தமிழரது சாத்வீக எண்ணங்களை அரசுகள் ஏற்றிருந்தால் இலங்கைத்தீவு இரத்தத்தீவாக மாறியிருக்காது  – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Friday, October 12th, 2018

தமிழ் மக்களின் நியாயமான சாத்வீக எண்ணங்களை அன்றைய தென்னிலங்கை அரசுகள் ஏற்று நடந்திருந்தால், இலங்கைத்தீவு இரத்தத்தீவாக ஒருபோதும் மாறியிருக்காது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் மறைந்த கௌரவ மகாத்மா காந்தி அவர்களது 150வது ஆண்டு ஞாபகார்த்தம் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

மகாத்மா காந்தியின் அகிம்சை வழிப் போராட்டம். ஆங்கிலேயர்களிடமிருந்து தமது தாய் நாட்டை விடுவித்துக் கொள்வதற்கு மகாத்மா ஏந்திய வலிமை மிகுந்த ஆயுதமே அகிம்சை வழிப் போராட்டம்.

இன்று, வடக்கிலே எமது மக்கள் வருடக் கணக்கில் தங்களது சொந்த காணி, நிலங்களை விடுவித்துக் கொள்வதற்காக, காணாமற் போகச் செய்யப்பட்ட தங்களது உறவுகளைக் கண்டறிவதற்காக அகிம்சை வழிப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மகாத்மாவின் அகிம்சை வழிப் போராட்டத்திற்கு ஆங்கிலேயர்கள் செவி மடுத்தனர். ஆனால் இந்த நாட்டில் எமது மக்களின் அகிம்சை வழிப் போராட்டத்திற்கு யாருமே செவிமடுப்பதாக இல்லை.

எமது உரிமைக்கான போராட்டமும் அகிம்சையில் தொடங்கியதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் எமது மூத்த அரசியல் தலைவர்களின் அகிம்சைப்போராட்டம் மாகாத்மாவின் அகிம்சையைப்போல் வலிமை மிக்கதாக  இருக்கவில்லை.

மகாத்மாவின் சில நடைமுறைகள் குறித்த விமர்சனங்கள் பலருக்கும் இருப்பது போல் எமக்கும் இருப்பதில் தவறேதும் இல்லை. ஆனாலும் எச்சாமமும் விழித்திருந்து ஆத்ம பலத்தோடு போராடியவர் மகாத்மா காந்தி.

யாழ் கச்சேரி முன்பாகவும் காலிமுகத்திடலிலும் எம் முன்னோர்கள் நடத்திய அகிம்சைபோராட்டங்களை  நான் கொச்சைப்படுத்த விருபவில்லை.

ஆனாலும் அந்த போராட்டங்கள் மாகாத்மாவின் அகிம்சைப்போராட்டங்கள் போல் இடையறாது நீடித்து நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

இலக்கை அடைத்தே தீரவேண்டும் என்ற உயிர்த்துடிப்பும், தன்னலமற்ற தாயக விடியலின் உறுதிப்பாடும் எமது மூத்த தலைவர்களுக்கு இருந்திருக்க வேண்டும்.

தூங்குகின்ற தமிழனை தட்டி எழுப்புபவன் நீயா நானா என்று உசுப்பேற்றும் போட்டி அரசியலுக்குள் மயங்கிக்கிடந்த மூத்த தமிழ் தலைவர்கள்,..

தென்னிலங்கை அரசுகளிடமிருந்து தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று  மகாத்மாவைப்போல் ஆத்ம பலத்தை கொண்டிருக்கவில்லை.

தெற்கு நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் புகைவண்டியில் பின் பெட்டியை நோக்கி நடந்து செல்லும் பயணி ஓருவன் தான் வடக்கு நோக்கி செல்வாதாக கூறினானாம்.

அதுபோலவே எமது பாரம்பரிய தமிழ் அரசியல் தலைமைகளும் நடந்து கொண்டதாக முதுபெரும் இடதுசாரித்தலைவரான தோழர் கார்த்திகேசன் மாஸ்டர் கூறியதை இங்கு நான் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

எமது மூத்த அரசியல் தலைவர்கள் தாம் நடத்தியதாக கூறிய அகிம்சைப்போராட்டத்தை உறுதிபட சரிவர நடத்தியிருந்தால்,.

தமிழ் மக்களின் நியாயமான சாத்வீக எண்ணங்களை அன்றைய தென்னிலங்கை அரசுகள் ஏற்று நடந்திருந்தால், இலங்கைத்தீவு இரத்தத்தீவாக ஒருபோதும் மாறியிருக்காது.

மூத்த அரசியல் தலைவரான எஸ்.ஜெ.வி செல்வநாயகம் அவர்கள் தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்றுவார் என்று இறுதியாக தனது இயலாமையை வெளிப்படுத்தி விட்டு மறைத்தது போல்,..

நாமும் எமது மக்களுக்கான உரிமையை நோக்கிய பயணத்தை இடைவழியில் கைவிட்டு சென்றுவிட முடியாது.

அரசியல் தீவின்றி தொடரும் அவலத்தையும், எமது மக்களின் கனவை வெல்வற்கான கடமைகளையும் அடுத்த சந்ததி மீது நாமும் சுமத்திவிட்டு சென்றுவிட முடியாது.

எமது அனுபவங்களும், ஆற்றலும், ஆத்மபலமும், இலக்கை எட்டிவிட வேண்டும் என்ற ஆழ்மன விருப்பங்களும் மக்கள் எமக்கு வழங்கும் ஆணைக்காக காத்திருக்கின்றன.

அப்போது சாதித்த நம் கரங்கள் சரித்திரம் படைக்கும். எமது மக்களின் கனவுகள் யாவும் நிச்சயம் நிறைவேறும்.

ஆற்றிலே போட்டுவிட்டு குளத்திலே தேடுவதுபோல் இன்று எமது மக்களும் எவரிடமிருந்தோ வாக்குறுதிகளை பெற்று விட்டு, அவர்களுக்கே வாக்குகளை வழங்கிவிட்டு அடுத்தவர்களிடம் கையேந்தும் துயரநிலையில் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

மகாத்மாவின் சிந்தனைகளுக்கு மதிப்பளிப்பதாக இருந்தால் இந்த அரசு இன்று நடக்கும் எமது மக்களின் அகிம்சை குரல்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.

மகாத்மா காந்தியை பற்றி பேசுகின்றவர்கள் அவரது சிந்தனைகளை முடிந்தளவுக்காவது செயற்பாடுகளில் கொண்டு வர வேண்டும்.

Related posts:

எமது மக்கள் முழுமையான சுதந்திரம்பெற தமிழ்த் தலைமைகள் நியாயமாக உழைக்கவில்லை- டக்ளஸ் தேவானந்தா அவர்களத...
எம்மை நம்பி அணிதிரளுங்கள்: சுபீட்சமான எதிர்காலத்தை மிகவிரைவில் உருவாக்கி தருகிறேன் - கிளிநொச்சி யில்...
மட்டுவில் ஸ்கந்தவிரேதய பாடசாலையின் ஆரம்ப பிரிவை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்...

கடற்றொழிலாளர்களின் வாழ்வா தாரத்தை பாதிக்கும்  நடவடிக்கை களுக்கு நாம் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கப்போ...
அர்த்தமுள்ள வகையில் மீள்குடியேற்றம் செய்யாது இந்தியாவிலிருப்பவர்களை எந்த நம்பிக்கையில் அழைப்பது? – ந...
யுத்தத்தில் உயிரிழந்த அனைத்து உறவுகளது நினைவுகூரல் நிகழ்வு இன்னும் செழுமைப்படுத்தப்படும் – பருத்திது...