தமிழ் மக்களிடமிருந்து அகற்றப்பட முடியாதிருப்பதே எனது அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றி – அமைச்சர் டக்ளஸ் இறுமாப்பு!

Friday, February 12th, 2021

தமிழ் மக்களின் அரசியலில் இருந்து அகற்றப்பட முடியாத ஒரு கட்சியாக ஈ.பி.டி.பி இருப்பதே எமது அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகின்றேன் என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமா டக்ளஸ் தேவானந்தா, இதனை அண்மைக்காலங்களில் புதிதாக அரசியலுக்கு வந்தவர்கள் புரிந்து கொண்டு செயற்படுவது அனைவருக்கும் ஆரோக்கியமான எதிர்காலத்தை ஏற்படுத்தும் என்று தான் நம்புகின்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போது குறித்த ஊடகவியலாளர் அண்மைக் காலமாக ஏனைய அரசியல் தரப்பினiரையும் அரவணைத்துச் செல்லுகின்ற புதிய அணுகுமுறையை வெளிப்படுத்துகின்றீர்கள் இதர தரப்பினரை முன்னிலைப்படுத்தவது அரசியல் ரீதியில் உங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்துவதாக அமையாதா என எழுப்பியிருந்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

அண்மைக் காலமாக என்று சொல்ல முடியாது. மக்கள் நலச் செயற்பாடுகளில் கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்துத் தமிழ் தரப்பினரும் இணைய வேண்டும் என்பதையே தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றேன்.

சக அரசியல் தலைமைகளைப் பலவீனப்படுத்தி, சக கட்சிகளின் வேலைத் திட்டங்களை மலினப்படுத்தி, கால்தடங்களைப் போட்டு எனது கட்சியின் செல்வாக்கை உயர்த்திக் கொள்ள முடியும் என்பதை நான் என்றும் நம்புவதில்லை. அவ்வாறு நம்பியவர்கள் பலர் அரசியல் அரங்கில் இருந்து மக்களினால் ஓரங்கட்டப்பட்டு விட்டார் என்றும் சிலர் சுயத்தை இழந்து ஏனையவர்களின் வரலாறுகளுக்குள் புகுந்து கொண்டு மாறுவேடத்தில் மக்கள் மத்தியில் நடமாட முயற்சிக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற யாழ். வெளி மாவட்டங்களுக்கான தனியார் பேருந்து நிலையத்தின் திறப்பு விழாவின் போது பிரதம விருந்திராக நான் இருந்த போதிலும், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனை தேசியக் கொடியை ஏற்றுமாறும் அதேபோன்று ஆளுநர் திருமதி சார்ள்சை பெயர்ப் பலகையினை திரை நீக்கம் செய்யுமாறும் யாழ். முதல்வர் மணிவண்ணனை நாடாவை வெட்டி வைக்குமாறும் அழைத்திருந்தேன். இந்த நிகழ்வு உங்களின் அவதானத்தினை ஈர்த்த அண்மைய நிகழ்வாக இருக்கின்றது என்று நினைக்கின்றேன்.

ஆனால் இந்த அணுகுமுறையை நான் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றேன். ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட காலத்தில்கூட, பல்வேறு இயக்கங்கள் செயற்பட்டுக் கொண்டிருந்த நிலையில், கொள்கைகளை அடைந்து கொள்வதற்கான வழிமுறைகளில் எமக்கிடையே வேறுபாடுகள் காண்பபட்டாலும், மக்கள் நலச் செயற்பாடுகளில்   அனைத்து இயக்கங்களும் இணைந்து செயற்பட வேண்டும் என்ற வேலைத் திட்டத்தினை மேற்கொண்டிருந்தேன்.

பின்னர் தேசிய நீரோட்டத்தில் இணைந்து நாடாளுமன்ற பொறிமுறைக்கு ஊடாக தேசிய நல்லிணக்க அரசியலில் கால் பதித்த பின்னரும், மக்களுக்கான அபிவிருத்தி போன்ற வேலைத் திட்டங்களில் அரசியல் கொள்கைகளுக்கு அப்பால் அனைத்து தரப்பினரும் இணைந்து பயணிக்க வேண்டும் என்ற கருத்தினை முன்னிலைப்படுத்தி வந்திருக்கின்றேன். அதன் வெளிப்பாடாக, யுத்தம் நிறைவடைந்த பின்னர் ஏற்பட்ட புதிய சூழலில் தமிழ் அரங்கம் என்ற கட்சிகளை ஒன்றுபடுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது. குறித்த தேவையை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொண்டிருந்த போதிலும் தேர்தல் நெருங்கியவுடன், வாக்குகளை இலக்கு வைத்த சுயலாப அரசியல் காரணமாக யாரும் வெளிப்படைத் தன்மையுடன் அதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை.

ஆனால் என்னுடைய இந்த நல்லெண்ணச் சிந்தனையை புரிந்து கொள்ளாமல் – இதனை என்னுடைய பலவீனமாக கருதி சில தரப்பினர் செயற்படுகின்ற போதுதான் முரண்பாடுகள் ஏற்படுகின்றன. அவ்வாறு தவறான புரிதல்களை கொண்டிருப்பவர்களுக்கு அவர்கள் புரிந்துகொள்ளக் கூடிய மொழியில் புரிய வைக்க வேண்டிய தேவையும் ஏற்படுகின்றது.

அத்துடன் காலத்திற்கு காலம் எனக்கு கிடைக்கின்ற அதிகாரங்களையும் வாய்ப்புக்களையும் பயன்படுத்தி மக்களுக்கு செய்யக் கூடியவற்றை செய்து கொண்டிருகின்றேன். இதுதான் இன்றுவரை எனக்கான முகவரியை நிலைக்கச் செய்து கொண்டிருக்கின்றது.

அந்தவகையில் அண்மைய தேர்தலில் நான் எதிர்பார்த்த அல்லது மக்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகள் அனைத்தையும் அணுகக்கூடிய அதிகார பலத்தை மக்கள் தரவில்லை என்ற மனத் தாக்கம் எனக்கு தனிப்பட்ட முறையில் இருக்கின்ற போதிலும், தமிழ் மக்களின் அரசியலில் இருந்து அகற்றப்பட முடியாத ஒரு கட்சியாக ஈ.பி.டி.பி இருப்பதே எமது அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகின்றேன். இதனை அண்மைக்காலங்களில் புதிதாக அரசியலுக்கு வந்தவர்கள் புரிந்து கொண்டு செயற்படுவது அனைவருக்கும் ஆரோக்கியமான எதிர்காலத்தை ஏற்படுத்தும் என்று நம்புகின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: