தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் மனிதாபிமானமே தேவைப்படுகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Monday, April 1st, 2019

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் இன்னும் அப்படியே இழுபட்டுக் கொண்டே இருக்கின்றது. தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டால்தான் தமிழ்த் தரப்பு அரசியல்வாதிகளுக்கு தமிழ் அரசியல் கைதிகள் பற்றிய நினைப்பே வருகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு, பொது நிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

கடந்த பொதுத் தேர்தலின்போது, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்போம் என்று கூறிய இந்த தமிழ் அரசியல் தரப்பினர், இந்த ஆட்சி வந்தவுடன், இந்த ஆட்சியை நாங்கள்தான் கொண்டு வந்தோம் என்றவர்கள், கடந்த ஆட்சி மாற்றத்தின்போது, இந்த ஆட்சியை காப்பாற்றுவதற்காக இரவு, பகல் ஓடித் திரிந்தவர்களால், இந்த தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பில் ஒரு துரும்பைக் கூட இதுவரையில் அசைக்க முடியவில்லை என்றால், பிறகெதற்கு அவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எனக் கூறிக் கொள்ள வேண்டும்? என எமது மக்களே இன்று கேட்க ஆரம்பித்துவிட்டனர்.

இந்தத் தமிழ்த் தரப்பினர் அழுத்தங் கொடுக்கவில்லையே என்பதற்காக அரசும் இந்த தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பிலான விடயத்தில் மௌனம் சாதித்துக் கொண்டே வருகின்றது என்றே நினைக்க வேண்டியிருக்கின்றது. அப்படி நினைப்பதில் தவறேதும் இல்லை என்றே நினைக்கின்றேன். அதாவது இந்த அரசு தாம் சொல்வதைத்தான் கேட்கும் என இந்தத் தமிழ்த் தரப்பினரே கூறி வருகின்றனர்.

இந்தத் தமிழ்த் தரப்பினருக்கு கொடுக்க வேண்டியதை ‘அழுத்தமாகக்” கொடுத்துவிட்டால் போதும், அவர்கள் எமது மக்களது பிரச்சினைகள் தொடர்பில் அழுத்தங்களே கொடுக்க மாட்டார்கள் என்பதும் அரசுக்குத் தெரியும்.

அந்த எண்ணத்தில் எமது மக்களது பிரச்சினைகள், தேவைகள் எதுவும் தீர்க்கப்படாமல் விடக்கூடாது என்பதற்காகவே நான் தனித்தேனும் இருந்து குரல் கொடுக்க வேண்டியிருக்கின்றது.

அந்தவகையில், இங்கு அரசியல் என்பதைவிட மனிதாபிமானமே தேவைப்படுகின்றது. தமிழ் அரசியல் கைதிகள் பிரச்சினை தொடர்பில் முதலில் தேவை மனிதாபிமானமாகும்.

அதேபோன்று தமிழ் மக்களின் பிரச்சினைகள், தேவைகள் தொடர்பிலும் இதே மனிதாபிமானமே இன்று தேவைப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:

ஜனாதிபதியின் நல்லெண்ண சமிக்ஞையும் மக்கள் எமக்கு வழங்கப்போகும் ஆணையும் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தி...
சாதாரண சூழல் ஏற்படும் வரையில், வடக்கின் கூட்டுறவுச் சங்கங்களின் பதவிக் காலத்தினை நீடிப்பது தொடர்பில்...
வடக்கு தமிழ் மக்களை இந்தியா மறந்து விடவில்லை என்பதன் எடுத்துக்காட்டே இந்த மனிதாபிமான உதவிகள் – அமைச்...

இரணைமடு நீர்த்திட்டம் குறித்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் எடுத்திருக்கும் நிலைப்பாடு சக தமிழ் கட்சித் தல...
நிர்வாகத்துறை முடக்கப்பட்டால் வளங்களை தொல்பொருள் துறை ஆக்கிரமிக்கும் ஆபத்து – எச்சரிக்கிறார் டக்ளஸ் ...
எதை எங்கே கதைத்து எமக்கான தீர்வுகளைப் பெற வேண்டும் என்பதில் நாம் தெளிவாகவே இருக்கின்றோம் - அமைச்சர்...