தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Saturday, November 18th, 2017

எமது நாட்டிற்கு பொது மன்னிப்பு என்பது தமிழ், சிங்கள இளைஞர்களைப் பொறுத்தவரையில் புதியதொரு விடயமல்ல. அந்தவகையில் தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும் என நீதியமைச்சர் அவர்ளிடம் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் பாதுகாப்பு அமைச்சு, நீதி அமைச்சு, சட்டம், ஒழுங்கு மற்றும் தென் பகுதி அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்தகொண்டு உரையாற்று கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

எமது நாட்டில் இன்னும் தீர்க்கப்படாத சுமார் 7 இலட்சத்து 95 ஆயிரம் வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கியிருப்பதாகத் தெரிய வருகின்றது. நாட்டில் போதிய நீதிமன்றங்கள் இன்மையும் இதற்கொரு காரணமாகக் கூறப்படுகின்றது.

அந்த வகையில், நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்குரிய தேவைகள் இருப்பதாகவே தென்படுகின்றது.

அதே நேரம் கொழும்பில் தற்போது 07 மேலதிக நீதிமன்றங்களே செயற்படுகின்ற நிலையில் இதன் எண்ணிக்கையை 10 ஆக அதிகரிப்பதே தற்போதைய நிலைக்கு உகந்தது என்ற கருத்தும் நீதித்துறையினர் மத்தியில் இருந்து வருகின்றது.

இதுவரையில் தீர்க்கப்படாமல் தாமதமாகியுள்ள மனித உரிமைகள் தொடர்பிலான பல வழக்குகளை மாகாண மேல் நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்தககூடிய ஏற்பாடுகளையும் மேற்கொள்ள முடியும் என்ற கருத்தும் நீதித்துறையினரிடம் நிலவுகின்றது. இத்தகைய வழக்குகள் அவசர வழக்குகளாகக் கருதப்பட்டு, விரைவில் அவற்றைத் தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, காத்திரமான சமுதாய உருவாக்கத்திற்கு உதவ முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

இதன்போது, நான்; தொடர்ந்தும் தெரிவித்து வருகின்ற ஒரு விடயம், தமிழ் மொழி மூல பரிச்சயம் மாத்திரம் கொண்டவர்களால் தொடுக்கப்படுகின்ற வழக்குகளின் போதும், தமிழ் மொழி மூலப் பரிச்சயம் மாத்திரம் கொண்டவர்கள் ஆஜராக வேண்டிய வழக்குகளின்போதும், இம் மக்கள் மொழி காரணமாக நீதிமன்றங்;களில் பாரிய பாதிப்புகளுக்கும், சிரமங்களுக்கும் உட்படுகின்றனர். இந்த நிலையில் துரித மாற்றங்கள் கொண்டுவரப் படுதல் அவசியமாகும்

‘சிங்களமும், தமிழும் நீதிமன்றங்களின் மொழியாக இலங்கையின் எல்லாப் பிரதேசங்களிலும் இருத்தல் வேண்டும். எவரேனும் கட்சிக்காரர் அல்லது விண்ணப்பதாரர் அத்தகைய கட்சிக்காரரின் அல்லது விண்ணப்பதாரியின் பிரதிநிதியாக இருப்பதற்குச் சட்டப்படி உரித்துடைய ஆள், ஒன்றில் சிங்களத்தில் அல்லது தமிழில் வழக்குத் தொடரலாம்’ என மொழி உரிமை தொடர்பான அரசியல் அமைப்பின் 4ஆம் அத்தியாயத்தின் உறுப்புரைகள் குறிப்பிடுகின்றன.

இருப்பினும், இன்று மொழிப் பரிச்சயம் அற்ற காரணத்தால் எமது மக்கள் நீதிமன்றங்களில் படுகின்ற அவஸ்தைகளும், தேங்கியிருக்கின்ற வழக்ககளின் எண்ணிக்கையும் கொஞ்சநஞ்சமல்ல. எனவே இந்த விடயத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அந்தவகையில், பதவி உயர்வுகளுக்காகவும், ஊதிய உயர்வுகளுக்காகவும், ஏனைய வரப்பிரசாதங்களுக்காகவும் இரண்டாம் மொழியினைக் கற்பவர்களால் இந்தப் பணிகளை ஒழுங்குற ஆற்ற முடியாது. அதற்கென தமிழ் மொழிப் பரிச்சயமும், அதே வேளை, தமிழ் கலாசார, பண்பாட்டு விழுமியங்களில் பரிச்சயமும் உடையவர்களே தேவைப்படுகின்றனர்.

அந்த வகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேற்படி பரிச்சயங்களைக் கொண்ட நீதிபதிகளை மேலதிகமாக நியமிப்பதற்கும், வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் அனைத்து தர நீதிமன்றங்களிலும் மேற்படி பரிச்சயங்களைக் கொண்ட நீதிபதிகளை போதியளவு நியமிப்பதற்குமான ஏற்பாடுகள் அவசியமாகும் என்பதை மீண்டும், மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன்.

அதே நேரம், தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும் என்ற விடயம் குறித்தும் கௌரவ நீதியமைச்சர் அவர்கள் மேலும் அவதானத்தைக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன். பொது மன்னிப்பு என்பது தமிழ், சிங்கள இளைஞர்களைப் பொறுத்தவரையில் எமது நாட்டிற்கு புதியதொரு விடயமல்ல.

நீதி மன்றங்களில் போதியளவு மொழிபெயர்ப்பாளர்கள், சுருக்கெழுத்தாளர்கள் மற்றும் தட்டெழுத்தாளர்களை இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஏற்பாடானது மும் மொழிகள் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும்.

வழக்குகள் தாமதமடையாது விரைவு படுத்தலுக்கு ஏதுவாக வழக்கு தொடுத்தல் விடயத்தில் சட்டமா அதிபர் திணைக்களமும் துரித செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும். இதற்கு போதிய வளங்களையும், வளவாளர்களையும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு வழங்க வேண்டியதும் அவசியமாகும்.

Related posts:

வவுனியா விஞ்ஞானன் குளம் மக்களது அடிப்படை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ்...
ஈழமக்கள் ஜனநாய கட்சியின் செயலாசெயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது பங்கேற்புடன் இந்துக்களுக்கான...
யாழ். சிறுத்தீவினை அண்டிய கடற் பிரதேசத்தில் நீர் வேளாண்மையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் அமைச்சர் ட...