டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழுவினால் பாடசாலை இந்து சமய பாடநூல்களில் நிலவும் குறைபாடுகள் எடுத்துரைப்பு!

இந்து சமயம் தொடர்பான பாடசாலை பாட நூல்களில் காணப்படுகின்ற எழுத்துப் பிழைகள், கருத்துப் பிழைகள், வசனப் பிழைகள், விடயதானங்களின் அடர்த்தி, திருப்புகழ், தேவாரங்களின் விளக்கவுரைகளில் காணப்படும் குறைபாடுகள், நீக்கப்பட வேண்டிய மற்றும் சேர்க்கப்பட வேண்டிய விடயங்கள் என்பன தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையிலான துறைசார் வல்லுநர்கள் அடங்கிய குழுவினர் கடந்த 21ஆம் திகதி கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ வீ. இராதாகிருஸ்னண் அவர்களிடம் எடுத்துரைத்துள்ளனர்.
இதன்போது கருத்து தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா அவர்கள், பாடசாலைக்கான இந்து சமய பாட நூல்களில் பல்வேறு தவறுகள், குறைபாடுகள் காணப்படுவது குறித்து விளக்கியதுடன், விடயதான அடர்த்தி காரணமாகவும், மாணவர்களது தரத்திற்கு அப்பாலான தேவையற்ற விடயங்களின் இணைப்பு காரணமாகவும் மேற்படி பாடம் குறித்து மாணவர்களிடையே அதிருப்திகள் தோன்றும் நிலையில், மாணவர்களின் புறக்கணிப்புகளுக்கு இந்து சமய பாடம் உட்பட்டு வருவதாகவும், மதத்தினைப் பின்பற்றக் கூடிய வாய்ப்புகளை மாணவர்கள் இழந்து வருவதாகவும் விளக்கினார்.
இதன் பின்னர் துறைசார் வல்லுநர்களது கருத்துகளும் இங்கு முன்வைக்கப்பட்ட நிலையில், இக் கருத்துக்களை ஏற்றுக் கொண்ட ராஜாங்க அமைச்சர், இது தொடர்பில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு எதிர்வரும் 18ஆம் திகதி தேசிய கல்வி நிறுவக மற்றும் கல்வி வெளியீட்டுத் திணைக்கள அதிகாரிகள் உள்ளடங்கலாக மீண்டும் ஒரு கலந்துரையாடல் நடத்தப்பட்டு, தீர்வுகள் எட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|