தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ந்து தடுப்பில் வைத்திருக்க உத்தேசமா? –  டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Monday, August 15th, 2016

கடந்தகால அனைத்துத் தேர்தல்களின்போதும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் உடனடி நடவடிக்கைகளை எடுத்து, அவர்களை விடுதலை செய்வோமென வாக்குறுதிகளை வழங்கி, எமது மக்களின் அதிகளவிலான வாக்குகளைப் பெற்றுக் கொண்டு ஆளுந்தரப்பில் பதவிகளை ஏற்று, அனைத்து சுகபோகங்களையும் அனுபவித்து வருபவர்கள் இன்று அந்த விடயத்தை மறந்தவர்களாகவும், மேலும் பொறுமை காக்கும்படி கூறி வருகின்றவர்களாகவும் இருக்கிறார்கள்.  இதே கூட்டத்தைச் சேர்ந்த ஒரு சிலர் தங்களது அரசியல் விளம்பரத்திற்காக தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களை முன்னிலைப்படுத்தி போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். இப்படியான போராட்டங்களை இவர்கள், இவர்களுக்கெதிராகவே மேற்கொள்கின்றனர் என்பதை இவர்கள் உணர்ந்து கொண்டாலும் – உணரந்து கொள்ளாவிட்டாலும் அவை மக்கள்மயப்படுத்தப்படாத காரணத்தால் எமது மக்களுக்கு இது தொடர்பில் ஒருவித குழப்ப நிலையே ஏற்படுகின்றது. எனவே, இவர்கள் தொடர்பில் எமது மக்கள் விழிப்பாக இருக்க வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், இந்தக் கைதிகளின் விடுதலை தொடர்பில் நான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றேன். கடந்த காலத்தில் நாம் இலங்கை ஆட்சியாளர்களுடன் இணக்க அரசியல் நடத்தியிருந்தோம். அந்த ஆட்சிகள் யுத்தத்தை நடத்திக் கொண்டிருந்த ஆட்சிகளாகவும், யுத்தத்தை வென்ற ஆட்சியாகவுமே இருந்தன. ஆகையால் எமக்கிருந்த அரசியல் பலத்திற்கேற்ப அத்தகைய ஆட்சியாளர்களுடன் எமது மக்களின் ஏனைய தேவைகளை போதியளவு பூர்த்தி செய்துகொள்ள இயலுமாக இருந்தன. இருப்பினும, மேலும் பல விடயங்கள் தீர்க்கப்படாமல் தொடரப்பட்டன. இது தொடர்பில் நான் அன்றும், இன்றும் வெளிப்படையாகவே கூறிவருகின்றேன்.

இவ்வாறானதொரு பின்னணி இருக்கும் நிலையில், ‘அப்போது செய்யாத நீங்கள் இப்போது ஏன் அவை குறித்து குரல் கொடுக்கிளீர்கள்’ என சிலர் குருட்டுக் கேள்விகளைக் கேட்கும் சந்தர்ப்பங்களும் இல்லாமலில்லை. சுடலை ஞானம், கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்றெல்லாம் கூறுகின்றனர். இப்டிக் கூறுபவர்கள், ஆரம்பத்தில் நாம் செய்த மக்கள்  பணிகளை விமர்சித்து அதற்கான தடைகளைக் கொண்டு வந்தார்கள். இப்போது எமக்கு அரசியல் அதிகாரம் இல்லாத நிலையில், அரசியல் அதிகாரமுள்ளவர்களை நோக்கி நாம் எமது மக்களின் பிரச்சினைகளை கொண்டு சென்று, அவற்றைத் தீர்த்து வருவதைப் பார்த்து அதனையும் தடுக்கும் நோக்கில் இப்போது இவர்கள் செயற்பட்டு வருகிறார்கள். உண்மையில் எமது மக்களை நேசிக்கும் எவரும் இப்படியான கருத்துக்களை வெளியிட மாட்டார்கள்.

அந்த வகையில் தற்போதைய ஆட்சியைக் கொண்டு வந்தவர்கள் தாங்களே எனக் கூறிக்கொண்டு, பதவிகளையும், சலுகைகளையும் பெற்றிருப்பவர்கள் தற்போதைய அரசைக் கொண்டு எமது மக்களின் பல பிரச்சினைகளைத் தீர்த்திருக்க வேண்டும். தீர்த்திருக்க முடியும். ஏனென்றால், இப்போதைய ஆளுந்தரப்பானது, முன்னைய ஆட்சிகளைப் போலல்லாது, தமிழ் மக்களின் மனங்களை வெல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகத் தெரியவருகிறது. ஆனால், எமது மக்களின் துரதிஷ்டம், அவ்வாறு எமது மக்களின் பிரச்சினைகள் எதுவும் தீர்ந்ததாகவோ, தீரப் போகுமென்றோ இதுவரை தெரிய வந்துள்ளதாக இல்லை. இப்போதும்கூட எதிர்த்தரப்பில் இருந்தும் எமது மக்கள் நலன் சார்ந்த பணிகளை குரல் கொடுத்தாவது நாமே மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அந்த வகையில் மேற்படி தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் அண்மையில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தேன். பிரதமர் உள்ளிட்ட பல தரப்பினரிடம் நேரில் கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன். அதற்கு சாதகமான பதில்கள் இன்னும் இல்லை. எனினும், இந்த அரசுடன் இணக்க அரசியல் நடத்தும் தரப்பானது பல்வேறு நிலைகளில் அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டியுள்ள ஒரு பலமான நிலையைக் கொண்டிருப்பதால் இந்த விடயத்தில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இவர்கள் நினைத்திருந்தால், கடந்த 100 நாட்கள் ஆட்சிக் காலத்திலேயே இப் பிரச்சினையைத் தீர்த்திருக்க முடியும்.  ஆனால், அதனை இவர்கள் செய்யாமல் தொடர்ந்து இழுத்தடித்து வருகிறார்கள். அடுத்த தேர்தலுக்கான வாக்குறுதி மூலதனமாகவும் இப் பிரச்சினையை இவர்கள் புதியதொரு வடிவில் கொண்டுவர இருக்கிறார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்மை  குறிப்பிட்டத்தக்கது.

Related posts:

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். எதிர்காலத்தை வளம் மிக்கதாக கட்டியெழுப்ப நம்பிக்கையுடன் அணி திரண்டு ...
ஊழல் ஒழிப்புச் சட்டத்தில் திருத்தங்கள் வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி வலியுறுத்து!
கடற்றொழிலாளர்களுக்கு 55 அடி நீளமான படகுகளை 50 வீத மானிய விலையில் வழங்கப்படுவது தொடர்பில் குழப்ப நில...

கோண்டாவில் ஸ்ரீ சந்திரசேகர விநாயகர் ஆலய தேர் திருவிழா சிறப்பு பூசை வழிபாடுகளில் செயலாளர் நாயகம் டக்ள...
நெளுக்குளம் பிள்ளையார் கோயில் வீதிக்கான அடிக்கல் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ஜோன்சன் பெனான்டோ ஆகி...
பொருளாதார நெருக்கடிகளை மக்கள் எதிர்கொள்ளும் நோக்கில் சாதகமான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பா...