தமிழ் மக்களின் வாழ்க்கையை அடியோடு சிதைத்த தமிழ்த் தரப்பு இன்று ‘கம்பெரலியவுடன்’ புரண்டு கிடக்கிறது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!
Tuesday, June 18th, 2019அரசியல் உரிமையைப் பெறுகின்ற வரையில் எவரும் அபிவிருத்தி பற்றிப் பேசக் கூடாது என்ற இந்தத் தமிழ்த் தரப்பினர், அபிவிருத்தி என்றலே அது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகம் என்றவர்கள், எமது பிள்ளைகள் தொழில் வாய்ப்புகளைக் கோரிச் சென்றபோது, தாங்கள் நினைத்தால் பத்தாயிரம் வேலைவாய்ப்புகளையும் பெற்றுத் தரலாம், ஆனால், அப்படி செய்தால் தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வு என்பது பாதிக்கப்பட்டு விடும் என எமது பிள்ளைகளிடம் கூறி, அப்பிள்ளைகளின் கனவுகளை – வாழ்க்கையினை அடியோடு சிதைத்த தமிழ்த் தரப்பினர் இன்று ‘கம்பெரலியவுடன்’ புரண்டு கிடக்கிறார்கள் என ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நடைபெற்ற 2000ஆம் ஆண்டின் 43ஆம் இலக்க காப்புறுதித் தொழிலை ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் கீழான கட்டளைகள் – மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான மூன்று அறிவித்தல்கள் தொடர்பில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
அபிவிருத்தியே வேண்டாம் என தங்களது அரசியல் வரலாற்றிலேயே கூறி வந்தவர்கள், திடீரென எப்படி இப்போது அபிவிருத்தியில் இறங்கிவிட்டார்கள்? எமது மக்கள்மீது அந்தளவுக்கு பாசம் வந்துவிட்டதா? என ஆராய்ந்து பார்த்தால், அதிலும் ஊழல் மோசடிகளை செய்வதற்குத் தான் இந்த நாடகத்தை இவர்கள் ஆடுகிறார்கள் என்பது தெரிய வருகின்றது.
இந்த ஊழல், மோசடிகளை அம்பலத்திற்குக் கொண்டு வர வேண்டும் என அது தொடர்பில் இந்தச் சபையிலே கேள்வி எழுப்பினால், அந்தக் கேள்விக்கு பதில் வழங்க முடியாமல், தட்டிக் கழிக்கபட்டது. இதிலிருந்தே தெரிகின்றது கம்பரெலியவில் இந்தத் தமிழ்த் தரப்பினர் எந்தளவு ஊழல், மோசடிகளை செய்திருப்பார்கள் என்பது.
ஆக, இந்தத் தமிழ்த் தரப்பினர், சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பதை உறுதிபடுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்றே எமது மக்கள் கதைக்கின்றனர்.
அந்த வகையில், எமது பகுதிகளில் இந்த ‘கம்பெரலிய’ கிராமப் பிறழ்வு இந்த தமிழ் அரசியல்வாதிகள் அரசைவிட்டு பிறழாது இருப்பதற்கு கொடுக்கப்பட்ட இலஞ்சமாகவே எமது மக்களால் விமர்சிக்கப்பட்டு வருகின்றது.
Related posts:
|
|