தறப்பாள் கொட்டில்களில் வாழ்பவர்களுக்கு  இலகு வீடுகள் வசதியாக இருக்கும் –  நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு

Friday, July 7th, 2017
நான் பொருத்து வீட்டுத் திட்டத்தை ஆதரிக்கின்றேன். இந்தத் திட்டத்தில் பயனாளிகளுக்கு அனுகூலங்கள் இருக்கின்றன. இவ்வீட்டுத்திட்டத்தை பலவந்தமாக யாருக்கும் திணிக்குமாறு நான் கோரவில்லை. இந்தத் திட்டத்திற்கு பெரும்பான்மையானோர் ஆதரவு வழங்கியுள்ளனர். எமது மக்களுக்கு இத்திட்டம் தேவையானது. ஓலைக்குடிசைகளிலும், தறப்பாள் கொட்டகைகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு இந்த இலகு வீடுகள் வசதியாக இருக்கும் எனவே இந்த வீடுகள் எமது மக்களுக்கு தேவை என்று நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவான்ந்தா அவர்கள் நேற்று (06.07.2017) நாடாளுமன்றத்தில் பொருத்து வீட்டுத்திட்டம் தொடர்பில் கொண்டுவரப்பட்ட ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருத்து வீட்டுத்திட்டம் தேவை என்று உரையாற்றியது தொடர்பாக கருத்துத் தெரிவித்த செயலாளர் நாயகம் அவர்கள். முன்னைய அரசாங்கத்தில் நான் அமைச்சராக இருந்தபோது யுத்தத்தில் பாதிக்கப்பட்டு வீடுகளற்று இருந்த மக்களுக்கு இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கைவிடுத்து 50,000 வீடுகளைப் பெற்றுக் கொடுத்தேன்.
தற்போது அரசுடன் இணக்க அரசியல் நடத்தும் கூட்டமைப்பினர் மேலும் வீடுகள் தேவையாக இருக்கும் மக்களுக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுக்க இரண்டரை வருடகாலத்தில் எவ்விதமான முயற்சிகளையும் எடுக்கவில்லை. அரசாங்கத்திற்கு நீண்டகால அடிப்படையிலும், பயனாளிகளுக்கு இலவசமாகவும் கிடைக்கும் இந்த இலகு வீடுகளை எமது மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
கூட்டமைப்பினர் இரணைமடு யாழ்ப்பாணம் குடி நீர்த்திட்டத்தை தடுத்து நிறுத்தினார்கள். வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்படுவதை எதிர்த்தார்கள் அதுவும் எமது மக்களுக்கு பயனளிக்கவில்லை. இவ்வாறு வருகின்ற நல்ல திட்டங்களை எல்லாம் எதிர்த்தும், தடுத்தும் வரும் கூட்டமைப்பினர் இலவச வீடுகளையும் மக்களுக்கு கிடைக்கவிடாமல் தடுக்க முயற்சிக்கின்றனர்.
தற்போதைய நிலையில் கல் வீடுகள் கிடைக்க வாய்ப்பு இல்லை என்பதால் கைவசமிருக்கும் இலகு வீடுகளையாவது பெற்றுத் தாருங்கள் என்று கேட்கும் மக்களுக்கு அதைப் பெற்றுக்கொடுத்து உதவ வேண்டும். தற்போது இலகு வீடுகள் தேவை என்று விண்ணப்பித்த மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் பெயர்ப்பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் பயனாளிகளான மக்கள் தமது நன்றிகளை தெரிவித்துவருகின்றனர்.
இவ்விடயத்தில் அரசியல் நோக்கம் இருக்க முடியாது. நீண்டகாலமாக எவ்வித வீட்டுத் திட்டங்களும் கிடைக்காமல் தவிக்கும் மக்களுக்கும், கட்டங்கட்டமாக  இலகு வீடுகளை அமைத்துக்கொடுக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் கால தாமதமின்றி முன்னெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Related posts:

மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை நான் நிச்சயம் பெற்றுத்தருவேன் -டக்ளஸ் தேவானந்தா!
சூளைமேட்டுச் சம்பவம் ஒரு அரசியல் உள் நோக்கமுடையது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு! (ஒல...
மூத்த ஒலிபரப்பாளர் ஜோர்க்கிம் பெனான்டோவின் இழப்பு, எமது மக்கள் மத்தியிலான பல்துறை ஆளுமைகளுக்கான வெற்...