நோக்கில் வலுமிக்கதான விசேட திட்டங்கள் வகுக்கப்பட வேண்டியதன் அவசியத்தினை தொடர்ந்தும் நான் வலியுறுத்தி வருகின்றேன்.

குடும்பத்திற்கு ஐந்தாறு கோழிகளும் ஒன்றிரண்டு ஆடுகளும் கொடுத்துவிட்டால் போதும் அவர்களது வார்வாதாரங்கள் செழித்துவிடும் என எண்ணிக் கொண்டு அத்தகைய திட்டங்களை மாத்திரம் செயற்படுத்திக் கொண்டிருந்தால் அத்தகைய திட்டங்களால் ஒருபோதும் எமது மக்களது பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது.

தேர்தல் காலங்களில்; பொய்யான வாக்குறுதிகளை வழங்குவதால் மாத்திரம் எமது மக்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது. வழங்கப்படுகின்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருந்தால் இன்று இத்தகைய நிலை இருந்திருக்காது.

எனவே விசேட திட்டங்களே அவர்களது பொருளாதார இடைவெளியை நிரப்பும் என்பதை ஆய்வுப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இத்தகைய குடும்பங்கள் ஒவ்வொன்றும் சுதந்திரமான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுதல் வேண்டும். அதனடிப்படையில் அக் குடும்பங்கள் போதியளவு வாழ்வாதாரங்களை ஈட்டக்கூடியதான வாய்ப்புகளை அவர்களுக்கு இருக்கக்கூடிய ஆற்றல்கள் திறன்கள் மற்றும் அவர்களுக்கு இலகுவில் கிட்டக்கூடிய வளங்கள் சந்தைக்கான கேள்விகள் போன்றவை அடிப்படையில் இனங்காணப்பட்டு. அதற்குரிய உதவிகளை மானிய ரீதியிலும் இலகுக் கடன் அடிப்படையிலும் வழங்குவதற்கான ஏற்பாடுகளைக் கொண்டதாக மேற்படி விசேட திட்டங்கள் அமையப்பெற வேண்டும்.

Related posts:


கடற்தொழில் சார்ந்த கற்கை நெறிக்கு பல்கலையில் தனியான பீடம் அமைக்கப்பட வேண்டும்  - நாடாளுமன்றத்தில் டக...
வடபகுதி மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன? – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந...
20 ஆவது திருத்தச் சட்டத்தினால் தமிழ் மக்களுக்கு பாதிப்பில்லை - கனேடிய உயர் ஸ்தானிகருக்கு எடு்துரைத்த...