தமிழ் மக்கள் அழிந்தபோது தமிழ்த் தலைமைகள் துடிக்கவில்லை – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா!.

Saturday, June 11th, 2016

சாலாவ இராணுவ ஆயுதக்களஞ்சிய வெடிப்புச் சம்பவம் அப்பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை துவம்சம் செய்திருப்பதை எண்ணி கவலையடைகின்றேன். சாலாவ வெடிப்புச் சம்பவமானது, தெரியாமல் நடந்த விபத்தொன்றாகவே கருதப்படுகின்றது. அந்த வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை துரிதமாக கட்டியெழுப்பி அவர்கள் சொந்த வீடுகளில் மீண்டும் குடியேற்றப்பட வேண்டும் என்பதற்காக தென் இலங்கை அரசியல் தலைமைகள் துடிக்கின்றன. பல முனைகளிலிருந்தும் குரல் கொடுக்கின்றன. அர்த்தபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. இந்த இன அக்கறையை ஒரு படிப்பினையாக தமிழ்த் தலைமைகள் கற்றுக்கொள்ளவேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா  நேற்று  நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள பிரச்சினைகள் தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை விவாதத்தில் கலந்துகொண்டு நேற்று(10.06.2016) உரையாற்றியிருந்தார். அவரது உரை தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், சாலாவ ஆயுதக்களஞ்சியசாலை வெடிப்பை விடவும் பல மடங்கு அதிகமான பாதிப்புக்களை வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அனுபவித்து வந்தள்ளார்கள். குறிப்பாக  வன்னிப் பெருநிலப்பரப்பெங்கும் அதிகூடிய பாதிப்புக்கள் நடைபெற்று இருந்தன. அதிலும் குறிப்பாக முள்ளிவாய்க்காலில் பெரும் மனிதப் பேரவலமே நடந்தது. அந்த மனிதப் பேரவலம் அங்கு நடைபெறப்போவதை தடுத்து நிறுத்த எம்மைத் தவிர வேறு எந்த தமிழ்த் தலைமைகளும் துடித்துப் போகவும் இல்லை, அதை தடுத்து நிறுத்த குரல் கொடுக்கவும் இல்லை. அர்த்தபூர்வமாக செயற்படவும் இல்லை.

மக்கள் மீது இவர்களுக்கு உண்மையான அக்கறை இருந்திருக்குமானால் தெரிந்தே நடைபெற்ற முள்ளிவாய்க்கால் அழிவுகளையும், அவலங்களையும் தடுத்து நிறுத்தியிருக்கலாம். அழிவு யுத்தத்தை தடுத்து நிறுத்த வாருங்கள் என்று நான் நாடாளுமன்றத்தில் பகிரங்கமாகவும், தனித்தனியாகவும் இவர்களிடம் கேட்டுக் கொண்டபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து கொண்டு தமிழ் மக்களின் அவலங்கள் தொடர்பாக நீலிக்கண்ணீர் வடிப்பவர்கள் அன்று முன்வரவில்லை.

தமிழ்த் தேசியம் குறித்து தீவிரமாகக் கதைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் உண்மைத் தன்மை இல்லை. தமிழ்த் தேசியத்தைப் பேசி எமது மக்களின் வாக்குகளை அபகரிப்பது மட்டுமே இவர்களின் குறிக்கோளாக இருக்கின்றது. இறுதி யுத்தத்தில் மக்கள் மடிந்துபோவதையும், புலிகள் இல்லாத சூழலில் தாம் நினைத்தபடி தான்றோன்றித்தனமாக சுய இலாப அரசியல் நடத்துவதே இவர்களின் விருப்பமாக இருந்திருக்கும்.

சாலாவ ஆயுதக் களஞ்சிய வெடிப்புச் சம்பவத்தையும், அது குறித்து சிங்களத் தலைமைகள் முன்னெடுக்கின்ற செயற்பாட்டையும் ஒரு படிப்பினையாக தமிழ்த் தலைமைகள் கற்றுக் கொள்ளவேண்டும். அதை விடுத்து அழிவுகள் இடம்பெறுவதையும், மக்களின் துயரங்கள் நீடிப்பதையும் உள்ளூர விரும்பிக் கொண்டு பொய்த்தனமாக அரசியல் நடத்துவதால் ஆகப்போவது ஒன்றுமில்லை என்றும் அவர்; தெரிவித்துள்ளார்.

Related posts:

கடந்த காலத்தில் அநாவசிய தர்க்கங்களால் அரசியல் தீர்வுக்கான நல்ல வாய்ப்புக்களை தவறவிட்டுவிட்டோம்
முள்ளிவாய்க்காலில் புலிகளுக்கு நினைவு சதுக்கம் வேண்டாம் என்கிறது தினக்குரல் பத்திரிகை : இல்லை உயிரி...
காக்கைதீவு, சாவற்கட்டு கிராமிய கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ...