தமிழ், இந்து சமய பாடநூல்கள் தொடர்பில் ஆக்க மற்றும் ஆலோசனைக் குழுக்கள் அமைப்பதற்கு தீர்மானம்!

Wednesday, April 19th, 2017

பாடசாலை மாணவர்களுக்கான இந்து சமய பாடநூல்களில் காணப்படுகின்ற எண்ணக்கரு பிழைகள், எழுத்து, சொல், பொருட் பிழைகள், பொருத்தமற்ற தெளிவற்ற மொழிநடை, மிக நீண்ட பாட விடயப் பரப்பு, கூறியது கூறல், ஒருங்கிணைப்பு இன்மை, முன்னுக்குப் பின் முரணான பல விடயங்கள் அடங்கிய பாடங்கள், அவசியமற்ற விடயங்கள், தெளிவற்ற விளக்கங்கள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள், கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ வீ. இராதாகிருஸ்ணன் அவர்களது அவதானத்திற்குக் கொண்டு வந்ததன் பயனாக ஏற்கனவே ஒரு கலந்துரையாடல் கல்வி அமைச்சில் நடைபெற்றிருந்த நிலையில், நேற்றைய தினம் (18) காலை இரண்டாவது கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

இதன்போது மேற்படி விடயங்கள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன், தமிழ் பாடத்திலும் குறைகள் நிலவுவது சுட்டிக்காட்டப்பட்டது.

எனவே, இனிவரும் காலங்களில் இவ்வாறான குறைபாடுகளை நிவர்த்திக்கும் வகையில் இவ்விரு பாடங்களையும் தயாரிப்பதற்கென, மாகாண மட்டத்தில் ஆசிரிய ஆலோசகர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், தேசிய கல்வி நிறுவகம், கல்வி வெளியீட்டுத் திணைக்களம், பரீட்சைகள் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள் அடங்கியதாக குழு ஒன்றை அமைப்பதற்கும், இந்தக் குழுவுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் துறை சார் நிபுணர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு ஒன்றை அமைப்பதற்குமான தீர்மானங்கள் எட்டப்பட்டன.

மேற்படி கலந்துரையாடலில் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் பேராசிரியர் சி. பத்மநாதன், பேராசிரியை கிருஸ்ணவேணி, கலாநிதி  ரகுவரன், ஆசிரிய ஆலோசகர் திருமதி பாலசிங்கம், ஆய்வாளர்களான  நந்தினி, த. மனோகரன், இந்திரகுமார் ஆகியோரும் கௌரவ இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணன் அவர்களது தலைமையில் கல்வி அமைச்சினதும், திணைக்களங்களினதும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

 

 

Related posts:

காணிகள் விடுவிப்பு - எழுத்தளவில் - பேச்சளவில் மாத்திரம் இருப்பதில் பயனில்லை! எமது மக்கள் குடியேற ஏ...
பாதசாரி கடவைகளில் இடம்பெறும் விபத்துக்களுக்கு கைத்தொலைப்பேசி பாவனையும் முக்கிய காரணமாகின்றது - டக்ளஸ...
பொன்னாலை ஸ்ரீ கண்ணன் கடற்றொழிலாளர் சங்க நிரந்தர கட்டடத்திற்கான அடிக்கல்லை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ...