தமிழ் மக்களின் வாழ்வை கட்டியெழுப்ப அரசு நடவடிக்கை எடுக்கவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி தெரிவிப்பு!

Wednesday, July 18th, 2018

வடக்கு மாகாணத்தில் எமது மக்கள் பல்வேறு சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். பொதுவாகவே இந்த நாட்டில் இன்று சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக மக்கள் உயிர் வாழ இயலாத ஒரு நிலைமையே ஏற்பட்டு வருகின்றது. இந்த நிலையில்தான் நீங்கள் எமது மக்களை கட்டியெழுப்புவதற்கு உரிய திட்டங்களைத் தீட்டாமல், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு எனக் கூறியும் வரிகளை அறவிட்டு வருகின்றீர்கள்.

இத்தகைய வரிகளை எமது மக்களிடமிருந்து அறவிட்டு, அந்த நிதியை நீங்கள் என்ன செய்கின்றீர்கள்? என்ற கேள்வி எமது மக்களிடம் இல்லாமல் இல்லை. நாட்டின் கடன்களை அடைப்பதாகக் கூறி, மேலும், மேலும் கடன் வாங்குகின்ற நிலைமைகளையே உருவாக்கி வருகின்றீர்கள். ஊழல், மோசடிகள் இந்த நாட்டில் மலிந்து போயிருக்கின்றன.

அரச துறைகளைச் சார்ந்தவர்களில் 25 சதவீதமான அதிகாரிகள் ஊழலுடன் சம்பந்தப்பட்டுள்ளனர் எனத் தெரிய வந்திருப்பதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஆணையாளர் அண்மையில் தெரிவித்திருக்கின்றார்.

கடந்த வருடத்தில் மாத்திரம் அரச நிறுவனங்களால் 50 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமானத் தொகை நட்டமேற்பட்டுள்ளதாக கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்கள் தெரிவித்துள்ளார்.

புதிய வரிச் சட்டத்தின் கீழ் மக்களிடமிருந்து உழைக்கும்போதே செலுத்துகின்ற வரிகளையும் அதிகரித்துள்ள நீங்கள், அவற்றை அறவிடுவதற்கான சட்ட விதிகளை இறுக்கமாக்கியுள்ள நீங்கள், கசினோ சூதாட்ட நிலையங்களிலிருந்து அறவிடப்படக்கூடிய வர்த்தக வரிகளில் சுமார் 3,760 மில்லியன் ரூபாவினை அறவிடுவதற்கு எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்காமலே உள்ளீர்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கம் அண்மையில் நடைமுறைப்படுத்தியுள்ள புதிய வரிச் சட்டம் காரணமாக ஊழியர் சேமலாப நிதியத்திற்கு சுமார் 3,000 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியே அறிவித்துள்ளது.

இத்தகைய நிலைப்பாடுகள் நாட்டில் நிலவுகின்ற நிலையிலேயே மேலும், மேலும் பொது மக்களையே இலக்கு வைத்து வரிகள் விதிக்கப்படுகின்றன. உள்ளவர்கள் பலர்  வரிகளிலிருந்து தப்பித்துக் கொள்கின்ற அதே வேளை, இல்லாதவர்களை நோக்கியே இந்த வரிகள் பாய்வதாகவே தென்படுகின்றது.

எனவே, இந்த நாட்டின் பொது மக்கள் தொடர்பில் சற்றேனும் சிந்தித்துப் பார்த்து, அவர்களால் செலுத்தக் கூடிய வகையிலான – பொருத்தமான வரிகளை விதிப்பதற்கான ஒரு கொள்கையை வகுத்து, அதற்கிணங்க செயற்பட இந்த அரசு முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

நீங்கள் இங்கே அழகழகான பெயர்களில் வரிகளைக் கொண்டு வருகிறீர்கள். அதனால் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர் எனக் கூறினால், அதற்காக அழகழகான விளக்கங்களையும் தருகின்றீர்கள். ஆனால், வறிய பொது மக்களாக இருந்து, ஒரு நாளுக்கான உணவை இந்த நாட்டில் தேடிப் பார்ப்பீர்களாயின், இந்த வரிகளின் கொடுமை உங்களுக்கே வெளிச்சமாகும் என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி திருத்தச் சட்டமூலம், காணி பாரதீனப்படுத்தல் மீதான கட்டுப்பாடுகள் திருத்தச் சட்டமூலம் தொடர்பாக நாடாளுமன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts: