தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் சமூக பொருளாதார மாற்றங்கள் உருவாக வேண்டும் – அதையே தான் விரும்புவதாக அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, February 19th, 2022

தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் சமூக பொருளாதார மாற்றங்களையே தாம் விரும்புவதாகவும், அதை நோக்கியே உழைத்து வருவதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் தகவல் வெளியீட்டுப் பணியகத்தின் கிளை காரியாலயத்தினை யாழ். மாவட்ட செயலகத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

தமிழ் மக்களின் உரிமையை நோக்கிய பயணத்தில் 13 ஆவது திருத்தச்சட்டம் நல்லதொரு ஆரம்பமெனவும், 13 ஆம் திருத்தச் சட்டத்தினை வலுப்படுத்தி வந்திருந்தால் பாரிய அழிவுகளை தடுத்திருக்க முடியுமென்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் 13 ஆவது திருத்தச்சட்டத்தை தான் ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வந்ததாகவும், தனக்கு பக்க பலமாக சகலரும் இருந்திருந்தால் இத்தனை அழிவுகள் நடந்திருக்காதெனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

காலம் கடந்தாவது இன்று தமது யதார்த்த வழிமுறைக்கு பலரும் வந்திருப்பதை தான் வரவேற்பதாகவும், ஆனாலும், இன்று அதனை ஆதரிக்கின்றவர்களும் எதிர்க்கின்றவர்களும் உண்மையை மறைத்து பொய்யான அரசியல் நலன்களுக்காகவே அதனை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இனி நாம் என்ன செய்ய வேண்டும்? எங்கிருந்து தொடங்க வேண்டும்? இவைகள் குறித்த ஆழ்மன உணர்வுகளும் உறுதியும் சகலருக்கும் இருக்க வேண்டுமெனவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் சமூக பொருளாதார மாற்றங்களையே தாம் விரும்புவதாகவும், அதை நோக்கியே தான் உழைத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: