தடம் புரண்டுசெல்லும் எமது இளம் தலைமுறையை நல்வழிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும்! – டக்ளஸ் தேவானந்தா

Thursday, August 4th, 2016

சமூகத்திற்கு நல்வழியைக்காட்டி சமூகத்தை மேம்படுத்துகின்ற பொறுப்பை உணர்ந்து கொண்டவர்களாக அனைவரும் அர்ப்பணிப்புடனும் புரிந்துணர்வுடனும் நடந்துகொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமைச் செயலகத்திற்கு இன்றைய தினம் வருகை தந்திருந்த ஒரு தொகுதி மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்றிருந்த நிலை மாறி இயல்புச் சூழல் தோற்றுவிக்கப்பட்டுள்ள நிலையில் இளைய சமூகத்தினர் மத்தியில் தற்போது சமூகத்திற்கு ஒவ்வாத செயற்பாடுகளும் சமூக சீர்கேடுகளும் தலைவிரித்தாடுகின்றன.

குறிப்பாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை மற்றும் எமது இனத்தின் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களைச் சீரழிக்கின்றதான செயற்பாடுகளும் தற்போது அதிகரித்துள்ளன.

இந்நிலையில் இவ்வாறான சமூகப் பிறழ்வுகளிலிருந்து எமது இளைய சமூகத்தைப் பாதுகாத்து அவர்களுக்கு நல்வழியைக் காட்ட வேண்டிய பொறுப்பை சமய நிறுவனங்கள் கல்விமான்கள் புத்திஜீவிகள் மட்டுமல்லாது பெற்றோர்களும் பொதுமக்களுமாக ஒன்றுசேர்ந்து அர்ப்பணிப்புடன் உழைக்கும் போதே இவற்றைக் கட்டுப்படுத்த முடியும்.

இளையோர் மத்தியில் நிலவும் சமூக சீர்கேடுகள் தொடரும் பட்சத்தில் எமது இளையோர்களின் எதிர்காலம் பாரியதொரு ஆபத்தைச் சந்திக்கும் நிலைமை உருவாகிவிடும். எனவே இதை உணர்ந்துகொண்டவர்களாக வழிதவறும் இளையோர்களுக்கு சரியான வழியைக் காட்டுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும் எனவும் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டார்.

Related posts:


கொழும்பு தேசிய வைத்தியசாலையில்  இருதய சத்திர சிகிச்சைகள் மேற்கொள்வதில் தாமதம்: நிலையை சீர்செய்யுமாறு...
இன நல்லிணக்கத்திற்கு எதிரானவர்களை நாம் என்றும் ஏற்றுக்கொண்டது கிடையாது - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந...
கேப்பாபுலவு மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி - டக்ளஸ் தேவானந்தா எம்.பி. மகிழ்ச்சி தெர...