தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பது எமது மக்களின் உணர்வுகளுடன் தொடர்புடைய முக்கிய விடயமாகும் – டக்ளஸ் தேவானந்தா

Friday, June 10th, 2016

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பது எமது மக்களின் உணர்வுகளுடன் தொடர்புடைய முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. யுத்தத்தை வெற்றிகொண்டது போன்று தமிழ் மக்களை தென்பகுதி வென்றெடுக்கவில்லை என்ற கருத்துக் கோட்பாட்டில் தற்போதைய அரசு செயற்பட்டு வருகின்ற நிலையில் தமிழ் மக்களை வென்றெடுக்கக்கூடிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கில் இந்த அரசு தமிழ் கைதிகள் விடயத்தில் செயற்படும் என நம்புவதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா  தெரிவித்துள்ளார்.

இன்று (10) நாடாளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 23/2 இன் கீழ் எழுப்பப்படும் வினாக்கள் நேரத்தில்  சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மீள் குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் கௌரவ டி. எம். சுவாமிநாதன் அவர்களிடம் குறித்த விடயத்தை முன்வைத்து உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது –

பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான தொடர்புகள் சம்பந்தமான குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் 150ற்கும் மேற்பட்டவர்கள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரியவருகிறது.

இவர்களை விடுதலை செய்வது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தும் மேற்படி கைதிகள் உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தியும் இக் கைதிகளின் உறவினர்கள் பல்வேறு அகிம்சாவாதப் போராட்டங்களை நடத்தியும் இக் கைதிகளது விடுதலை என்பது இன்றும் கைகூடாத நிலையிலேயே காணப்படுகின்றது.

இக் கைதிகள் பல வருட காலமாக சிறைகளில் பெரும் துயரங்களை அனுபவித்துவரும் நிலையினையும்  இவர்களது குடும்பங்கள் பாரிய பாதிப்புகளை அடைந்துள்ள நிலையினையும் தாங்கள் நன்கு அறிவீர்கள் என எண்ணுகின்றேன்.

இவர்களது விடுதலை என்பது எமது மக்களின் உணர்வுகளுடன் தொடர்புடையதொரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதையும் தாங்கள் அறிவீர்கள். யுத்தத்தை வெற்றிகொண்ட போதிலும் தமிழ் மக்களை தென்பகுதி வென்றெடுக்கவில்லை என்ற கருத்துக் கோட்பாட்டில் மேன்மைதங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ தலைமையிலான தற்போதைய அரசு செயற்பட்டு வருகின்ற நிலையில் தமிழ் மக்களை வென்றெடுக்கக்கூடிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கில் இந்த அரசு செயற்படும் என நம்புகின்றேன். என தெரிவித்த அவர் –

குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபர்களாக தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்கு ஏதேனும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பது பற்றி அறியத்தர முடியுமா? எனவும்

இவ் வருட வெசாக் பண்டிகையின்போது  70 கைதிகளின் மரண தண்டனையை பொது மன்னிப்பின் அடிப்படையில் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் ஆயுள் தண்டனையாக மாற்ற நடவடிக்கை எடுத்ததைப்போல் மேற்படி கைதிகளில் தண்டனை பெற்றவர்களின் தண்டனைக் காலத்தைக் குறைக்க ஏதாவது நடவடிக்கை எடுக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டா? எனவும்-

இதுவரையில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாமல் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை மனிதாபிமான ரீதியிலான அணுகுமுறையின் கீழ் பொது மன்னிப்பு அடிப்படையில்  விடுதலை செய்ய முடியுமா என்பது பற்றி அறியத்தர முடியுமா? எனவும் –

தன்னை கொலை செய்ய வந்த நபரை மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்தது போன்று மேற்படி கைதிகளை விடுவிக்கக்கூடிய வழிமுறைகள் குறித்து நடவடிக்கைகளை எடுக்க முடியுமா என்பது குறித்து அறியத்தர முடியுமா? எனவும் – கேள்வி எழுப்பியதுடன் மேற்படி வினாக்களுக்கான பதில்களையும் நடவடிக்கைகள் தொடர்பிலான விளக்கங்களையும் கௌரவ அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் அவர்கள் வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

 

Related posts:

நாட்டில் பதற்றங்கள் ஏற்படவேண்டும் என்ற கொள்கையிலேயே பலரும் இருக்கின்றீர்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் எ...
மக்களின் நலன்களை வென்றெடுக்க ஒன்றுபட்டு உழைப்போம் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
கடல்சார் அனர்த்த முகாமைத்துவ நிலையமொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு!

'எழுக தமிழ்' கூட்டுப்பேரணியை வெற்றிபெறச் செய்வோம். மக்களே அணிதிரண்டு வாரீர்! அலை கடலென வாரீர்!! ஈழ...
தெற்கு மக்களின் மனிதநேயம் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப பெரிதும் உதவும் – டக்ளஸ் எம்.பி. நம்பிக்க...
வேலணையில் உருவாகிறது நவீன இறால் வளர்ப்பு பண்ணை – அங்குரார்ப்பணம் செய்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவ...