தமிழ் தலைமைகள் யாரும் செய்யாதவற்றை சாதித்திருக்கிறோம். – அமைச்சர் டக்ளஸ் பெருமிதம்!

Wednesday, December 15th, 2021

தமிழ் மக்களின் வரலாற்றில் எந்தவொரு அரசியல் தலைவரும் செய்யாதவற்றை சாதித்துக் காட்டியிருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள ஒரேயொரு மாவட்டமாக கிளிநொச்சி இருக்கின்ற நிலையில், அதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் நலத் திட்ட நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காணி உறுதிப் பத்திரம் வழங்கல், யுத்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்களில் ஒரு பகுதியினருக்கான நஸ்ட ஈடு வழங்கல், சுபீட்சம் உற்பத்திக் கிராமத்தின் ஊடான வாழ்வாதாரத் திட்டம் ஆகியவை பயனாளர்களுக்கு இன்று வழங்கி வைக்கப்பட்டன.

சிவபுரம், தர்மபுரம், பிரமந்தனாறு ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“கடந்த காலத் தவறுகளில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஒருகாலத்தில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் தமிழ் மக்களின் நியாயமான எதிர்பார்ப்புக்களை ஏற்றுக்கொள்ளாது, மாற்றாந் தாய் மனப்போக்குடன் செயற்பட்டது. எனவே, ஆயுதப் போராட்டத்தினை ஆரம்பித்திருந்தோம்.

ஆனால், 87 ஆம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தின் பின்னர் ஏற்பட்ட சூழல் மாற்றம் ஆயுதப் போட்டத்திற்கான தேவையை இல்லாமல் செய்திருந்தது. இதனை தீர்க்கதரிசனத்துடன் தெரிவித்த போது, எம்மை என்று கூறி அழிக்க முற்பட்டார்கள்.

ஆனால் நாம் தொடர்ச்சியாக வலியுறுத்திய கருத்துக்கள் சரியானவை என்பதை வரலாறு நிரூபித்துள்ளது.

கடந்த கால யுத்தங்களின் பாதிப்புகள் உங்களைப் போன்றே எமக்கும் இருக்கின்றது. ஆனால் அவற்றினால் எந்தவித நன்மைகளையும் நாம் பெற்றுக் கொள்ள முடியாது. எனவே இருக்கிறவற்றையாவது பாதுகாத்து எம்மை வளப்பபடுத்த முயற்சிக்க வேண்டும்.

அதேமாதிரி, எமது அரசாங்கமாக இருந்தாலென்ன, ஏனைய நாடுகளாக இருந்தாலென்ன, எமக்கு உதவ முன்வருவார்களாயின் நாம் அவற்றை பெற்று எம்மை வளப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் 279 பேருக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், யுத்த அனர்த்தத்தினால் சொத்தழிவுகளை எதிர்கொண்டவர்களில் 57 பேருக்கு காசோலைகளும் சுபீட்சம் வாழ்வாதாரத் திட்டப் பயனாளர்களில் 186 பேருக்கு உதவித் திட்டங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

Related posts:

சிங்கப்பூரின் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர். நாதனின் மறைவு குறித்த துக்கத்தில் இருக்கும் சிங்கப்பூர் மக்...
எமது வழிமுறை நோக்கி அணிதிரளுங்கள் - நம்பிக்கையான வாழ்க்கையை வென்றெடுத்து காட்டுவேன் - டக்ளஸ் எம்.பி...
புலம்பெயர் நாடுகளுக்கு நிகரான வாழ்வு எமது தாயக தேசத்தில் உருவாகும்: அமைச்சர் டக்ளஸ் திடசங்கற்பம்!

குடியேற்றங்களைப் போன்றே மத வழிபாட்டு ஸ்தலங்களும் வலிந்து புகுத்தப்படக் கூடாது - நாடாளுமன்ற உறுப்பினர...
மக்களது நலன்களை சுரண்டாத வகையிலேயே எந்தவொரு அபிவிருத்தியும் இருக்கவேண்டும் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்...
பருத்தித்துறை, குருநகர், பேசாலை, பலப்பிட்டிய மீன்பிடித் துறைமுகங்களை அமைப்பதற்கு இந்தியாவுடன் புரிந்...