தமிழ் பேசும் தரப்பினரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்திருந்தால் இலங்கைத்தீவு இரத்த தீவாக மாறியிருக்காது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Friday, January 11th, 2019

அரசியலமைப்புச் சபை பற்றி இங்கு  226 (1)  (ஏ) எனும் சரத்தில் பிரதமர் மற்றும் எதிர்க் கட்சித் தலைவரால் பெயர் குறிப்பிடப்படும் 5 பேரினை ஜனாதிபதியால் நியமித்தல் எனக் குறிப்பிடப்பட்டுள்ள விடயத்தில் 5 பேர் என்பதை 6 பேர் என அதிகரித்து, அந்த 6 பேரும் பாராளுமன்ற உறுப்பினர்களல்லாதவர்களாகவும், தகுதிவாய்ந்தவர்களாகவும் இருத்தல் வேண்டும் என அமையப் பெறுதல் வேண்டும் என்ற யோசனையை நான் முன்வைக்க விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற அரசியலமைப்பு வரைபு தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

மேற்படி அரசியல் யாப்புச் சபையே ஆணைக்குழுக்களை  நியமிக்கும் என்பதால், மாகாணத்திற்கு மாகாண அரசியலமைப்புச் சபை உருவாக்கப்பட வேண்டிய தேவையும் உள்ளது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

நிலம் குறித்து 13 வது திருத்தச்சட்டத்தில் மக்களுக்கான அரச காணிகள் பகிர்ந்தளிப்பு தொடரபான அதிகாரங்கள் புதிய அரசியலமைப்பு வரைபில் முழுமையாக நீக்கப்பட்டிருக்கின்றது.

எனவே, 13 வது திருத்தச்சட்டத்தில் இருந்த மக்களுக்கான அரச காணி பகிர்ந்தளிப்பு அதிகாரங்கள் பகிர்ந்தளிப்பு தொடர்பான விடயத்தையே புதிய அரசியல் யாப்பில் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் என நான் வலியுறுதுகின்றேன். இதன்போது, 1981ஆம் ஆண்டிற்கான சனத் தொகை மதிப்பீட்டினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றேன்.

மேலும், இலங்கை அரசியல் யாப்பின் 13வது திருத்தச் கட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த தேசியப் பட்டியல், மாகாண சபைக்கான பட்டியல் மற்றும் இடைக்காலப் பட்டியல் என்பன இந்த வரைபில் உள்ளடக்கப்படவில்லை. இதை நான் ஏற்கனவே நெறிப்படுத்தல் குழுவிற்கு சமர்ப்பித்துள்ள ஆவணத்தில் உள்ளடக்கியிருந்தேன். எனவே, மேற்படி பட்டியல்களையும் புதிய அரசியல் யாப்பில் உள்ளடக்கப்படல் வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.

1972  இலும் 1978 இலும்  கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்புகளின் போது தமிழ் பேசும் தரப்பினரின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு நடந்திருந்தால் இலங்கைத்தீவு இரத்த தீவாக மாறியிருக்காது. அமைதிப்பூங்காவாகவே இருந்திருக்கும்.

காலம் சென்ற கலாநிதி நீலன் திருச்செல்வம் அவர்கள் 90 களின் நடுப்பகுதியில் மிகச்சிறந்த ஓர் தீர்வு வரபை தயாரித்திருந்தார்.

அரசியலை ஒரு தொழில் போல் கருதாமல். தனது அரசியல் கடமையாக கருதியதாலும். தரகு அரசியலை நிராகரித்து தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிப்பவராக இருந்ததாலுமே கலாநிதி  நீலன் திருச்செல்வம் அவர்கள் அந்த வரைபை சிறந்த முறையில் தயாரித்திருந்தார்.

ஆனாலும், கான மயில்கள்  களமாடிய இடத்தில்  வான் கோழி வந்து தானும் ஆட நினைப்பது போல்,அசல்கள் இருந்த இடத்தில் நகல்கள் வந்து உட்கார்ந்திருப்பதால் தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகள் யாவும் இன்று தரகு அரசியலுக்காக விலை பேசப்படுகின்றது.

மேய்ப்பவர்கள் கதை கேட்டு வழி தடுமாறிச்செல்ல தமிழ் மக்கள் மந்தைகள் அல்ல. வழிகாட்ட வேண்டிய அரசியல் தலைமைகள் எமது மக்களின் மேய்ப்பவர்களும் அல்ல.

அரசியல் பலம் பெற்று சிலர் அதிகாரத்தில் உட்கார்ந்தால் அது அவர்களுக்கு மட்டுமே உயர்ச்சி. அதே அரசியல் பலத்தோடு நாம் அதிகாரத்தில் உட்கார்ந்தால் அது தமிழினத்திற்கே உயர்ச்சி!

அதை எமது வரலாற்றில் மெய்ப்பித்து காட்டியவர்கள் நாங்கள். சொல்வதை செய்வதும். செய்வதை சொல்வதுமே எம் வழியாகும். உள்ளதை சொல்வதும், நல்லதை செய்வதுமே எம் பணியாகும்.

பிரித்தானியாவின் ஒற்றையாட்சி முறைமைக்குள் சமஸ்டிக்கு நிகரான அதிகாரங்களை அனுபவிக்கும் ஒரு அயர்லாந்து போல், ஸ்கொட்லாந்து போல் தமிழ் பேசும் மக்களும் தலை நிமிர வேண்டும்.

Related posts:

வறுமையில் முதன்மை மாகாணங்களாக வடக்கு கிழக்கு இருக்கின்றது - டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் தெரிவிப்பு!
எம்மீது வைக்கும் நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது - முல்லை வேணாவில் மக்கள் மத்தியில் டக்ளஸ் எம்.பி. தெ...
காணாமல் போன தனது மகனுக்கு பரிகாரம் பெற்றுத்தாருங்கள் - ஈ.பி.ஆர்.எல்.எப். முன்னாள் போராளியின் தாயார...

நட்டின் அனைத்து நபர்களுக்கும் என சமமானதுமான ஒரு வரிக் கொள்கை அமுல்படுத்தப்பட வேண்டும்  - நாடாளுமன்றி...
புதிய அரசியலமைப்பு விடயத்தில் கூட்டமைப்பின் செயற்பாடுகள் சிங்கள மக்களுக்கு மட்டுமல்ல தமிழ் மக்களுக்க...
வடக்கின் வீடமைப்பு திட்டம் இம்மாதம்முதல் ஆரம்பம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!