ஜெனீவா பிரேரணை எதிர்ப்பதற்கும் வரவேற்பதற்கும் எதுவுமில்லாதது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.சுட்டிக்காட்டு!

Saturday, March 23rd, 2019

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 40வது கூட்டத் தொடர் முடிவுற்றுள்ள போதிலும், அது தொடர்பிலான கருத்தபிப்பிராயங்கள் இனி வரக்கூடிய தேர்தல் வரையில் இலங்கையில் தென் பகுதியிலும், வடக்கிலும் தாறுமாறாக ஒலிக்கும் என்பதில் சந்தேகமில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு, வெகுசன ஊடகத்துறை பற்றிய அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சு ஆகிய இரு அமைச்சுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இந்த நாட்டிலுள்ள குறுகிய, சுயலாப நோக்குடைய அரசியல்வாதிகளுக்கு, எமது மக்களை ஏமாற்றிவிட்டு, அவர்களது வாக்குகளை மிக இலகுவாகக் கொள்ளையடிப்பதற்கு ஏதேனும் ஒரு சம்பவம் இந்த நாட்டுக்குள் நடந்துவிடத் தவறிவிட்டாலும், ஜெனீவா நிச்சயமாக அந்த அரசியல்வாதிகளுக்குக் கைகொடுத்து உதவுகின்றது எனக் கூறினால், அதில் ஆச்சரியமடைவதற்கு ஒன்றுமில்லை.

அந்த வகையில் இந்த ஜெனீவா கூட்டத் தொடர், எதிர்ப்பதற்கும் ஏதுமற்ற, வரவேற்பதற்கும் ஏதுமற்ற தீர்மானங்களை நிறைவேற்றிவிட்டு, முடிவுற்றறுள்ளது. அதாவது வாடகை வீடு மாறுவதுபோல், 30/1லிருந்து, 40/1க்கு மாறியிருக்கின்றது. 30/1லிருந்த அதே பொருட்களுடன், 40/1க்கு நான்கு புதிய பொருட்களுடன் மாறியிருக்கின்றது என்றே கூற வேண்டும்.

மேற்படி யோசனைகளில் தெரிவிக்கப்பட்டிருப்பவை எதுவுமே இந்த நாட்டுக்குள், இந்த நாட்டு அரசாங்கத்தினால்; செய்ய முடியாதவை என்று இல்லை. இன ரீதியிலான பாகுபாடு முற்றாகக் களையப்பட்டால், அந்த யோசனைகளை நிபந்தனைகள் என்ற பெயரில் அன்றி, இந்த நாடு, யுத்தத்திற்குப் பின்னரான காலகட்டத்தில் சுயமாகவே செய்ய வேண்டிய கடப்பாடு என்ற வகையில் அவற்றை செயற்படுத்த முடியும். அதனால்தான் அந்த யோசனைகளில் எதிர்ப்பதற்கு எதுவுமில்லை என்று கூற வேண்டியுள்ளது.

ஆனால், இந்த நாட்டு அரசாங்கம் அவற்றை செயற்படுத்துமா? என்கின்றபோது, யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு 10 வருடங்கள் கழிகின்ற நிலையில், யுத்தத்தில் ஈடுபட்டிருந்த, யுத்தத்தை வெற்றிகண்ட அரசால் முழுமையாக செய்ய முடியவில்லை எனக் கூறி, நாங்கள் செய்து காட்டுகின்றோம் என ஆட்சிக்கு வந்த நல்லிணக்க அரசாலும், கடந்த நான்கு வருடகாலமாக செய்ய முடியவில்லை என்றால், இந்த நாட்டில் இனி எப்போதும் சாத்தியமில்லாத விடயங்களை அறிக்கையிடுவதால் எந்தப் பயனும் கிடையாது என்பதாலேயே அதனை வரவேற்கவும் முடியாமல் உள்ளதாக குறிப்பிட வேண்டியுள்ளது.

அதேநேரம், மனித உரிமைகள் தொடர்பில் இவ்வாறு அறிக்கை விடுபவர்கள் உலகில் ஏனைய நாடுகளில் – தங்களது நாடுகளில் மனித உரிமைகள் தொடர்பில் எந்தளவிற்கு அக்கறையுடன் செயற்படுகின்றார்கள் என கேள்விக் குறியாகவே உள்ளது. இந்த நிலையில், இவர்கள் கொடுக்கின்ற அழுத்தங்கள் என்கின்ற அறிக்கைகள், தமிழ் மக்களை உண்மையாகவே நேசிப்பதன் அடையாளமானதா? அல்லது வேறு ஏதும் அவர்களது உள்நோக்கங்கள் காரணமானதா? என்ற கேள்வியும் இல்லாமல் இல்லை. இன்று சர்வதேசத்திற்கு சார்பான அரசாங்கமொன்று இந்த நாட்டில் செயற்படுகின்ற நிலையில், இதைவிட அப்பால் அவர்களால் செல்ல முடியாது என்பதிலும் உண்மை இருக்கின்றது என தெரிவித்தார்.

Related posts:


இன சமத்துவ உரிமையின் குரலாகவும் இன ஐக்கியத்தின் குரலாகவும் ஒலிப்போம் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்...
இன விகிதாசாரத்திற்கு ஏற்ப அரச தொழில்வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தால் எமது இளைஞர், யுவதிகளுக்கு வேலைய...
தற்போது அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்புகள் தற்காலிகமானவை – பயங்கரவாதம் மற்றும் கொரோனா போன்றவற்...