தட்டான்குளம் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை வேண்டும் – அமைச்சர் சுவாமிநாதனிடம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி

Friday, May 26th, 2017
வவுனியா வெண்கல செட்டிக்குளம் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள தட்டான்குளம் கிராம மக்களை சிறுநீரக நோய்களிலிருந்து காப்பாற்றும் வகையில், மீள்குடியேற்றப்பட்ட கிராமம் என்ற ரீதியில் இங்கு சுத்தமான குடிநீரை இம்மக்கள் பெறுவதற்கு ஏற்பாட்டினை செய்து உதவ முடியுமா? என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகாரங்கள் அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் அவர்களிடம், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய அமர்வின்போது (26.05.2017) அமைச்சர் சுவாமிநாதன் அவர்களிடம் தட்டான் குளத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கேள்வி எழுப்பினார். மேலும் அந்தக் கேள்வியில்,
யுத்தம் காரணமாக கடந்த 1995ஆம் ஆண்டில் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலிருந்தும் இடம்பெயர்ந்து வவுனியா பூந்தோட்டம் மற்றும் நெளுக்குளம் ஆகிய நலன்புரி நிலையங்களில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டிருந்த மக்களில் 135 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் 2006ஆம் ஆண்டு வவுனியா, வெண்கல செட்டிக்குளம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள தட்டான்குளம் கிராமத்தில் அரச சார்பற்ற நிறுவனமொன்றின் உதவியில் அமைக்கப்பட்ட வீடுகளில் மீள்குடியேற்றஞ் செய்யப்பட்டுள்ளனர்.
இம்மக்கள் மீள்குடியேற்றஞ் செய்யப்பட்டு இன்றுவரையில் சுத்தமான குடிநீர் இன்மை காரணமாக சுமார் 100க்கும் அதிகமானவர்கள் சிறுநீரக நோய்க்கு ஆளாகியுள்ளதாகவும், இவர்களில் பலருடைய வீடுகளில் கிணறுகளும், குழாய்க் கிணறுகளும் இருக்கின்ற நிலையில் அவற்றிலிருந்து கிடைக்கின்ற நீரில் கல்சியம் உள்ளிட்டவற்றின் செறிவு அதிகமாக உள்ளதால் அவற்றைப் பயன்படுத்தி வருவதாலேயே இந் நோய் ஏற்படக் காரணமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும், சுத்தமான நீர் கிடைக்காமை மற்றும் சுத்தமான குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அளவுக்கு பொருளாதார வசதியின்மை காரணமாகவும் இம்மக்கள் இந்த நீரையே பயன்படுத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் தெரிய வருகின்றது.
இன்று எமது நாட்டில் பல மாவட்டங்களிலும் சிறு நீரகம் தொடர்பிலான நோய்கள் பல்வேறு காரணங்களால் அதிகரித்து வருகின்ற நிலையில், ஒரு கிராமத்தில் 135 குடும்பங்கள் வாழ்கின்ற நிலையில், அதில் 100 பேருக்கு அதிகமானோர் சிறுநீரக நோய்களுக்கு ஆட்பட்டுள்ளமையும், அதில் நால்வர் அண்மையில் மரணமாகியிருப்பதும் மிகுந்த அவதானத்துக்கு உட்படுத்தப்பட வேண்டிய விடயமாகும் என்று கூறிய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், மேற்படி தட்டான்குளம் கிராம மக்களை சிறுநீரக நோய்களிலிருந்து காப்பாற்றும் வகையில், மீள்குடியேற்றப்பட்ட கிராமம் என்ற ரீதியில் இங்கு சுத்தமான குடிநீரை இம்மக்கள் பெறுவதற்கு ஏற்பாட்டினை செய்து உதவ முடியுமா? என்று கேட்டதுடன் மேற்படி எனது கேள்விக்கான பதிலையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலான விளக்கங்களையும் கௌரவ அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் அவர்கள் வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன் என்றும் தெரிவித்தார்.

Related posts:

வீதி விபத்துக்களை  தடுப்பது தொடர்பில் பொலிசாரின் பொறுப்புகள் அளப்பரியது -  டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்...
பலாலி, அன்ரனிபுரம் மக்களின் அவலங்களுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கை மூலம் தீ...
அன்பும் அறமும் எங்கும் நிலவட்டும்! புதிய யுகம் நோக்கி புத்தாண்டு மலரட்டும்!! - வாழ்த்துச் செய்தியில்...