தமிழ் மொழிக்கும் சிந்திப்பதற்கான உரிமையை வழங்க வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

Friday, June 24th, 2016

இந்த நாட்டில் வாழுகின்ற சகல இன சமூக மக்களும் ஜனநாயகத்தின் அம்சங்கள் அனைத்தையும் உரிய முறையில் பாரபட்சமின்றி அனுபவிக்க வேண்டும் அத்துடன் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் சிறந்ததொரு நிர்வாக கட்டமைப்பின் ஊடாக ஒவ்வொரு குடிமக்களையும் தவறாமல் சென்றடைய வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் (24) தகவல் அறியும் உரிமை சட்டமூலத்திற்கான விவாதத்தின்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில் –

வெளிப்படையான நிர்வாக செயற்பாடுகளுக்கு வழி வகுக்கும் அரசாங்கத்தின் இச்சட்ட மூலத்தை நான் வரவேற்கின்றேன். ஆனாலும் இச்சட்ட மூலத்தின் தலைப்புக்கான தமிழ் மொழிபெயர்ப்பு குறித்த எனது ஆட்சேபனையை இந்த சபையில் நான் முதலில் தெரிவிக்க விரும்புகின்றேன்.

இச்சட்ட மூலமானது தகவலுக்கான உரிமை சட்டம் என தமிழில் மொழி பெயர்த்து சொல்லப் பட்டிருக்கிறது. இதை சற்று திருத்தங்களோடு தகவல் அறியும் உரிமை சட்டம் என மாற்ற வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் மொழியுரிமை என்பது பேசுவதற்கும், எழுதுவதற்கும், வாசிப்பதற்கும், கற்பதற்கும் மற்றும் அரச நிர்வாக மொழிப்புழக்கத்திற்கும் என இருக்க வேண்டும் என்பது போல், தமிழ் மொழியானது சிந்திப்பதற்கான மொழியாகவும் உரிமையை கொண்டிருக்க வேண்டும். சக சகோதர மொழியில் சிந்தித்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்படுவதால் இது போன்ற தவறுகள் நடந்து விடுகின்றன. ஆகவே இது போன்ற சட்ட மூலங்களை உருவாக்கும் போது அல்லது வரையும் போது இந்த நாட்டில் இருக்கும் அந்தந்த மொழிகளிலும் சிந்திக்கப்பட வேண்டும்.

அவ்வாறு தமிழிலும் சிந்தித்து இச்சட்ட மூலத்தை வரைந்திருந்தால் மொழித்திருங்களுக்கு இடமிருந்திருக்காது என்பதை நான் கூறி வைக்க விரும்புகிறேன். இது குறித்த விடயத்தை நான் குழு நிலை விவாதத்திற்கும் எடுக்க விரும்புகின்றேன்.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்தோ, அல்லது தேசிய பாதுகாப்பு குறித்தோ அன்றி சில திணைக்களங்களின் அல்லது அலுவலகங்களின் நியாமான சட்ட விதிகள் குறித்தோ அவசியத்தேவையான இரகசியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக்கருத்தில்லை.

அதே போல் தனிநபர்களின் அந்தரங்க விடயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். ஆனாலும், இந்த நாட்டின் குடி மக்கள் ஒவ்வொருவரும் தாம் அறிந்து கொள்ள வேண்டிய அவசியமான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான உரிமையை கொண்டிருக்க வேண்டும்.

அரசாங்கத்திடம், திணைக்களங்களிடம், அல்லது அலுவலகங்களிடம் பொது மக்கள் உரிய முறையில் தமது நியாயமான கேள்விகளை கேட்க வேண்டும்.

இச்சட்ட மூலத்தின் மூலம் பொது மக்கள் தமது அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். அரச நிர்வாக கட்டமைப்புகள் ஒவ்வொன்றிலும் பொது மக்கள் அறிய முற்படும் தகவல்களை உரிய முறையில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் உருவாக்கப்பட வேண்டும்.

பெறவிரும்பும் தகவல்கள் உரிய திணைக்களங்களில் இல்லாத பட்டசத்தில்
அவைகளை பெற்றுக்கொடுக்க வேண்டிய இடங்களில் இருந்து அந்தந்த அரச நிர்வாக கட்டமைப்புகள் பெற்றுக்கொடுக்க வேண்டும். இதே வேளை உடனடியாக வழங்க முடியாத தகவல்களை குறிப்பிட்ட கால எல்லையை நிர்ணயித்து அந்த திகதிக்குள் தவல்களை பொது மக்களுக்கு வழங்க வேண்டும்.

இச்சட்டத்தில் தகவல் பெறுவதற்கு வசதியாக குறைந்த கட்டணங்களே அறவிடப்பட வேண்டும். இதை மக்களுக்கு ஒரு மானிய அடிப்படையிலான சேவையாக அரசாங்கம் ஆற்ற வேண்டும். வழங்கப்படும் தகவல்கள் விண்ணப்பதாரியின் மொழியில் வழங்கப்பட வேண்டும் என்பதையும் நான் வலியுறுத்தி கூற விரும்புகின்றேன்.

இச்சட்டத்தில் தேசியப்பாதுகாப்பை முன்னிட்டு சில விதிவிலக்குகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே தேசிய பாதுகாப்பு என்பது தெளிவாக வரையறுக்கப்பட்டு அதன் விஸ்தீரணம் விளக்கப்பட வேண்டும்.

இச்சட்ட மூலம் அமுலுக்கு வருவதற்கு முன்னர் நடந்த விடயங்கள் குறித்த தகவல்களையும் பொது மக்கள் பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகளையும் இச்சட்ட மூலம் கொண்டிருக்க வேண்டும். இதே வேளை இச்சட்டம் தேவைக்கேற்றவாறு அடிக்கடி மீளாய்வு செய்யப்பட வேண்டும்.

இது மக்களுக்கான அரசு என்ற நம்பிக்கைகளை மேலும் வளர்த்தெடுக்கும் செயற்பாடுகள் இங்கு அவசியமானவை என்பதை நான் சுட்டிக்காட்டும் அதே வேளை, அரச நிர்வாக கட்டமைப்புகளில் பணி புரிவோர்கள் சகலரும் பொறுப்புணர்வோடும் கடமையுணர்வோடும் செயற்படுவார்கள் என்றே நான் நம்புகின்றேன்.

தகவல் அறிவதற்கான உரிமை சட்டம் என்பது பொது மக்கள் தமது வாழ்க்கைத் தேவைகளுக்கான தகவல்களை பெற்றுக்கொள்ளவே உதவுகின்று என்ற நம்பிக்கையோடு இச்சட்ட மூலத்தை ஆதரித்து நான் வாக்களிக்கின்றேன் என தெரிவித்துள்ளார்

Related posts:

வழி முறைகள் ஒவ்வொன்றும் தமிழ் மக்களது நிரந்தர விடியலுக்கானதாகவே அமையவேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ...
ஜூலை கலவரம் சிங்கள தமிழ் மக்களுக்கு இடையில் ஏற்பட்ட இனக் கலவரம் எனக் கொள்ள முடியாது - நாடாளுமன்றில்...
தமிழ் மக்களின் பிரச்சினைகள் வேறு : தமிழ் தரகு அரசியல் கட்சிகளின் பிரச்சினைகள் வேறு – நாடாளுமன்றில் ச...