தமிழர்களை அரசியல் தோல்விக்குள் தள்ளிவிடவே கூட்டமைப்பு முயற்சிக்கின்றது – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Tuesday, March 19th, 2019

சர்வதேசத்தை நம்புவதை விடவும் தமிழ் மக்களுக்கு வேறு வழி இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்திருப்பது அவரது அரசியல் தோல்வியையும், இயலாத்தனத்தையுமே வெளிக்காட்டுகின்றது. சர்வதேசத்தைத்தான் தமிழ் மக்கள் நம்பவேண்டும் என்றால், அதில் இடைத்தரகர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் இருக்கவேண்டும். அரசுக்கு முண்டு கொடுத்து தமது சுயலாபங்களை பெற்றுக்கொள்ளும் கூட்டமைப்பு தமிழ் மக்கள் சர்வசேத்தைத்தான் நம்பவேண்டும் என்று கூறுவது தமிழ் மக்களுக்குச் செய்யும் துரோகமாகும் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அந்தச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது, தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் பிரேரணைக்கு காலவரையறையற்ற காலக்கெடுவைப் பெற்றுக்கொடுப்பதற்கு தரகு அரசியல் செய்து கொண்டு அரசுக்கு முண்டு கொடுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் தன்னெழுச்சியாக நடத்தும் அரசுக்கு காலக்கெடு வழங்கக்கூடாது என்ற போராட்டங்களிலும் முன்வரிசையில் கலந்து கொண்டு அந்தப் போராட்டத்திற்கும் தாம் ஆதரவு வழங்குவதாக காட்டிக்கொள்கின்றனர்.

அடுத்த பொங்கலுக்கு தீர்வு என்றும், அடுத்த தீபாவளிக்குத் தீரவு என்றும், மே தினத்திற்கு முன்னர் தீர்வு என்றும், சுதந்திர தினத்திற்கு முன்னர் தீர்வு என்று தொடர்ந்து தமிழ் மக்களுக்கு போக்குக் காட்டும் அரசியலை முன்னெடுத்து அதற்கான சலுகைகளை அரசிடமிருந்து பெற்றுக்கொண்ட சம்மந்தன், இப்போது தமிழ் மக்களுக்கு சர்வதேசத்தை விட்டால் வேறு வழியில்லை என்று சர்வதேச பிரதிநிதிகளிடம் கூறி வருகின்றார்.

தமிழ் மக்களை அந்தக் கடவுள்தான் காப்பாற்றவேண்டும் என்று முன்னர் கையைவிரித்தவர்களின் வழித்தோன்றல்களாக அரசியலில் ஈடுபட்டவர்கள், தமக்கு தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்து பலப்படுத்தினால், தாமே இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்குள் தமிழ் மக்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான சுயநிர்ணய உரிமையைப் பெற்றத் தருவதாகவும், சர்வதேச சமூகத்தை அழைத்துவந்து நீதியைப் பெற்றுத்தருவதாகவும் ஒவ்வொரு தேர்தல்களிலும் கூறியவர்கள் இப்போது தமக்கு தேவையான சலுகைகளைப் பெற்றுக்கொண்ட பின்னர், தமிழ் மக்களுக்கு சர்வதேசத்தை விட்டால் வேறுவழியில்லை என்று கூறுகின்றார்கள்.

போலியான தமிழ்த் தேசிம் பேசிக்கொண்டு, சுயலாப அரசியல் நடத்துவோர் தாமும் தோற்றுப்போய், தமிழ் மக்களையும் அரசியல் ரீதியாக தோல்வியடைச் செய்யவே முற்படுகின்றார்கள். இத்தகையவர்களின் கபடத்தனத்தை தமிழ் மக்கள் புரிந்துகொண்டு அவர்களை முற்றாக நிராகரித்து எதிர்காலத் தீர்மானங்களை எடுக்கவேண்டும் என்றும் செயலாளர் நாயகம் டகளஸ் தேவானந்தா அவர்கள் விடுத்துள்ள செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: