தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் – ஊர்காவற்றுறையில் டக்ளஸ் தேவானந்தா!

மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை பெற்றுக்கொடுப்பது மட்டுமன்றி அரசியல் பலத்தை எமக்கு தரும் பட்சத்தில் மக்களின் தேவைகள் யாவும் உரியமுறையில் நிறைவேற்றப்படும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஊர்காவற்றுறை சின்னமடுப் பகுதியில் இன்றையதினம் (11) நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
இன்றுள்ள சூழ்நிலையில் ஏனைய தமிழ் அரசியல் தலைமைகள் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாது ஏமாற்றமளித்துள்ள நிலையில் அவர்கள் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துள்ளனர்.
குறிப்பாக தேர்தல் காலங்களில் தமது வெற்றியை மட்டும் இலக்காகக்கொண்டு மக்களிடம் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நடைமுறைப்படுத்தப்படமுடியாத பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர்.
அவர்களது உணர்ச்சிப் பேச்சுக்களாலும் உசுப்பேற்றல்களாலும் கவரப்பட்ட மக்கள் அவர்களுக்கு தமது வாக்குகளை வழங்கியிருந்தனர். இருந்தபோதிலும் மக்களின் வாக்குகளை வாரிச்சுருட்டி அபகரித்துக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது சுகபோக வாழ்க்கையை மட்டும் அனுபவித்துக்கொண்டு தம்மை நட்டாற்றில் விட்டுள்ளதாகவே மக்கள் உணர்ந்துகொள்ளுகின்றனர்.
அந்தவகையில் எதிர்வரும் காலங்களில் கிடைக்கும் சந்தர்ப்பங்களை மக்கள் உரியமுறையில் பயன்படுத்தி எமக்கு அரசியல் பலத்தை தருவார்களேயானால் ஒளிமயமான வளமான எதிர்காலத்தை நாம் பெற்றுக்கொடுப்பது மட்டுமன்றி உட்கட்டுமானம் உள்ளிட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் எம்மால் உரிய முறையில் முன்னெடுக்கமுடியும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றறேன்.
அந்தந்த கிராமங்களில் கிடைக்கப்பெறுகின்ற உள்ளூர் வளங்களை பயன்படுத்தி சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களை வளர்த்தெடுத்து அதனூடாக மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்துவதற்கான செயற்றிட்டங்களையும் மேற்கொள்ள நாம் தயாராகவே இருக்கின்றோம் என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
ஊர்காவற்றுறைக்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்தா நாரந்தனை தெற்கு சூரியாவத்தை, ஊர்காவற்றுறை மேற்கு பகுதி உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று மக்களது தேவைப்பாடுகளை அறிந்துகொண்டதுடன் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தினார்.
இதன்போது கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாகச் செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன், கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாகச் செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன், கட்சியின் ஊர்காவற்றுறை பிரதேச நிர்வாகச் செயலாளர் ஜெயகாந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.
Related posts:
|
|