தமிழ் தலைமைகளின் தவறுகளால் தமிழ் மக்கள் மீண்டும் நெருக்கடியில் – டக்ளஸ் எம்.பி.

Saturday, May 18th, 2019

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது ஏனைய தீவிரம் பேசுவோர் கூறுவதைப் போன்று ”இல்லாத ஊருக்கு வழி கூறும்” நடைமுறைச் சாத்தியமற்ற திட்டங்களை எங்களால் முன்வைக்க முடியாது. தவறான வழிகாட்டிகளின் கதைகளை நம்பி தமிழ் மக்கள் இதுவரை இழந்தது போதும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தினக்குரல் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

அதன் முழுவிபரம் வருமாறு;

கேள்வி- உயிர்த்த ஞாயிறு தாக்குதலை எவ்வாறு நீங்கள் நோக்குகின்றீர்கள்?

பதில்: மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நாம் அனுபவித்த கொடிய யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று சம்பவங்களின்று அப்பாவி பொதுமக்கள் பல நூறுபேரை நாம் இழந்திருக்கின்றோம். பலர் காயமடைந்து இன்னும் சிகிச்சை பெற்றுவருகின்றார்கள். அவர்கள் விரைவாக குணமடைந்து வருவதற்கு தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்கப்பெறுவது அவசியமாகும்.

அதேவேளை இந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து நாட்டின் இயல்புச் சூழல் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் அச்சமின்றி பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கு பெற்றோருக்கு தயக்கம் இருக்கின்றது. அதுபோல் குறிப்பாக கிறிஸ்தவ மக்கள் அச்சமின்றி தேவாலயங்களுக்குச் சென்று ஆராதனைகளை செய்கின்ற சூழல் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. இந்த நிலைமைகள் மாற்றமடைய வேண்டும். பிள்ளைகள் ஒரு மாதத்திற்கும் மேலாக பாடசாலைக்கு செல்லாதிருப்பதால் அவர்களின் பாடவிதானங்களை உரிய கால அட்டவனையில் முடிக்க முடியாதிருக்கும். ஆகவே பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டு பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்வது அவசியம். அதுபோல் தேவாலயங்களுக்குச் சென்று மக்கள் தமது வழிபாடுகளை நடத்துவதற்கான மனோதிடத்தை பாதுகாப்பை உறுதிப்படுத்துவதன் ஊடாக அவர்களுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
நாடு விரைவாக மீண்டும் இயல்புச் சூழலுக்கு திரும்ப வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

பொறுப்பு வாய்ந்தவர்களால் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அக்கறையான முன்னெடுப்புக்கள் உரிய காலத்தில் எடுக்கப்பட்டிருந்தால் ஒருவேளை இந்த அனர்த்தங்களை தடுத்திருக்கலாம். பல உயிர்களை காப்பாற்றி இருக்கலாம்.
உறவுகளை இழந்தவர்களின் இழப்பையும், காயமடைந்து துன்பத்தை அனுபவிப்பவர்களின் வலிகளையும் நாமும் அனுபவித்தவர்கள் என்பதால் அந்த இழப்புக்களும், வலிகளும் எத்தகையது என்பதை நான் நன்கு அறிவேன். இந்த துயரமும், வேதனையும் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகவே இருக்கப்போகின்றது.
இறந்தவர்களின் உயிர்களை எவராலும் மீட்டுக்கொடுக்க முடியாது. அந்த இழப்புக்களின் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள மக்களின் கண்ணீரைத் துடைக்கவும், அவர்களின் காயங்களை குணமாக்கவும், அவர்களின் எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்கொள்ளவும் உரிய நஷ்ட ஈடுகளை அந்த மக்களுக்கு விரைவாக அரசு வழங்க வேண்டும். இறந்தவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாவும், காயமடைந்தவர்களுக்கு ஒன்று தொடக்கம் மூன்று லட்சம் ரூபாய்களும் இழப்பீடாக வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது அந்த அறிவிப்பு வெறும் அரசியல் அறிவிப்பாக இல்லாமல், மக்களைச் சென்றடைய வேண்டும்.
ஏன் இதைக் குறிப்பிடுகின்றேன் என்றால் இந்த நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியும், பரிகாரங்களும் உரிய காலப்பகுதியில் உரியவர்களுக்கு கிடைப்பதில்லை. என்பதே துரதிஷ்டமாக தொடர்கின்றது. ஆகவே இந்த விடயத்திலும் அந்த துரதிஷ்டம் தொடரக்கூடாது என்பதற்காகவே வலியுறுத்துகின்றேன்.

கேள்வி- இத்தாக்குதல் தமிழ் மக்கள் மீது எவ்வாறு தாக்கம் செலுத்தும் என கருதுகின்றீர்கள்?

பதில்: நடைபெற்ற அந்த தொடர் குண்டுவெடிப்புகளில் அதிகமான பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்களாகவே இருந்திருக்கின்றார்கள். அந்தவகையில் இந்தத் தாக்குதல்தாரிகளின் குறிப்பான இலக்கு தமிழ் மக்களாக இருந்திருக்கின்றார்களா? என்ற சந்தேகம் எழுகின்றது என்ற கேள்வியை நான் நாடாளுமன்றத்திலும் முன்வைத்திருக்கின்றேன்.

“நொண்டிக் குதிரைக்கு சறுக்கினது சாட்டு” என்பதுபோல் இந்த தாக்குதல்கள் தமிழ் மக்களின் பிரதான கோரிக்கைகளாக இருந்து வருகின்ற அரசியல் தீர்வு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, படையினர் வசமுள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகளை மீளப்பெறுவது, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் என்பவற்றில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்று இப்பிரச்சனைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுத்தருவதாகக் கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சாக்குப் போக்குகளைக் கூறித் தப்பித்துக்கொள்ள முயற்சிக்கலாம்.

தாமே ஆட்சி பீடமேற்றியும், அரசைப் பாதுகாத்தும் வருகின்ற அரசின் ஊடாக, தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சனை உட்பட்ட பிரதான பிரச்சனைகளுக்கு தீர்வைப் பெற்றுத் தருவதாக கூறிவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், மத்தியில் பெரும்பான்மை சிங்கள மக்களின் பிரதிநிதிகளாக இருக்கும் சிங்களத் தலைமைகளுடன் பொதுப்படையான உறவைப் பேணுவதிலும், அவர்களை தமிழ் மக்களின் நியாயங்களை நோக்கி இழுப்பதிலும் அக்கறை செலுத்தாமல், தத்தமது சுயலாப தரகு அரசியல் மற்றும் பொருளாதார நலனை கருத்தில் கொண்டு மத்தியில் ஒருதரப்பை பாதுகாத்துக்கொண்டும், அவர்களுக்கு முண்டு கொடுத்துக்கொண்டும், மறுதரப்புகளை தமிழ் மக்களின் எதிரிகளாகவும், தமிழ் மக்களின் நியாயங்களுக்கு முட்டுக்கட்டை போடுகின்றவர்களாகவும் அணுகிக் கொண்டிருப்பதால், புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படுவதற்கான கதவுகளை வெற்றிகரமாக ஏற்கனவே மூடச் செய்திருக்கின்றார்கள். ஆகவே தற்போதைய ஆட்சியாளர்களின் அரசியல் ரீதியான பாதுகாப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமே தங்கியிருப்பதால் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஆனால் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைக் காண்பதிலோ, கிடைக்கும் அரசியல் பலத்தை சரிவரப் பயன்படுத்தி தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள தேவைகளைத் தீர்ப்பதிலோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எப்போதும் விருப்பம் இருந்ததில்லை. அதற்கு உதாரணமாக தற்போது மத்திய அரசோடு கூட்டமைப்பு நடத்தும் தரகு அரசியல் கொள்கையும், வடக்கு, கிழக்கு மாகாணசபை அதிகாரங்களை இவர்கள் துஷ்பிரயோகம் செய்ததும் இருக்கின்றது.
கிழக்கு மாகாணசபையை தலைமையேற்று நிர்வகிப்பதற்கான பலமான சந்தர்ப்பம் இருந்தும் அதைச் செய்யாமல் அந்த வாயப்பை தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு கிழக்கு தமிழ் மக்களை அநாதரவாக தெருவில் நிறுத்தினார்கள்.
அதுபோல் வடக்கு மாகாணசபையின் நிர்வாகத்தை முழுமையாகப் பொறுப்பேற்றிருந்தபோதும் அதை வழிநடத்தத் தேவையான வழிகாட்டலைச் செய்யாமல் ஆக்கபூர்வாக மாகாணசபையை நடத்தாமல் ஐந்து வருடங்களை வீணடித்துவிட்டார்கள். இறுதியில் வடக்கு மாகாணசபையின் ஐந்துவருட சாதணை என்பது அதைப் பொறுப்பேற்றவர்களின் அதிகாரத்துஷ்பிரயோகங்களும், மோசடிகளும் நடந்ததும், அதைத் தாமே விசாரணைக்குழு அமைத்து விசாரித்தோம் என்ற பெருமிதங்களுமே மிச்சமாகியிருக்கின்றது. பலத்த எதிர்பார்ப்புகளுடன் மாகாணசபைத் தேர்தலில் வாக்களித்த தமிழ் மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவை மாகாணசபையின் குறைபாடுகளல்ல. அதைப்பொறுப்பேற்றவர்களின் குறைபாடாகும்.

இப்போது இந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகளால் தேசிய பாதுகாப்பு மற்றும் இனங்கள் சார்ந்த கருத்தியல்களில் மாறுபட்ட சூழல் ஏற்பட்டுள்ளது. உதாரணத்திற்கு புலிகள் நடத்தியது நாட்டைத் துண்டாடும் யுத்தம் என்றும் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்துவது முழு நாட்டையும் தமது பயங்கரவாத தேசமாக மாற்றும் யுத்தம் என்றவாறாக பெரும்பான்மைச் சிங்கள மக்களிடையே அபிப்பிராயங்கள் தோற்றம்பெற்றுள்ளது.

உங்களுக்குத் தெரியும், குண்டு வெடிப்புக்களைத் தொடர்ந்து மீண்டும் அவசரகாலச் சட்டம் அமுலுக்கு கொண்டுவரும் பிரேரணையை நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரும்போது , அதன் பிரயோகம், அதன் உள்ளடக்கம் தொடர்பாக எவரும் கருத்துக்களையோ, கேள்விகளையோ முன்வைக்கவில்லை. கேள்விக்கோ, வாக்கெடுப்புக்கோ இடமில்லாமல் நாடாளுமன்றத்தில் அந்த சட்டப்பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

நாட்டின் சூழல் அந்தளவுக்கு இன்று மாறியுள்ளது. ஆனாலும் அது தொடர்பாக கருத்துக்களை நான் நாடாளுமன்றத்தில் முன்வைத்தபோது, அவசரகாலச் சட்டமானது, 1971, 1989ஆம் ஆண்டுகளில் நடந்த ஜே.வி.பியின் கிளர்ச்சியின்போதும், இலங்கை, இந்திய ஒப்பந்தத்திற்கு பிற்பட்ட 1987ஆம் ஆண்டுக்குப் பின்னர் புலிகள் நடத்திய வன்முறைகளின்போதும் அவசரகாலச் சட்டமும், பயங்கரவாதச் சட்டமும் களைகளை மாத்திரமல்லாது, பயிர்களையும் சேர்த்தே அழித்தது என்பதை சுட்டிக்காட்டியதுடன் அதுபோன்ற நிலைமை எதிர்காலத்தில் நடைபெறக்கூடாது என்பதையும் சுட்டிக்காட்டியதுடன், அவசரகாலச் சட்டமானது ஒரு மனித முகத்தோடு பிரயோகிக்கப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ அவசரகாலச் சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் ஆதரவளித்துவிட்டு இப்போது அதன் உள்ளீடுகள் தொடர்பாக தாம் எதிர்வினையாற்றப்போவதாக தமிழ் மக்களிடத்தில் கதை அளந்து கொண்டிருக்கின்றார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இவ்வாறான இரட்டை அணுகுமுறையானது தமிழ் மக்களை ஏமாற்றுவதாகவும், தென் இலங்கையில் தாம் முண்டு கொடுக்கு தரப்புகளுக்கு சாமரம் வீசுவதாகவுமே இருக்கின்றது.

கடந்த பத்து ஆண்டுகளாக முகாம்களுக்குள் முடங்கிக் கிடந்த படையினர் தற்போது அவசரகாலச் சட்டத்தையும், பயங்கரவாத சட்டத்தையும் வைத்துக்கொண்டு மீண்டும் ஊருக்குள் தேடுதல்கள், பரிசோதனைகள், கைதுகள் என்று செயற்பட ஆரம்பித்திருக்கின்றார்கள். இதனால் தமிழ் மக்களுக்கும் சில நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கின்றது. அதேவேளை தேசிய பாதுகாப்பு என்ற விடயத்தில் தமிழ் மக்களும் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும். நாட்டின் தற்போதைய நிலைமையை புரிந்து கொண்டு நாம் செயற்பட வேண்டும்.

இந்தச் சூழலை தமது சுயலாப அரசியலுக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளாமல், ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளும் நிதானமாக செயற்பட வேண்டும். “கூரை ஏறிக் கோழிபிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவேன் என்றானாம்” என்ற கதையைப்போன்று சில தீவிரத் தேசியம் பேசும் அரசியல் கட்சியினர் உணர்ச்சிப் பேச்சுக்கள் பேசுவதும், மக்களின் பாதுகாப்பை சவாலுக்குட்படுத்தும் செயற்பாடுகளை திரைமறைவில் கொண்டிருப்பதும் தவிர்க்கப்பட வேண்டும். அத்தகைய குறுகிய அரசியல் கபடத்தனங்கள் எமது மக்களுக்கே பாதிப்புக்களை ஏற்படுத்தும் கடந்த காலங்களிலும் இதுவே நடந்து. எனவே மக்களை பலியிட்டேனும் அரசியல் ஆதாயம் தேட முற்படுவோரின் செயற்பாடுகள் தொடர்பாக தமிழ் மக்கள் விழிப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.

இந்த நிலைமைகள் இன்னும் மோசமான நிலையை அடைவதற்கு முன்னர் இன்று ஆட்சியாளர்களுக்கு நிபந்தனையற்ற ஆதவும், முண்டும் கொடுத்துக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமக்கிருக்கும் அரசியல் பலத்தை உரியவாறு பிரயோகித்து தமிழ் மக்களின் முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். இப்போதும் அதைச் செய்யாமல் ஆளுக்கொரு அறிக்கையும், உதவாத ஆவேசப் பேச்சுக்களையும் பேசிக்கொண்டு இருப்பதால் எதுவும் நடக்காது.

இதில் துரதிஷ்டம் என்னவென்றால் அரசோடு உறவு கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ, தமிழ் மக்களின் பிரதான பிரச்சனைகளுக்கு தீர்வைக்காண்பதற்கு முயற்சிக்காமல், அரசின் அரசியல் வேலைத்திட்டமான “கம்பெரலிய” திட்டத்தில் எவ்வாறு அபகரிப்புச் செய்யலாம், எவ்வாறு மோசடிகளைச் செய்யலாம் என்பதிலேயே அதிகமான ஈடுபாட்டைக் கொண்டிருக்கின்றார்கள்;. “கம்பெரலிய” திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பல்வேறு வகையான முறைகேடுகளிலும், மோசடிகளிலும் ஈடுபட்டுவருவதாக எமக்கு மக்களிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கின்றன. அந்த முறைப்பாடுகளை எதிர்காலத்தில் முறையாக விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுத்தி, குற்றமிழைத்தவர்கள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படுவதற்கான பணிகளை நாம் மேற்கொண்டிருக்கின்றோம் என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன்.

கேள்வி. தற்போதைய நாட்டின் நிலையில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கின்றது?

பதில்: தமிழ் மக்கள் இந்த நாட்டில் சமத்துவத்தோடும், உரிமைகளுடனும் வாழ்வதற்கு நான் நீண்ட காலமாக முன்வைத்துவரும் நடைமுறைச்சாத்தியமான தீர்வுத் திட்டமானது, 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதுதான் அதில் இன்றும் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை. இதுதான் நடைமுறைச்சாத்தியமானது. இதைச் செய்வதற்கான அரசியல் சூழல் தற்போதும் இருக்கின்றது.

கடந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின்போதும், இலங்கையில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான சிறந்த வழிமுறையாக நாம் கூறிவரும் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதையே இந்திய அரசும் அங்கு வலியுறுத்தியிருந்தது.

எம்மைப் பொறுத்தவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது ஏனைய தீவரம் பேசுவோர் கூறுவதைப்போன்று இல்லாத ஊருக்கு வழி கூறும் நடைமுறைச்சாத்தியமற்ற திட்டங்களை எம்மால் முன்வைக்க முடியாது. தவறான வழிகாட்டிகளின் கதையை நம்பி தமிழ் மக்கள் இதுவரை இழந்தது போதும், நாம் எமது மக்களை பாதுகாத்துக்கொண்டு, உரிமைகளுடனும், சமத்துவத்துடனும் இந்த நாட்டில் முகமுயர்த்தி வாழும் நடைமுறைச்சாத்தியமான பாதையிலேயே எமது மக்களுக்கு வழி காட்டி வருகின்றோம் இப்போது தமிழ் மக்கள் அதைப் புரிந்து கொண்டுள்ளார்கள் என்றே நம்புகின்றேன்.

கேள்வி- இத்தாக்குதல் எதிர்காலத்தில் எவ்வாறான பாதிப்புக்கு வழிவகுக்கும்?

பதில்: தொடர்குண்டு வெடிப்புகளும், அதனை ஒட்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளும் மக்களுக்கு பல பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. உதாரணத்திற்கு வடக்கிற்கான பயணத்தின்போது வீதிச் சோதனைகள் மீண்டும் ஏற்படுத்தப்பட்டு பயணிகள் வாகனங்களிலிருந்து இறக்கி சோதனை செய்யப்படுவதாகவும், சிறிது தூரம் நடக்கவேண்டியிருப்பதாகவும், பயணப் பொதிகளை தூக்கிக் கொண்டு சோதனைச் சாவடிகளில் நடக்க வேண்டியிருப்பதாகவும் தெரியவருகின்றது.

யுத்த காலத்திலேயே இவ்வாறான நெருக்கடிகளுக்கு எமது மக்கள் முகம் கொடுத்தார்கள். யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரும் ஓமந்தை சோதனைச் சாவடி மற்றும் ஆனையிறவு சோதனைச் சாவடிகளில் இவ்வாறான நிலைமை தொடர்ந்திருந்தபோது அது தொடர்பாக அப்போது ஆட்சியிலிருந்த மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியிடம் கதைத்து அந்த சோதனைச் சாவடிகளை அகற்றியிருந்தோம். இப்போது மீண்டும் அவ்வாறான நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது நாம் ஆட்சியில் பங்கெடுத்திருக்கவில்லை ஆகவே ஆட்சியாளர்களின் பாதுகாவலர்களாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்துடன் பேச வேண்டும். தற்போதைய நாட்டின் சூழலில் நாடு பூராகவும் ஒரே நிலைமை இருக்கையில் வடக்கிற்;கான பயணப் போக்குவரத்தில் மட்டும் யுத்தகாலத்தை ஞாபகப்படுத்தும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது யுத்த வடுக்களைச் சுமந்து வாழும் தமிழ் மக்களுக்கு மேலும் உளப்பாதிப்புக்களையே ஏற்படுத்தும் என்பதை எடுத்துரைத்து ஏனைய பகுதிகளில் முன்னெடுப்பதைப் போன்று இங்கேயும் நடைமுறைகள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

அன்மைக்காலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் சிலரும், யாழ். மாநகரசபையின் முதல்வரும் தமக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக பாதுகாப்புச் செயலாளருக்கு கடிதம் எழுதி தமக்கு பாதுகாப்பு கோரியிருந்தார்கள். இவர்களில் சிலரோ, போராட்டம் வெடிக்கும் என்றும் தமிழ் மக்கள் போராடத் தயாராக வேண்டும் என்றும் கூறினார்கள். இப்போது தமிழ் மக்களின் பாதுகாப்பு, மனித உரிமைகள், சுய மரியாதை என்பவற்றை உறுதிப்படுத்துவதற்காக எவரும் பாதுகாப்புச் செயலாளருக்கு கடிதம் எழுதவுமில்லை, குரல் கொடுக்கவும் இல்லை இதுதான் அவர்களின் அரசியல்.

கேள்வி – தாக்குதலுக்கான பொறுப்பை யார் ஏற்க வேண்டும் என கருதுகின்றீர்கள்?

பதில்: தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற தகவல்கள் முன்கூட்டியே கிடைக்கப்பெற்றும் அது தொடர்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்காத அனைவருமே இந்தக் குண்டு வெடிப்புக்களின் இழப்புக்களுக்கான பொறுப்பை ஏற்கவேண்டும். ஆட்சியாளர்கள் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று நாம் கூறும்போது, இந்த ஆட்சியாளர்களை ஆட்சி பீடமேற்றி தொடர்ந்து பாதுகாத்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் இந்த குண்டு வெடிப்புக்களுக்கு தார்மீகப் பொறுப்புக் கூறவேண்டும்.

  1. கேள்வி- இலங்கை தாக்குதலை இந்தியா உட்பட ஏனைய நாடுகள் எவ்வாறு நோக்கப்போகின்றது?

பதில்: உயிர்த்த ஞாயிறு தினத்தில் தேவாலயங்களிலும், விருந்தினர் விடுதிகளிலும் குண்டுகள் வெடித்திருந்தன. அதில் விருந்தினர் விடுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகள் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்தே நடத்தப்பட்டுள்ளது. அதில் 40க்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த குண்டு வெடிப்புகளை சர்வதேச பயங்கரவாதிகளான ஐ.எஸ் பயங்கரவாதிகள் சில உள்ளுர் அமைப்புக்களின் உதவியுடன் நடத்தியுள்ளதாக தெரியவந்தது. இதனால் சர்வதேச பயங்கரவாத அமைப்பையும், அதன் சர்வதேச தொடர்புகள், பரிமாற்றங்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பையும், நிபுணத்துவத்தையும் இலங்கை அரசு கோரியது. இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அமெரிக்கா, இந்தியா உட்பட எட்டு நாடுகள் இலங்கைக்கு உதவி வருவதாக அரசாங்கம் கூறுகின்றது.

இலங்கையில் இதுபோன்ற பயங்கரவாதம் தலை தூக்குவது ஏனைய நாடுகளைவிடவும் இந்தியாவுக்கு அச்சுறுத்தலானது என்பதால், இவ்வியடத்தில் இந்தியா, கூடுதல் ஈடுபாட்டுடன் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் தமது பங்களிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இதில் முக்கியமாகக் கூறவேண்டிய விடயமானது, பயங்கரவாத ஒழிப்பு மற்றும் அதுதொடர்பான விடயங்களை கையாள்வது தொடர்பாக இலங்கைப் பாதுகாப்புத் தரப்பு போதிய அனுபவங்களைக் கொண்டுள்ளது. எனவே இவ்விடயங்களில் இலங்கைப் பாதுகாப்புத் தரப்புகளின் அனுபவத்தை கருத்தில் கொண்டே விடயங்கள் கையாளப்பட வேண்டும். வேறு தரப்புகள் இலங்கையின் அனுபவங்களுக்கு அப்பால் விடயங்களை அணுகும்போது அது வேறுவகையான விளைவுகளைக் கொடுக்கக்கூடும்.

  1. கேள்வி- அரசியலமைப்பு மூலம் தீர்வின் நிலைமை எவ்வாறு அமையப்போகின்றது?

பதில்: புதிய அரசியலமைப்பை உருவாக்குவதிலும், அதை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதிலும் தாம் மிகவும் உறுதியோடும், அக்கறையோடும் அரசுடன் இணைந்து செயற்பட்டுவருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போதும் கூறிக்கொண்டு இருக்கின்றார்கள். அவர்கள் இப்போதாவது தமிழ் மக்களுக்கு உண்மையைக் கூறவேண்டும். உண்மையாகவே புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற பாடுபடுகின்றார்களா? இவர்கள் முண்டு கொடுத்து பாதுகாக்கும் ஆட்சியாளர்கள் உண்மையாகவே தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்கும் விருப்பத்துடன் இருக்கின்றார்களா? என்பதையும் கூட்டமைப்பினரே வெளிப்படையாக கூறவேண்டும். இன்று தமிழ் மக்களுக்கு உண்மையைக் கூறாமல் நிலைமை கையை மீறிச் சென்ற பின்னர், அரசு ஏமாற்றிவிட்டது என்றும், அரசுக்கு ஒரு பாடத்தை கற்பிக்க வேண்டும் அதற்காக தமிழ் மக்கள் ஒற்றுமையாக மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கூறுவார்கள். புதிய அரசியலமைப்பை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி எவ்வாறு தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுத்தரப் போகின்றார்கள் என்பது தமிழ் மக்களுக்கும் சொல்லப்படாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் ரகசியமாகவே இருக்கின்றது.

  1. கேள்வி-தற்போதைய அரசியல் நிலைமையில் எத்தேர்தல் முதலில் வருமென எதிர்பார்க்க முடியும்?

பதில்: இது தேர்தல் ஆண்டாக இருக்கும் என்று கூறினாலும் எந்தத் தேர்தல் முதலில் நடக்கும் என்ற தெளிவற்ற நிலைமையே இருக்கின்றது. ஆகவே தெளிவற்ற நிலைமை தொடர்பில் மக்கள் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. ஆனால் நாடு தற்போதுள்ள நிலையில் தேர்தல் ஒன்று நடைபெற்று ஸ்தீரமான அரசொன்று அமைவதும், தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு, பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்கின்ற அரசியல் சூழல் ஒன்று தோற்றுவிக்கப்பட வேண்டும்.
ஏற்கனவே மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படாமல் அச்சபைகள் மக்களின் பிரதிநிதிகளின் வழிகாட்டல்கள் இல்லாமல் செயற்படுகின்றன. மாகாணசபைக்கான தேர்தலை காலம் தாழ்த்தாமல் நடத்த வேண்டும் என்று நாமும் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றோம். தேர்தல் ஆணையளரும் இவ்விடயத்தில் முயற்சித்து களைத்துப் போய்விட்டார்போல் தெரிகின்றது.

Related posts: