‘தங்கப் பாதை’ திட்டமானது வடக்கு கிழக்கு மாகாணங்களில் எந்தளவிற்கு முன்னெடுக்கப்படவுள்ளது? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Friday, March 29th, 2019

13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக ஆரம்பிப்பதை ஓர் ஆரம்பமாகக் கொண்டு எமது மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பிலான பிரச்சினைக்கான தீர்வினை எட்டுவதற்கான பயணத்தை ஆரம்பிப்போம் என நாங்கள் ஆரம்பத்திலிருந்தே கூறி வந்ததை ஏற்காமல், அது உழுத்துப் போனது என்றும், தும்புத் தடியால்கூட அதை தொட்டும் பார்க்க மாட்டோம் எனக் கூறியவர்கள், இன்று திடீரென சுடலை ஞானம் வந்ததுபோல், ‘மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் அடங்கிய 13வது திருத்தம், அரசியல் பயணத்தின் ஆரம்பத்திலேயே இருக்கிறதென’ நாங்கள் அன்று முதல் கூறி வருவதை ஏனைய தமிழ்த் தரப்பினர் இன்று ஏற்றுக் கொள்ள முன்வந்துள்ளார்கள். இதனை அப்போதே ஏற்றுக் கொண்டிருந்தால், இந்த நாடும், எமது மக்களும் இத்தனை அழிவுகளுக்கு உட்பட்டிருக்க மாட்டார்கள்.

அதுபோல்தான் இருக்கிறது உங்களது கடவுள் மன்றாட்டக் கதைகளும் எனத் தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் எழுவைத்தீவுப் பகுதியிலே நிர்மாணிக்கப்பட்டிருப்பதைப்போன்று – ஹைபிரிட் முறைமையிலான மின் விநியோகத் திட்டத்தினை ஏனைய அனைத்து தீவுகளிலும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும், அதேநேரம், கடந்த காலங்களில் மீள்குடியேற்ற மக்களுக்கு கடன் அடிப்படையில் வீடுகளுக்கான மின்சார இணைப்புகள் மற்றும் மின் விநியோகம் வழங்கப்பட்டதைப்போன்று, மீள்குடியேற்றப்பட்டு, மின்வசதியற்ற குடும்பங்களுக்கென மீண்டும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதேநேரம், வடக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற மின்சார சபை சிற்றூழியர்கள் முதற்கொண்டு ஏனைய வெற்றிடங்களுக்கு அப்பகுதி சார்ந்தவர்களையே நியமிக்க முன்வர வேண்டும் என்றும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நெடுஞ்சாலைகள் தொடர்பில் கூறுகின்றபோது, தற்போது ‘தங்கப் பாதை’ என்கின்ற ஒரு வீதி அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அண்மையில் தெரிய வந்துள்ளது. இந்த ‘தங்கப் பாதை’ திட்டமானது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எந்தளவிற்கு முன்னெடுக்கப்படும்? என்பது குறித்தும் யாழ்ப்பாணத்திற்கும் திருகோணமலைக்கும் இடையிலான பாதை நிர்மாணப் பணிகள் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்திருந்தது. இதன் தற்போதைய நிலைமை என்னவென்றும் கௌரவ அமைச்சர் அவர்கள் தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கின்றேன் என ஈழ மக்கள்; ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்;தா தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பில் நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு, மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்iகில் –

அதிவேகப் பாதைகள், பெருந்தெருக்கள் என இந்த நாட்டில் வீதி கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டாலும், இன்னமும் போக்குவரத்து நெரிசல் என்பது குறைந்தபாடில்லை என்றே தெரிய வருகின்றது.

இந்த நாட்டைப் பொறுத்தவரையில், ஒரு பக்கத்தில் அதிவேகப் பாதைகள், பெருந்தெருக்கள் அமைக்கப்படுகின்ற அதே சமாந்தர காலகட்டத்தில் இரயில் பாதைகளின் விஸ்தரிப்புகளும் தேவையாகவே உள்ளன.

குறிப்பாக, இரயில் கடவைகள் சார்ந்த இடங்களில் மேம்பாலங்களை அமைக்கின்ற ஒரு திட்டத்தினை கொண்டு வர வேண்டும். இதன் மூலமாக விரைவான இரயில் சேவைக்கு வழிவிடுவதனுடன், இரயில் கடவை விபத்துகளையும் தவிர்க்க முடியும்.

Related posts:


மக்களின் தேவைகளை அறிந்து சேவை செய்பவர்களை வெற்றிபெறச் செய்யுங்கள் - கண்டாவளையில் டக்ளஸ் எம்.பி. தெரி...
காரைநகர் சீனோர் நிறுவனத்தின் செயற்பாடுகள் தரமுயர்த்தப்பட்டு பிரதேச மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்...
13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு சேதாரம் இல்லை - அடித்து சொல்கிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!