தமிழ் மக்களின் அரசியலுரிமைக்கான குரல் தேசிய இனத்தின் நீதிக்கான குரல்! செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா

Saturday, April 30th, 2016

உழைக்கும் மக்களின் உன்னத தினமான மே தினத்தில் உழைக்கும் மக்களோடு இணைந்து, அரசியலுரிமைக்காக எழுந்து நிற்கும் தமிழ் பேசும் மக்களாகிய  நாமும் அனைத்து உரிமைகளையும் பெற்று நிமிர்ந்துநிற்க உறுதியெடுப்போம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள மேதின செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள மேதின செய்தியில் மேலும் தெரிவிக்கப்படுள்ள்ளதாவது –

எமது உரிமைப்போராட்ட வரலாற்றில் அர்த்தமற்ற வெற்றுக்கோசங்களாலும் பொறுப்பற்ற அரசியல் அணுகுமுறைகளாலும் எமது மக்கள் இழப்புகளையும் இடம்பெயர்வுகளையும் அவலங்களையும் மட்டுமே சுமந்திருந்தார்கள். ஆனாலும், உரிமைகளை வெல்வதற்கான நம்பிக்கைகளும், உரிமைக்காக குரல் கொடுக்கும் நியாயங்களும் இன்னமும் இந்த பூமியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைக்கான குரல்கள் ஒரு தேசிய இனத்தின் நீதிக்கான குரல்களாக எழுவதை யாராலும் தடுத்து நிறுத்தி விட முடியாது. தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை இவைகள் வெறுமனே பேசிக்கொண்டிருப்பதற்கான வெற்று வேதாந்தங்கள் அல்ல. அல்லது, வெறும் தேர்தல் வெற்றிக்காக மட்டும் உச்சரிக்கும் வெற்றுக்கோசங்களும் அல்ல.

மாறாக இவைகள் அடைந்தே தீர வேண்டிய எமது மக்களின் மாபெரும் உரிமை சொத்து. தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமைக்காக நாம் இரத்தம் சிந்தி போராடியவர்கள். அதற்காக ஒரு சுதந்திர போராட்ட இயக்கத்தையே நான் வழி நடத்தி சென்றவன். இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்று நாம் தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைந்து கொண்டவர்கள். இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அன்று  ஏற்று, சரிவர நடை முறைப்படுத்தியிருந்தால் இன்று தேசியம,தாயகம், சுயநிர்ணய உரிமை என்ற  எமது இலட்சிய கனவுகள் நிறைவேறியிருக்கும்.

நாம் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற எமது உறுதி மிக்க கொள்கை வழிமுறையில் நின்று  தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமைக்காக  தொடர்ந்தும்  உறுதி கொண்டு உழைத்து வருகின்றோம்.

எமது நிலம் எமக்கே சொந்தம்!… பரம்பரை பரம்பரையாக தமது பூர்வீக நிலங்களில் வாழ்ந்து வந்த எமது மக்களை அவர்களது சொந்த நிலங்களில் தொடர்ந்தும் மீளக்குடியேற்றவும், மீளக்குடியேறிய மக்களின் வாழ்வியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் நாம்  உறுதியுடன் உழைப்போம்.

சிறைகளில் வாடும் எமது அரசியல் கைதிகளின் விடுதலைக்காக, காணாமல் போனவர்கள் குறித்த உண்மைகளை கண்டறிவதற்காக நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம். அழகிய எங்கள் தாயக தேசத்தை அழிவுகளில் இருந்தும் சிதைவுகளில் இருந்தும் இன்னமும் தூக்கி நிறுத்தும் பணிகள் தொடர்ந்தும் எம் தோள்களின்மீதே சுமத்தப்பட்டுள்ளது.

உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகவும் சகல தொழில்துறைகளின் உயரிய வளர்ச்சிக்காகவும், தமிழ் பேசும் மக்களின் நீதியான உணர்வுகளை ஏற்று அவர்களது சுதந்திர உரிமைக்காகவும் நாம் அனைத்து உழைக்கும் மக்களோடு இணைந்து உழைப்போம் என உறுதிகொள்வோம். இந்த இலக்கை அடைய எமது மதிநுட்ப சிந்தனையின் வழி நோக்கி சகல மக்களும் அணி திரண்டு வருமாறு இன்றைய மேதினத்தின் ஊடாக அறைகூவல் விடுக்கின்றேன்.

உழைக்கும் மக்களின் உரிமைகள் வெல்ல. தமிழ் பேசும் மக்களின் இலட்சிய கனவுகள் நிறைவேற இன்றைய மேதினத்தில் நாம் உறுதியெடுப்போம்!

உழைக்கும் மக்களின் ஒற்றுமை ஓங்கட்டும்

ஒடுக்கப்படுகின்ற தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் வெல்லட்டும்! – என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

வேலியே பயிரை மேய்கின்ற இத்தகைய நிலை எப்போது தகர்த்தெறியப்படும்? நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!
வடக்கின் வைத்தியசாலைகள் வளங்களற்று நலிந்து கிடக்கின்றன - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!
வடக்கில் சட்டவிரோத மணல் அகழ்வு உடனடியாக தடுக்கப்பட வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம்...