தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுங்கள் – எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் ஈ.பி.டி.பி எடுத்துரைப்பு!

Thursday, January 17th, 2019

மத்திய அரசுகளால் மீளப்பறிக்கப்பட முடியாத அதேவேளை கௌரவமானதும், சமத்துவமானதுமான நிலையான அரசியல் தீர்வொன்றையே நாம் வரவேற்போம். சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் திருப்தியற்றதும், சந்தேகத்தைத் தருவதுமான எந்தவொரு தீர்வுத் திணிப்பையும் ஈ.பி.டி.பி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவை நேரில் சந்தித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெளிவுபடுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச அவர்களை சந்தித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  நெல்சன். பாரூக், ஸ்ராலின் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர், புதிய அரசியலமைப்பு வரைபு தொடர்பாகவும், தமிழ் மக்களின் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் எடுத்துரைத்தனர்.

புதிய அரசியலமைப்பு வரைபு மற்றும் மத்திய அரசின் பங்காளித்துவ உரிமையிலிருந்து வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலைமைகள் மற்றும் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளை தென் இலங்கை அரசியல் கட்சிகளுக்கு தெளிவுபடுத்தும் தொடர் சந்திப்புக்களின் ஒரு அங்கமாக ஈ.பி.டி.பியின் பிரதிநிதிகள் முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்சவை சந்தித்தனர்.

அந்தச் சந்திப்பின்போது மேலும் கருத்துத் தெரிவித்த ஈ.பி.டி.பியின் பிரதிநிதிகள்,  புதிய அரசியலமைப்பு வரைபு, அபிவிருத்தி, வாழ்க்கைத்தரம் முன்னேற்றம் மற்றும் தமிழ் மக்களின் பிரதான பிரச்சனைகள் தொடர்பான விடயங்களை அந்த மக்களின் சார்பில்; அணுகுவதற்கு எவரும் பொறுப்பேற்காத நிலையில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள்  அரசியல் ரீதியாக புறக்கணிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

நல்லாட்சி அரசாங்கத்தை தாமே ஆட்சிபீடமேற்றியதாகவும், அந்த அரசாங்கத்தைக் கொண்டு தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனை உட்பட பிரதான பிரச்சனைகள் அனைத்துக்கும் தீர்வைப் பெற்றுத் தருவதாகக் கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கடந்த மூன்றரை வருடமாக எதையும் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கவில்லை. இந்த நிலையில் தற்போதைய நிலையிலும் தமது தயவிலேயே அரசாங்கம் செயற்படுவதாகவும், இந்த அரசாங்கத்தைக் கொண்டு தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு திர்வைப் பெற்றுத்தருவதாக கூறிவருகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குறுதிகள் மீதும், செயற்பாடுகள் மீதும் தமிழ் மக்கள் முற்றிலுமாக நம்பிக்கை இழந்துள்ளனர். இந்த ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக சம்மந்தன் இருந்த காலத்தில் அதனால் நாட்டுக்கும் நன்மையில்லை, தமிழ் மக்களுக்கும் பயனில்லை என்ற நிலைமையே தொடரகின்றது.

இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவாகி இருக்கும் நீங்கள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பான நியாயமான கோரிக்கைகளுக்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும். மத்திய அரசியல் அணுகுமுறைகள் தொடர்பான புறக்கணிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாகவும் நீங்கள் குரல் கொடுக்க வேண்டும் என்றும் ஈ.பி.டி.பியின் பிரதிநிதிகள் கோரிக்கை முன்வைத்தனர்.

01

 

Related posts: