தடுத்து வைக்கப்படிருந்த கடற்றொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டனர் – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Sunday, April 18th, 2021


மியன்மாரில் கைது செய்யப்பட்டிருந்த கடற்றொழிலாளர்களை விடுதலை செய்தமைக்காக அந்நாட்டு அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விடுதலை செய்யப்பட்டவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதனடிப்படையில், மியன்மாரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 இலங்கை கடற்றொழிலாளர்கள் எதிர்வரும் வாரங்களில் நாட்டிற்கு வந்து சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தவறுதலாக மியன்மார் கடல் எல்லைக்குள் பிரவேசித்த இலங்கை ஆழ்கடல் தொழிலாளர்கள் மியன்மார் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த கடற்றொழிலாளர்களை விடுதலை செய்வதற்கு அரசாங்கத்தினால் பல்வேறு முயற்சிகள் இராஜதந்திர ரீதியாக மேற்கொள்ளப்பட்ட போதிலும், மியன்மாரில் நிலவிய அரசியல் சூழல் மற்றும் நடைமுறை சிக்கல்கள் காரணமாக கடற்றொழிலாளர்களின் விடுதலை காலதாமதமாகி வந்தது.

இந்நிலையில், சம்மந்தப்பட்ட கடற்றொழிலாளர்களின் குடும்பத்தினர், அண்மையில் கடற்றொழில் அமைச்சரை நேரில் சந்தித்து தாங்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதார அசௌகரியங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தினர்.

இதனையடுத்து, மியன்மார் தூதுவருடன் தொலைபேசியில் கலந்துரையாடிய கடற்றொழில் அமைச்சர், கைது செய்யப்பட்டிருக்கின்றவர்களை விடுவிப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக கலந்துரையாடினார்.

மேலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிநாட்டு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன ஆகியோருடன் கலந்துரையாடி, இதுதொடர்பான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தார்.

இவ்வாறான பின்னணியில் கடற்றொழிலாளர்கள் பன்னிரண்டு பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: