தமிழ் அரசியல்கைதிகளின் பிரச்சினை தொடர்பில் விரைவான சாதகமான ஏற்பாடுகள் தேவை – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Wednesday, March 21st, 2018

தமிழ் அரசியல்கைதிகளின் பிரச்சினை தொடர்பில் விரைந்த சாதகமான ஏற்பாடுகள் தேவை என்பதையே நான் மீண்டும், மீண்டும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன். அவர்கள் குற்றங்களுடன் தொடர்பு பட்டிருந்தால் அது குறித்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, துரித விசாரணைகள் நடத்தப்பட்டு, தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அல்லது அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றையதினம் நாடாளுமன்றில் நடைபெற்ற நம்பிக்கைப் பொறுப்புக்கள் திருத்தச் சட்டமூலம், நீதித்துறை சட்டம், சட்டக் கல்விப் பேரவை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையளில் –

தமிழ் அரசியல் கைதிகளில் பலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வழக்குகள் கொழு;புக்கு வெளியிலுள்ள  நீதி மன்றங்கள் பலவற்றிலும்; தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைகளிலிருந்து வெகு தொலைவிலுள்ள நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைத் தவணைகளுக்காக கொண்டு செல்லப்படுகின்ற தமிழ் அரசியல் கைதிகள், சில தினங்கள் அந்த நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்திற்கு உட்பட்ட சிறைச்சாலைகளில் அல்லது மறியச்சாலைகளில் தடுத்து வைக்கப்படுகின்றபோது, ஏனைய கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்களில் தொடர்புபட்ட கைதிகளுடன் ஒன்றாக தடுத்து வைக்கப்படுகின்ற நிலையில், தமிழ் அரசியல் கைதிகள் எதிர்கொள்கின்ற இடையூறுகள், கொடுமைகள் என்பன ஏராளம் என்றும் தெரிவிக்கின்றனர்.

இத்தகைய நிலைமைகளில் பல்வேறு தாக்குதல்களுக்கு உட்படுகின்ற நிலைமைகளும் இல்லாமல் இல்லை என்று தெரிவித்துள்ள தமிழ் அரசியல் கைதிகள், முன்னர் வெலிக்கடை சிறைச்சாலையில் அரசியல் கைதிகளுக்கென தனியான ஏற்பாடுகள், பாதுகாப்பு என்பன  இருந்தன என்றும், தற்போது அந்த நிலைமைகள் மாற்றப்பட்டு, ஏனைய குற்றவியல் வழக்குகளுடன் தொடர்புள்ள கைதிகளுடனேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

அதே நேரம், மாலைத்தீவு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, மாலைத்தீவில் 9 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டு, இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள  மூவர் கடந்த 3 வருடங்களாக வெலிக்கடைச் சிறையில் எவ்விதமான வழக்குகளும் தாக்கல் செய்யப்படாத நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிய வருகின்றது.

எனவே, தமிழ் அரசியல்கைதிகளின் பிரச்சினை தொடர்பில் விரைந்த சாதகமான ஏற்பாடுகள் தேவை என்பதையே நான் மீண்டும், மீண்டும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன் என அவர்செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:

மக்களின் பலமானஆணை கிடைத்தால் அரசியல் கைதிகளை விடுதலை செய்வேன் - செய்வதைத்தான் சொல்வேன் – அமைச்சர் டக...
இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரம் - அமைச்சர் டக்ளசுடன் கலந்துரையாட இந்திய தூதரகம் விருப்பம்!
லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் அதிகாரிகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்துக் கலந்துரையாடல்...