தமிழ் நாட்டுடனான உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வதால் நாட்டுக்கே அதிகமான நன்மைகள் கிடைக்கும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

சர்வதேச அரசியலில் நிகழ்கின்ற அரசியல் மாற்றங்கள் மற்றும் அடிப்படை தந்திரோபாயங்களை கிரகித்துக் கொள்ள இயலுமான வெளிநாட்டுக் கொள்கை ஒன்றின் அவசியத்திற்கான இடைவெளி இன்னும் எமது நாட்டில் நிரப்பப்படாமலேயே உள்ளது.
மேலும், எமது அரசுகள் பல்வேறு நாடுகளுடன் உறுதிபடுத்திக் கொள்கின்ற உறவுகளைப் போன்றே இந்தியாவுடனான உறவுகளையும் பலப்படுத்திக் கொள்கின்றனவே அன்றி, எமது மக்களுடன் மிகவும் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருக்கின்ற, கலாசார, பண்பாட்டு ரீதியில் அதிகளிவிலான உறவுகள் கொண்ட, தமிழ் நாட்டுடன் எவ்விதமான உறவுகளையும் பேணுவதாக இல்லை. இதை நான் ஏற்கனவே வலியுறுத்தி இருக்கின்றேன்.
எமது நாட்டில் தென்பகுதியில் இருக்கின்ற சிலர், வடக்கு மீது வைத்திருக்கின்ற பார்வையிலேயே அரசாங்கங்கள் தமிழ் நாட்டினையும் பார்க்காது, தமிழ் நாட்டுடனான உறவுகளைப் பேணிப் பலப்படுத்திக் கொள்வதால், எமது நாட்டுக்கே அதிகமான நன்மைகள் கிடைக்கக்கூடும் என்பதே எனது நம்பிக்கையாகும்.
குறிப்பாக, வர்த்தக ரீதியில் எடுத்துக் கொண்டாலும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட ஏனைய விவசாய உபகரணங்கள், மின்னியல், இலத்திரனியல் பொருட்கள் போன்றவற்றை மிகவும் குறைந்த விலையிலும், தரமானதாகவும,; இலகுவாகவும் இறக்குமதி செய்ய முடியும்.
இதற்கான ஏற்பாடுகளை யாழ் குடாநாட்டின் மூலமாக – காங்கேசன்துறை துறைமுகத்தின் மூலமாகப் பெறக்கூடிய வாய்ப்புகள் ஏற்படுத்தப்படுமானால், எமது மக்களுக்கு நியாயமான விலையில் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கும், தற்போது பாரிய வீழ்ச்சி நிலையை நோக்கிச் செல்கின்ற எமது வர்த்தகத்துறையை மீளக் கட்டியழுப்புவதற்கும் பெரும் வாய்ப்பாக இருக்கும்.
அதேநேரம், எமது நாட்டுக்கு பெரும் தலையிடியாக இருக்கின்ற இந்திய கடற்றொழிலாளர்களது அத்துமீறியதும், தடை செய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்டதுமான கடற்றொழில் செயற்பாடுகளை புரிந்துணர்வு அடிப்படையில், நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடத்தி ஒரு முடிவுக்குக் கொண்டுவர முடியும்.
தமிழ்நாட்டு அரசத் தலைவர்களையும், அமைச்சர்களையும் உத்தியோகப்பூர்வமாக எமது நாட்டுக்கு வரவழைத்தும், எமது நாட்டு அரசின் தலைவர்கள், அமைச்சர்கள் தமிழ்நாட்டுக்கு உத்தியோகப்பூர்வ விஜயங்களை மேற்கொண்டும், உறவுகளை கட்டியெழுப்பி, பேணி வளர்த்து, சுமுகமான பேச்சுவார்த்தைகளை நடத்துவதன் மூலம் இத்தகைய நிலைமைகள் நிச்சயமாக சாத்தியமாகக் கூடும் என்றே நான் நம்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றையதினம் (25.11.2017) போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் மற்றும் வெளிவிவகாரம், அபிவிருத்திப் பணிப் பொறுப்பு ஆகிய மூன்று அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
Related posts:
|
|