தமிழ் மக்களின் பிரச்சினைகள் வேறு : தமிழ் தரகு அரசியல் கட்சிகளின் பிரச்சினைகள் வேறு – நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார் டக்ளஸ் எம்.பி.!

Friday, July 26th, 2019

தமிழ் மக்களின் பிரச்சினைகள் வேறு தமிழ் தரகு அரசியல் கட்சிகளின் பிரச்சினைகள் வேறு!! கும்பி கூழுக்கு அழுகிறது கொண்டை பூவிற்கு அழுகிறது என்று சொல்வார்கள். அதுபோலவே, தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசைகளுக்காகவும், அபிவிருத்திக்காகவும், அன்றாடப் பிரச்சினைகளின் தீர்விற்காகவும் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் மறுசீரமைப்பு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் – 

ஆனாலும், தமிழ் மக்களை உசுப்பேற்றி, மயக்கத்தில் ஆழ்த்தி தமிழ் மக்களின் பெயரால் இந்த நாடாளுமன்றத்திற்கு வந்திருக்கும் தமிழ்த் தரகு அரசியல் கட்சிகளோ, அடுத்த தேர்தலிலும் எப்படி வெல்லலாம் என்ற மாய மந்திரங்கள் குறித்தே தமது கனவுகளில் கூட சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் மக்களின் வாக்குப்பலத்தில் கிடைத்த தமது அரசியல் பலத்தை வைத்து அரசுடன் பேரம் பேசி தத்தமது சொந்தச் சலுகைகளைப் பெற்று தமது சொந்த வாழ்வை மட்டும் வளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த உண்மையைக் கடந்த காலங்களைப் போலவே இந்த ஆட்சிக்காலத்திலும் தமிழ்த் தரகு அரசியல் கட்சிகள் அடுத்தடுத்து நிரூபித்து வந்திருக்கிறார்கள்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை தங்கத் தாம்பாளத்தில் ஏந்தி வந்து யாரும் தரப்போவதில்லை.. மயிலே!.. மயிலே!. இறகு போடு என்றால் மயில் ஒரு போதும் இறகு போடாது அது போலவே, அரசே!. அரசே!.. தமிழருக்குத் தீர்வு தா என்று அரசியல் தீர்விற்காகக் குரல் கொடுப்பது போல் வெறுமனே ஒப்புக்கு மாரடித்துக்கொண்டிருப்பதால் எந்தத் தீர்வும் எமக்குக் கிடைத்து விடாது.

மாறாக,. எமது அரசியல் பலத்தாலும், மதிநுட்ப அரசியல் வழிமுறையாலும், தேசிய நல்லிணக்கத்தினாலும் நாமே பெற்றெடுக்க வேண்டும். வரலாற்றின் ஓட்டத்தையும், அதன் உண்மைகளையும் தெரிந்து கொண்டும், எம்மீதான அரசியல் காழ்ப்புணர்சியில்,  இதைக் கூற எமக்கு அருகதை உண்டா எனச் சிலர் திட்டமிட்டு எம்மை நோக்கி சுட்டு விரல்களை நீட்டலாம். நாங்கள் சாதித்துக் காட்டியவர்கள் என்ற துணிச்சலோடுதான் எதையும் சாதிக்க வக்கற்ற தமிழ்த் தரகு அரசியல் கட்சிகள் மீதான எனது விமர்சனங்களை முன்வைக்கிறேன்.

நாமும் சந்திரிக்கா ஆட்சிக் காலத்தில் ஓரளவு அரசியல் பலத்தோடு இருந்தவர்கள், ஆனாலும் அந்த ஆட்சி எமது தயவில் அரங்கேறிய ஆட்சியல்ல. எமது ஆதரவை அந்த ஆட்சிக்கு மேலதிக ஆதரவாகக் கேட்ட போது அந்த ஆதரவுக்காக எமது மக்களின் தேவைககளைக்; கேட்டோம்.. அன்றாடப் பிரச்னைகளுக்குத் தீர்வு கேட்டோம், அபிவிருத்தியைக் கேட்டோம்,. அரசியல் கைதிகளை விடுவிக்கக் கேட்டோம்,. வலிகாமாம் காணி சுவீகரிப்பை நிறுத்தக் கேட்டோம்,. குடிசன மதிப்பீட்டை நிறுத்தக் கேட்டோம்,.. வடக்கு நோக்கி சமுர்த்தி கேட்டோம்,. தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்த நியமனம் கேட்டோம்,. வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை கேட்டோம்.. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தரப்படுத்தலை உருவாக்கி பல்கலைக்கழக அனுமதியைக் கேட்டோம்… எம் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக் கேட்டோம், சுகாதார வசதிகள் கேட்டோம்,. மின்சாரம் கேட்டோம், முன்பள்ளிகள் கேட்டோம், பொதுநோக்கு மண்டபங்கள் கேட்டோம். சனசமூக நியையங்களைப் புதிப்பிக்கவும் உருவாக்காவும் கேட்டோம், கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிகள் புனரமைக்க நிதி கேட்டோம், தொழில் நுட்பக் கல்லூரிகள் கேட்டோம், எரியுண்ட யாழ் நூலகத்தைப் புனரமைக்கக் கேட்டோம், வீதிகள் புனரமைக்கக் கேட்டோம், கல்வியல் கல்லூரிகள் கேட்டோம்,. யுத்தத்தை நிறுத்தக் கேட்டோம்,.. மக்களின் இயல்பு வாழ்விற்கு இடமளிக்கக் கேட்டோம். இப்படி நீள்கிறது அந்தப் பட்டியல்

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் அரசிடம் எமது சொந்தச் சலுகைகளைக் கேட்டதும் இல்லை. அதற்காக அரசின் பின் கதவு தட்டியதும் இல்லை. எமது மக்களின் நலன்களுக்காக அரசுடன் வெளிப்படையாகவே பேசிக்கொண்டோம். அனைத்தையும் நாம் சாதித்துக் காட்டினோம். அவைகளுக்குத் தீர்வும் கண்டோம். அதை விட மேலாக அரசியல் தீர்வு கேட்டோம். அதுவும் கிடைத்தது.

பிராந்தியங்களின் சுயாட்சி,. மதசார்பற்ற அரசு,. காணி பொலிஸ் அதிகாரம். இரு மொழிக்கொள்கை , என சமஸ்டிக்கு ஒப்பான தீர்வை உருவாக்க அன்று நாம் எமது அரசியல் பலத்தைப் பயன்படுத்தினோம். சமஸ்டிக்கு ஒப்பான எமது அந்த தீர்விற்கு என்ன நடந்தது?.. விசித்திரமான வேதனை என்னவென்றால்,.. தமிழர்களுக்குக் கிடைத்த அந்த அரியதொரு அரசியல் தீர்வைத் தமிழர்களில் பெயரால் அரசியல் பிழைப்பு நடத்தும் இந்தத் தமிழ்த் தரகுக் கட்சித் தலைமைகளே எதிர்த்தது ஒன்றுதான். அந்தத் தீர்வு நகல்களை இதே நாடாளுமன்றத்தில் வைத்து தமிழ்த் தரகுக் கட்சி தலைமைகளும் தீயிட்டு எரித்தது ஒன்றுதான்.

இதை இல்லை என்று மறுக்கும் தமிழ்த் தரகுக் கட்சிகள் இது குறித்து என்னுடன் பகிரங்க விவாதத்திற்கு வருவார்களா என்று நான் சவால் விட்டுக் கேட்கிறேன். சரி அதைக்கூட மன்னிப்போம் மறப்போம் என்று விட்டு விடுவோம். அன்று நாம் சந்திரிக்கா அரசுக்கு மேலதிக ஆதரவை வழங்கியது போல் அன்றி, இதே தமிழ்த் தரகுக் கட்சிகளின் ஆதரவு இல்லாவிட்டால் இன்று நடக்கும் இந்த ஆட்சி கூட நடந்திருக்காது.

தமது தயவில் மட்டும் உருவான இந்த ஆட்சியை கொண்டுவந்த தமிழ்த் தரகுக் கட்சித் தலைமைகள், தமக்குக் கிடைத்த போதிய அரசியல் பலத்தை வைத்து இந்த அரசுடன் என்ன பேரம் பேசினார்கள்?.. தாம் வாழ மட்டும் ஆடம்பர மாளிகைகள் கேட்டார்கள். வரிச்சலுகையற்ற ஆடம்பர வாகனங்கள் கேட்டார்கள். ஒருங்கினைப்புக்குழுக்களின் தலைவர் பதவி கேட்டார்கள். குழுக்களின் பிரதி தவிசாளர் பதவி கேட்டார்கள். வெளிநாட்டுப் பயணங்கள் கேட்டார்கள். பணப்பெட்டிகள் கேட்டார்கள்.

இது போன்ற தமது சொந்தச் சலுகைகளை மட்டுமன்றி தமது ஆதரவில் உருவான இந்த அரசிடம் தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து எதைத்தான் கேட்டார்கள்?.. எமக்கு போதிய அரசியல் பலமின்றிக் கடந்த மகிந்த ராஜ பக்ச அரசில் எமது நல்லிணக்க சமிஞையால் மட்டும் நாம் எமது மக்களுக்குப் பெற்றுக்கொடுத்ததில் ஒரு துளியளவேனும் போதிய அரசியல் பலத்தோடு இந்த அரசை வீழ விடாது பாதுகாத்து வரும் இவர்கள் எமது மக்களுக்கு எதை பெற்று கொடுத்திருக்கிறார்கள்?

தாமே இந்த அரசை உருவாக்கியவர்கள் என்று தம்பட்டம் அடித்து இந்த ஆட்சி உருவாகிய போது, தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து அரசுடன் பேரம் பேசினார்களா?  இல்லை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் இந்த ஆட்சியை மாற்ற முயன்ற போது, இந்த ஆட்சியை விழ விடாது பாதுகாத்த போதாவது இந்த தமிழ்த் தரகு அரசியல் கட்சிகள், தமிழர்களின் உரிமைக்குத் தீர்வு கண்டால் மட்டுமே இந்த அரசை தாம் தக்க வைக்க ஒத்துழைப்போம் என்று ஏதாவது பேரம் பேசி வெற்றி கண்டார்களா? அதுவும் இல்லை.  இறுதியாக,.. ஜே.வி.பி யினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போதும், தமிழ் மக்கள் வழங்கிய அரசியல் பலத்தை வைத்தே இந்த அரசைத் தமிழ்த் தரகு அரசியல் கட்சிகள் தக்க வைத்தார்கள். அதன் போது கூட தமக்கு வாக்களித்த தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து இவர்கள் எதையாவது பேரம் பேசிப் பெற்றார்களா?

பெற்றார்களே என்பது உண்மை. ஆனாலும் பெற்றது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அல்ல. ஒவ்வொரு தடவைகளும் அரசுக்கு ஆதரவு வழங்கும் போது தமது சொந்தச் சலுகைகளை மட்டுமே பெற்றுக்கொண்டார்கள். ஆட்சி மாற்ற குழப்பங்களும், அரசின் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணைகளும் இங்கு அடிக்கடி நிகழ வேண்டும் என்று எதிர்பார்த்திருப்பவர்கள் இந்தத் தமிழ்த் தரகு அரசியல் கட்சிகள் மட்டுமே.

அதன் போதுதான் அண்டிப்பிழைக்கும் தமது அரச ஆதரவுக்குப் பரிகாரமாக பணப்பெட்டிகளைப் பரிமாறலாம். தத்தமது சொந்தச் சலுகைகளைப் பெற்று சுக வாழ்வு வாழாலாம் என்ற எதிர்பார்ப்பு இவர்களுக்கு, தாமே உருவாக்கிய இந்த அரசின் ஊடாக புதிய அரசியல் யாப்பைக் கொண்டு வருவோம் என்று புலுடா விட்டவர்கள், அந்த ஆட்சிக்காலம் இன்று முடிவுறும் தருவாயில் தமது அடுத்த தேர்தல் வெற்றிக்காக புதிய அரசியல் யாப்புக் குறித்து இன்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

Related posts:

மலைய மக்களின் உரிமைக்காகவும் நாம் போராடினோம்  - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவ...
சமஷ்டி ஒளிந்திருப்பதாக கூறுவது இருட்டு அறைக்குள் கறுப்பு பூனையை தேடும் முயற்சியாகும் - நாடாளுமன்றில்...
கிளிநொச்சி குளத்தை சுற்றுலாத்தளமாக அமைப்பது தொடர்பான அமைச்சர் டக்ளஸ் தலைமையில் கலந்துரையாடல்!

சமூக வலைத்தளங்கள் மக்களுக்கு சரியான கருத்துக்களை எடுத்துச் செல்ல வேண்டும் - செயலாளர் நாயகம் சுட்டிக்...
டக்ளஸ் தேவானந்தாவை நம்பி வாக்களியுங்கள்: தேர்தல் மேடையில் சூசகமாக தெரிவித்த இரா.சம்பந்தன்!
இளைஞர் யுவதிகளின் தொழில்துறையை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முழுமையான பங்களிப்பு வழங்கப்படும் - அ...