தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் நியாயமான அணுகுமுறைகள் தேவை!

Sunday, August 20th, 2017
தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும், அக் கைதிகள் விடுவிக்கப்படுவது துரித கதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடாகும் என்றும் நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம் என்று தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இக் கைதிகள் விடுதலை செய்யப்படும் வரையில் அவர்கள் நியாயாமான முறையில் நடத்தப்படுவதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும் என அரசை வலியுறுத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கும், காணாமற் போனவர்களைக் கண்டறிவதற்கும் பாடுபடுகின்றோம் என இந்த அரசுடன் இணக்க அரசியல் நடத்துகின்ற தமிழ்த் தரப்பினர் ஊடகங்களின் முன்பாக காட்சியாகிக் கொண்டே தொடர் நாடகங்களை சில காலமாக அரங்கேற்றி வந்து, அவை  தமிழ் மக்கள் முன்பாக எடுபட்டுப் போகாத நிலையில் தற்போது அடங்கிவிட்டனர்.
தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்பையும் முனவைத்தே எமது மக்களிடம் வாக்குகள் பெற்று, இன்று இந்த அரசில் பதவிகளையும், தனிப்பட்ட சலுகைகளையும் அனுபவித்து வருகின்ற மேற்படித் தரப்பினருக்கு தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டிய பொறுப்பும் சுமத்தப்பட்டிருப்பதை அவர்கள் புறக்கணித்து விட்டார்கள். எமது மக்களது பிரச்சினைகள் என வருகின்றபோது, இயலாமை மற்றும் முயலாமைக்குள் அடங்கிவிடுவதே அவர்களது வழக்கமான அரசியலாகியுள்ளது என்பதை இப்போது எமது மக்கள் நன்குணர்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில், தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தே நாம் இந்த விடயம் குறித்த  அரசுக்கு தொடர்ந்தும் நாம் வலியுறுத்தி வருகின்றோம்.
தற்போது அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று அரசியல் கைதிகள் இன்று முதல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகத் தீர்மானித்துள்ளதாகத் தெரிய வருகின்றது. வவுனியா நீதி மன்றத்தில் நடைபெற்று வருகின்ற இக் கைதிகள் தொடர்பிலான வழக்குகள் முடிவுக்கு வரவுள்ள தருவாயில், அவ் வழக்குகளை வேறொரு நீதி மன்றத்திற்கு மாற்ற நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே மேற்படி உண்ணாவிரத செயற்பாடு முன்னெடுக்கப்பட்டள்ளதாகவும் தெரிய வருகின்றது.
மேற்படி தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படும் வரையில் அவர்கள் நியாயாமான வகையில் நடத்தப்பட வேண்டும் என நாம் ஏற்கனவே வலியுறுத்தியிருந்த நிலையில், தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த குழப்ப நிலை தொடர்பில் அரசு உடனடி அவதானங்களைச் செலுத்தி, இக் கைதிகளுக்கு உரிய நியாயம் வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீண்டும் அரசை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

யுத்த அழிவிலிருந்து மீண்ட மக்களை அபிவிருத்தியால் தூக்கி நிறுத்துவேன் - முல்லை. மக்களிடம் டக்ளஸ் தேவா...
கடந்த கால யுத்தம் தேசிய நல்லிணக்கத்திற்கான பாடமாக அமைய வேண்டுமே அன்றி இன்னுமொரு யுத்தத்திற்கான பாலமா...
தினகரன் பத்திரிகையின் வட பகுதிக்கான விஷேட பதிப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ஹெகலிய ரம்புக்...