தமிழ் மக்கள் முன்னால் 3 அரசியல் உள்ளது – தரகு அரசியல், சவப்பெட்டி அரசியல், நடைமுறைச்சாத்தியமான அரசியல் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Thursday, July 11th, 2019

தமிழ்த் தரகு அரசியல் கட்சிகளை மன்னிப்போம் மறப்போம் என்று தமிழ் மக்கள் சிலவேளை எண்ணியிருந்தாலும்,,.. இன்று வந்திருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணை விடயத்திலாவது தமக்கு வாக்களித்த தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளுக்காக எதையாவது பேரம் பேசி பெறுவார்களா என்பதையே தமிழ் பேசும் மக்கள் எதிர் பார்க்கிறார்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

தமது கட்சி மாநாட்டில் தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு மூன்று மாதகால அவகாசம் கொடுத்திருக்கிறார் தமிழ் தரகு அரசியல் கட்சியொன்றின் தலைவர் ஒருவர். அடுத்த சில நாட்களில் வரப்போவது அரசின் மீதான நம்பிக்கையில்லா பிரேரனை என்பதை தெரிந்து கொண்டும்,.. அவர் அரசிற்கு மூன்று மாத அவகாசம் கொடுத்தது,  அரசின் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எந்தவித அரசியல் பேரமுமின்றி ஆதரிப்பதற்கான அத்திவாரமா?..

அல்லது,.. இன்னும் சில மாதங்களில் அடுத்த தேர்தல் வரப்போவதைத் தெரிந்து போராட்டம் வெடிக்கும் என்ற அவரது வெடிப்புளுகின் வான வேடிக்கையா?..

நாம் ஓரளவு அரசியல் பலத்தோடு இருந்த போது எமது அரசியல் அழுத்தத்தாலும், நல்லிணக்க சமிஞையாலும் உருவாக்கப்பட்ட சந்திரிக்கா அரசு கால அரசியல் தீர்வுத்திட்டத்தை இந்த நாடாளுமன்றத்தில், எதிர்த்து எரித்தவர்களில், இந்தத் தரகு அரசியல் தமிழக்; கட்சித் தலைவர்களும் உள்ளடங்குகின்றனர்.

அந்த வரலாற்றுத் தவறுக்கு செய்யும் பாவ விமோசனமாக இவர்கள் இனி எதைத்தான் எமது மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. இன்று தமிழ் மக்கள் மத்தியில் இருப்பது மூன்று வகையான அரசியல் வழிமுறைகள்தான்.

முதலாவது,.. தரகு அரசியல்,..

தீர்விருப்பதாகச் சொல்வார்கள், ஆனால் பிரச்சனைகளைத் தீராப் பிரச்சனைகளாக வைத்தக் கொண்டு, தமிழ் மக்களுக்கும் அரசுக்கும் இடையில் தரகு வேலை செய்து கொண்டு தமிழ் மக்களின் வாக்குகளைத் தாமும் அபகரித்து, அரசுக்குப் பெற்றுக்கொடுத்து அதன் பெயரால் தமது சொந்தச் சலுகைகளை மட்டும் பெற்றுக்கொள்பவர்கள்.

இரண்டாவது,.. சவப்பெட்டி அரசியல்,…

இவர்களும் தீர்விருப்பதாக சொல்வார்கள்,.. ஆனால் அவர்களிடம் அதற்கான திட்டமும் இருக்காது,.. வழிமுறையும் இருக்காது. வெறுமெனவே உசுப்பேற்றும் அரசியலின் உச்சக்கட்டம் அவர்கள்தான். அதிகாரம் கிடைத்தால் அவர்களும் தரகு அரசியலின் அதே குட்டையில் ஊறுவது தவிர இவர்களுக்கு மாற்று இல்லாதவர்கள்.

மூன்றாவது,.. நடைமுறைச்சாத்தியமான அரசியல்,..

இதற்குத் தீர்வுத் திட்டமும் உண்டு, அதை அடைந்து கொள்ளும், கொள்கைத் திட்டமும், வேலைத்திட்டமும் உண்டு, அதனூடாக அரசியல் உரிமைக்கும், அபிவிருத்திக்கும், அன்றாடப் பிரச்சனைக்கும் தீர்வும் உண்டு.

இதுவே எமது நடைமுறைச்சாத்தியமான அரசியல் வழிமுறையாகும், அந்த வழியில் சந்திரிக்கா அரசு காலத்தில் எமது ஓரளவு அரசியல் பலத்தை வைத்து சிறந்ததொரு அரசியல் தீர்வைக் கொண்டுவந்திருந்தோம். அது தவிர ஆட்சிகளின் போது எமக்குக் கிடைத்த அரசியல் பலத்திற்கு ஏற்றவாறு தமிழ்த் தலைமைகளால் சாதிக்க முடியாத அளவிற்கு அரசியல் தீர்வு உள்ளடங்கலாக அபிவிருத்தி மற்றும் அன்றாடப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் முடிந்;தளவு சாதித்திருந்தோம்,.. இனி வரும் காலங்களில் எமக்குக் கிடைக்கப்போகும் அரசியல் பலத்தை வைத்து சகலதையும் சாணக்கிய தந்திர வழிமுறையில் சாதிப்போம்.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணை அரசுக்கு எதிரானது என்பதற்கு அப்பால்,.. இந்த அரசைப் பயன்படுத்தி தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க விரும்பாத தமிழ்த் தரகு அரசியல் கட்சிகளுக்கும் எதிரானது என்றே தமிழ் மக்கள் கருதுகின்றார்கள். அந்தவகையில் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையின் முடிவு எதுவாக இருந்தாலும், மக்களின் தீர்ப்பை அறிந்துகொள்வதற்கு ஒரு தேர்தலுக்குச் செல்வதுதான் இப்போதைக்கு உரிய ஒரே தீர்வு என்றே கருதுகின்றேன்.

அதன்போது மக்கள் யாருக்கு ஆணை வழங்குகின்றார்களோ, அவர்கள் ஒரு ஸ்திரமான ஆட்சியை அமைத்துக் கொள்ளட்டும். யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது எங்களுக்கு முக்கியமல்ல. யார் ஆட்சி அமைத்தாலும், இந்த நாட்டு மக்களது பிரச்சினைகள் – குறிப்பாக புரையோடிப் போயுள்ள எமது மக்களது பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய முறையில், இந்த நாட்டை எவருக்கும் தாரை வார்த்துக் கொடுக்காத வகையில், இந்த நாட்டினதும், நாட்டு மக்களினதும் நன்மை கருதி செயற்படக்கூடியதாக அந்த ஆட்சி அமைய வேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பாகும் .

Related posts:

வடக்கு கிழக்கு காணிகள் விடுவிப்பையும் தேசிய பாதுகாப்பையும் இணைத்து முடிச்சுப் போட வேண்டாம்- டக்ளஸ் த...
ஆட்சி அதிகாரம் எமது கரங்க ளுக்குக் கிடைக்கப்பெற்றால் பாகுபாடுகளுக்கு இடமளிக்கப்போவதில்லை - மட்டு மாந...
எமது மக்கள் வன விலங்குகளுடன் போராடும் நிலை வரக்காரணம் என்ன?  - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

கொழும்பு விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலய சிறப்பு நிகழ்வின் பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவான...
மணிவண்ணனின் தவறை அறியாத் தவறாக கருதி மன்னிப்பு வழங்குங்கள் - ஜனாதிபதியிடம் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை...
காணாமல் போன வாழைச்சேனை கடற்றொழிலாளர்கள் நான்கு வாரங்களின் பின்னர் மீட்பு - அமைச்சர் டக்ளஸின் முயற்ச...