டெங்கு நோயிலிருந்து வடக்கு மக்களை பாதுகாக்க விசேட திட்டம் உருவாக்கப்படவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Monday, December 4th, 2017

2010ஆம் ஆண்டிலிருந்து 2017ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்குள் இந்த ஆண்டிலேயே எமது நாட்டில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் – அதாவது கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகவும், அந்த வகையில் நாடளாவிய ரீதியில் இந்த ஆண்டில் 1 இலட்சத்து 67 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும், 395 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதாக ஒரு தகவல் கடந்த நவம்பர் மாதம் 11ஆம் திகதி ஊடகங்களில் வெளியாகியிருந்தன.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் கடந்த ஆண்டு டெங்கு நோய் காரணமாக 3 ஆயிரத்து 236 பேர் நோயாளர்களாக இனங்காணப்பட்டிருந்த நிலையில், அவர்களில் இருவர் உயிரிழந்திருந்தனர். ஆனால், இந்த வருடத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் 6 ஆயிரத்து 833 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன், இவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிய வருகின்றது. அந்த வகையில் பார்க்கின்றபோது, வடக்கில் ஏனைய மாவட்டங்களைவிட யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகமான டெங்கு நோய்த் தொற்றாளர்கள் காணப்படுவதாகத் தெரிய வருகின்றது. அதாவது, 4,726 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இதில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இக்காலப்பகுதிக்குள் 585 நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்த நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். எனினும், தற்போது கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக அங்கு டெங்கு நுளம்புகளின் பெருக்கும் திடீரென அதிகரித்துள்ளதாக மாவட்ட பூச்சியியல் ஆய்வுப் பிரிவு தெரிவித்திருக்கின்றது.

வவுனியா மாவட்டத்தில் 813 பேர் இனங்காணப்பட்டிருந்த நிலையில், அதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் மன்னாரில் 513 பேரும், முல்லைத்தீவில் 326 பேரும் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் எனத் தெரிய வருகின்றது.  அத்துடன், வடக்கில் தற்போது மலேரியா நோயினைப் பரப்புகின்ற நுளம்புகளின் பெருக்கமும் காணப்படுகின்றன. இது தொடர்பில் நான் ஏற்கனவே கௌரவ சுகாதார அமைச்சர் அவர்களது அவதானத்திற்குக் கொண்டு வந்திருந்தேன். இவ்வகை நுளம்புகள் யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் வவுனியா போன்ற மாவட்டங்களில் காணப்படுவதாகவே அறிய முடிகின்றது.

தற்போது மழைக்காலம் ஏற்பட்டுள்ளதால், மேற்படி நோய்களைப் பரப்புகின்ற நுளம்பு வகைகளின் பெருக்கங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், அதனைக் கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்துத் துறைகள் சார்ந்தும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்தையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். வடக்கு மாகாணம் மட்டுமல்லாது, தற்போதைய மழைக் காலம் காரணமாக நாடளாவிய ரீதியில் மேற்படி ஏற்பாடுகள் தேவைப்படுகின்றன என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

மேலும், மலேரியா நுளம்புகள் பெருகுகின்ற கிணறுகளில் அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மீன் குஞ்சுகள் விடப்படுதல் சாத்தியமான அணுகுமுறை எனக் கூறப்படுகின்ற நிலையில், அவ்வகை மீன் குஞ்சுகளைப் பெறுவதில் சிரமங்கள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இது தொடர்பிலும் அவதானங்கள் செலுத்தப்படல் வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய தினம் சுகாதார போசணை சுதேச மருத்துவம் மற்றும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சு ஆகிய இரு அமைச்சுக்கள் தொடர்பான குழநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts:

சவுதியில் நிர்க்கதி நிலையிலுள்ள பெண் தொழிலாளர்களது பிரச்சினைக்கு விரைவில் தீர்வு –  டக்ளஸ் எம்.பி நட...
பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டறவுச் சங்கத்தினரின் கோரிக்கைகள் தொடர்பில் சாதகமான தீர்மானங்கள் எட்...
வடக்கு கிழக்கில் காணப்படும் காணி பிரச்சினைக்கு பாதீட்டின் மூலம் விரைவில் தீர்வு கிடைக்கும் - நம்பிக்...