ஜூலை கலவரம் சிங்கள தமிழ் மக்களுக்கு இடையில் ஏற்பட்ட இனக் கலவரம் எனக் கொள்ள முடியாது – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, December 8th, 2017

1983ஆம் ஆண்டு ஏற்பட்ட ஜூலை கலவரத்தை இந்த நாட்டில் உள்ள சிங்கள பௌத்த மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட கலவரம் எனக் கொள்ள முடியாது. குறுகிய அரசியல் நோக்கங்கள் காரணமாக ஒரு சில அரசியல்வாதிகளால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சதியாகவே அது கருதப்பட வேண்டும். இத்தகைய அடிப்படையிலும் எமது நாட்டில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டு பின்னர் அவை இனவாத மதவாத மோதல்களாக உருவாக்கப்படுகின்றன – என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைதினம் நடைபெற்ற வரவு செலவு திட்ட குழநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இந்த ஜூலை கலவரத்தில் தமிழ் மக்கள் மீது தாக்குதல்களை நடத்தி அவர்களைக் கொலை செய்து அவர்களது சொத்துக்களை அழித்தவர்களை அரசியல்வாதிகளின் கைக்கூலிகளாகக் காணும் நான் அப்பாவித் தமிழ் மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து காப்பாற்றிய சிங்கள மக்களை சிங்கள பௌத்த மக்களாகக் காணுகின்றேன்.

இதே மாதத்தில்தான் வெலிக்கடைச் சிறைப் படுகொலைகள் இடம்பெற்றிருந்தன. மொத்தமாக 72 தமிழ் அரசியல் கைதிகள் இருந்த நிலையில் அதில் 35 பேர் ஜூலை 25ஆம் திகதியும் 18 பேர் ஜூலை 27ஆம் திகதியும் கொல்லப்பட்டனர். இதில் உயிர் பிழைத்த 19 பேரில் நானும் ஒருவன். இந்த படுகொலையும் அக்கால அரசியல் நிகழ்ச்சி நிரலின் திட்டமிட்ட ஒரு சதியாகவே இருந்தது.

வருடா வருடம் சிங்களத் – தமிழ் புத்தாண்டு காலகட்டத்தில் தென் பகுதியில் ஒரு துண்டுப் பிரசுரம் சகோதர சிங்கள மக்களிடையே விநியோகிக்கப்பட்டு வருவது ஒரு வழக்கமாகிவிட்டுள்ளதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அதாவது ‘முஸ்லிம்களது கடைகளில் பொருட்களை வாங்குவதை புறக்கணிப்போம்’ என்ற அடிப்படையில் அந்தத் துண்டுப் பிரசுரம் அமைந்திருக்கும். அந்தத் துண்டுப் பிரசுரத்தைப் பார்க்கின்றபோது அதன் பின்னணியில் வர்த்தகர்கள் சிலர் இருப்பதையே அறிந்து கொள்ள முடியும். வர்த்தகர்களின் குறுகிய வியாபார நோக்கம் கருதி இந்தத் துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டாலும் அதன் மூலமான கருத்துகள் சகோதர சிங்கள மக்கள் மத்தியில் இனவாத நஞ்சை விதைப்பதாகவே இருக்கின்றது.

Related posts: