தகரத்திற்கு தங்க முலாம்!.. தேர்தல் கோசத்திற்கு தமிழ் தேசிய முலாம் பூசப்படுகின்றது எனக் கூறுகின்றார் அமைச்சர் டக்ளஸ்!..

Tuesday, June 16th, 2020

தமது தேர்தல் வெற்றிக்காக மட்டும் தமிழ் தேசியத்தை கோசமாக உச்சரிப்பது தமிழ் தேசிய இனத்தின் உள்ளார்ந்த உணர்வுகளை கொசைப்படுத்தும் செயலாகும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

தமிழ் தேசியத்திற்காக தமிழர் தேசத்தில் இரத்தம் சிந்தி போராடினோம். அன்று அதுவொரு தர்ம யுத்தம்.

தமது தேர்தல் வெற்றிக்காகாக போராடுவோம் வாருங்கள் என்று எமது மக்களை உசுபேற்றி  அழைப்பவர்கள்  அந்த போராட்ட களத்தில் ஒரு துளி வியர்வை கூட சிந்தியிருக்கவில்லை.

அவர்கள் கட்டிய வேட்டி கூட கசங்கவில்லை. எமது இளைஞர் யுவதிகளை உசுப்பேற்றி விட்டு குடும்பங்களோடு வெளிநாடுகளுக்கு ஓடிப்போனவர்களும் தென்னிலங்கையில் வாழ்ந்தவர்களும் தமது கட்சிகளின் பெயரில் கோசங்களில்  தமிழ் தேசியத்தையே வைத்திருக்கிறார்கள்.

எமது தேச விடுதலைக்காக மாபெரும் அர்ப்பணங்களை அன்று நாம் ஆற்றிய போது,  அந்த பக்கமே காண முடிந்திருக்காத முகங்களும் தமிழ் தேசியம் என்ற பெயரிலேயே புதிய கட்சிகளை உருவாக்கியும் வருகிறார்கள்.  யாரும் கட்சிகளை உருவாக்கட்டும். தேர்தலிலும் போட்டியிடட்டும். ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்று நாம் வரவேற்போம்.

அவர்கள் உச்சரிக்கும் தமிழ் தேசியம் தமது ஆழ்மனங்களில் நிறைந்திருப்பது உண்மையென்றால் இதுவரை அவர்கள் பெற்ற பேரம் பேச வல்ல அரசியல் பலத்தில் தமிழர்களுக்கான அரசியலுரிமையை வென்று தந்திருப்பார்கள்.

தமிழ் தேசியத்தை அவர்கள் உண்மையாகவே நேசித்திருந்தால் அரசியலுரிமையும் இன்றி. போதிய அபிவிருத்தியுமின்றி,. அன்றாட அவலங்களுக்கான தீர்வுமின்றி எமது தமிழ் தேசிய இனம் அவலம் சூழ்ந்த வாழ்வை இன்னமும் எதற்கு சுமந்து நிற்க வேண்டும்? எம்மைப் பொறுத்தவரையில் இலங்கை இந்திய ஒப்பந்தந்தின் பின்னர் எமது போராட்ட வழிமுறையை மாற்றிக்கொண்டவர்கள்.

ஆனாலும் தமிழ் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகளை மறந்து விடவில்லை. பாதை மாறினாலும் எமது பயணம் நின்றுவிடவில்லை.

ஒரு புறத்தில் நாடாளுமன்ற அரசியல் பலத்தின் உடாக அரசுடன் பேரம் பேசுவது, மறு புறத்தில் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை எமது ஆழ்மனங்களில் உறுதியாக கொண்டு அரசுடன் நல்லிணக்க உறவை பேணுவது, இதன் மூலம் அனைத்து உரிமைகளையும் பெற முடியும் என்பதே எமக்கு கிடைத்திருக்கும் இறுதியும் உறுதியுமான நம்பிக்கை.

சந்திரிகா ஆட்சியில் ஓரளவு அரசியல் பலம் எமக்கு கிடைத்தது. நாம் முயற்சித்த அரசியல் தீர்வை கொண்டு வந்த போது இன்று தமிழ் தேசியம் பேசுவோரே பேரினவாத கட்சிகளுடன் இணைந்து அதை தடுத்து நிறுத்தினார்கள்.

எமக்கு கிடைத்த குறைந்தபட்ச அரசியல் அதிகாரங்களை வைத்தே எமது தமிழ் தேசிய இனத்தின் அன்றாட அவலங்களுக்கான தீர்வுகளை, அபிவிருத்தி தேவைகளை, நாம் முடிந்தளவு பூர்த்தி செய்து வந்திருக்கின்றோம்.

குறைந்த பட்ச அரசியல் பலத்துடன் நாம் சாதித்தவற்றில் துளியளவு கூட போதிய அரசியல் பலம் கொண்டவர்கள் செய்திருக்கவில்லை. போதிய அரசியல் பலம் எமக்கு கிடைத்தால் தமிழர் தேசம் தலை நிமிரும்.  தமிழ் தேசிய இனத்தின் தலை விதியும் மாற்றி எழுதப்படும்.

இவ்வாறு தெரிவித்திருக்கும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தகரத்திற்கு தங்க முலாம் பூசுவது போல் தேர்தல் கோஷங்களுக்கு தமிழ் தேசிய முலாம் பூசப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts:


ரயில் கடவைகளின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட வேண்டும் - அமைச்சருக்கு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத...
‘படைப் புழு” தாக்கம் போல வடக்கு கிழக்கு மாகாணங்களில் கால்நடைகளின் அழிவுக்கும் நஷ்டஈடுகள் வேண்டும் –...
வடக்கில் மீண்டும் ஸ்கின் டைவிங் முறையில் கடலட்டை பிடிக்க அனுமதி - கடற்றொழில் திணைக்களத்தின் மாவட்ட ...