சொந்த நிலங்களை மீட்பதற்கு தமிழ் மக்கள் யாருக்கும் விலை கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் எடுத்துரைப்பு!

Friday, June 8th, 2018

வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்கள் வறுமை நிலை மிகக் கொண்ட மாவட்டங்களாகவே காணப்படுகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் பொது மக்களில் இரணடு பேருக்கு ஒருவர் என்ற வீதத்தில் இராணுவத்தினர் அங்கு நிலை கொண்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. அங்குள்ள வளங்களில் பெரும்பாலானவை படையினரால்  பயன்படுத்தப்படுகின்றது. வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய நிலையை எந்த வகையில் நியாயப்படுத்துவது என்ற கேள்வியே இன்று மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு நிதியம் திருத்தச் சட்டமூல தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

 ‘பொது மக்களது நிதியின் மூலமாக ஊதியம் பெறுகின்ற இராணுவச் சிப்பாய்களை ஈடுபடுத்தி, எல்லையில்லாத வகையிலான வர்த்தக நடவடிக்கைகளில் இலங்கை இராணுவம் தலையீடுகளை செய்து வருவதால், இலங்கையின் பொருளாதாரமானது சமச்சீரற்ற நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது’ என  இலங்கையில் அகதிகளுக்கான நீதியைக் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ள சட்ட ஆய்வுக்கான தென்னாசிய மத்திய நிலையம் (ளுயுஊடுளு) வெளியிட்டுள்ள ஓர் ஆய்வு அறிக்கை கூறகின்றது.

இந்த அறிக்கையானது இலங்கையில் பொருளாதாரத் துறை சார்ந்த இராணுவத்தினரின் தலையீடு காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து விடயங்களை வெளிப்படுத்தி இருக்கின்றது.

எனவே, இந்த அரசு இத்தகைய விடயங்கள் தொடர்பில் தனது அவதானங்களைச் செலுத்தி, உரிய தீர்வொன்றுக்கு வர வேண்டியது அவசியமாகின்றது.

அதே நேரம், எமது பகுதிகளில் இத்தகைய வர்த்தக நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டு வருகின்ற நிலையில், எமது மக்களின் சொந்த காணி, நிலங்களை விடுவிப்பதற்கு இராணுவத்தினர் நிதி கேட்கின்ற நிலைமைகளும் இல்லாமல் இல்லை. இந்த நிதி எதற்காகக் கேட்கப்படுகின்றது? என்பது தொடர்பில் எமது மக்களுக்கு தெளிவில்லை.

இராணுவத்திற்கென்று வரவு – செலவுத் திட்டத்தின் மூலமாக அரச நிதி ஒதுக்கப்பட்டு வருகின்றது. அது போதாமைக்கு எமது மக்களின் நிலங்களை – வளங்களைப் பயன்படுத்தி வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் எமது மக்களின் காணி, நிலங்களை விடுவிப்பதற்கு என நிதி கேட்கப்படுகின்ற நிலையில், அரசு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சுக்கு ஒதுக்குகின்ற நிதியும் அந்த அமைச்சின் ஊடாக இராணுவத்துக்குப் போய்ச் சேர்கின்றதா? அல்லது அரசுக்கு மீளப் போய்ச் சேர்கின்றதா? என்ற கேள்வி மக்களிடையே எழுகின்றது.

அந்த வகையில் இன்று ஒரு பாரிய பொருளாதார ஈட்டல் துறையாக மாற்றப்பட்டுள்ள படைத்தரப்பின், ஆயுதக் களஞ்சியம் வெடித்து பாதிக்கப்பட்ட அவிசாவளை, சாலாவ பகுதி மக்களுக்கு நீண்ட காலம்; கழிந்துள்ள நிலையிலும் இதுவரையில் நட்டஈடுகள் வழங்கப்படாத நிலையே காணப்படுகின்றது.

அதே நேரம், யுத்தமற்ற தற்காலப் பகுதியில் பாரிய இராணுவத்தினரை வைத்து இந்த அரசால் பராமரிப்பது கடினம் எனில், அவர்களை வெவ்வேறு பணிகளில் ஈடுபடுத்த முடியும்.

குறிப்பாக, போதைப் பொருட்கள் கடத்தல் செயற்பாடுகளை முறியடிப்பதற்கு பயன்படுத்தலாம். வரிகளை அறவிடுவது தொடர்பான விடயங்களில் பயன்படுத்தலாம். சூழல் பாதுகாப்பு தொடர்பில் பயன்படுத்தலாம். வனப் பாதுகாப்பு தொடர்பில் பயன்படுத்தலாம். இலஞ்சம், ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தலாம். இது போன்ற அவர்களது துறைகளுடன் ஓரளவேனும் தொடர்புடைய துறைகளில், கௌரவமான துறைகளில் அவர்களைப் பயன்படுத்த முடியும் என்றே நான் கருதுகின்றேன்.

இல்லையேல், விவசாயம், பண்ணைத் தொழில், செங்கல் உற்பத்தி போன்ற துறைகளில்தான் அவர்களை ஈடுபடுத்த வேண்டும் எனில், அதற்கு அரச காணிகள் இருக்கின்றன. பயன்படுத்தப்படாத தனியாரது காணிகள் இருக்கின்றன. அவற்றில் சில எற்பாடுகளுடன் இதனை மேற்கொள்ள முடியும் என்ற கருத்தையும் முன்வைத்து, நான் இங்கு முன்வைத்துள்ள கருத்துகள் எமது மக்களின் நலன்களையும், அதே நேரம் இந்த நாட்டின் முக்கியத் தேவையான தேசிய நல்லிணக்கத்தினையும் அடிப்படையாகக் கொண்டவை என்பதையும் குறிப்பிட்டு, விடைபெறுகின்றேன்.

Untitled-6 copy

Related posts:

தரகு அரசியல் தமிழ்த் தலைமைகளின் ஆசை வார்த்தைகளால் ஏமாற்றப்பட்டவர்கள் தமிழர்களே - டக்ளஸ் தேவானந்தா எம...
வடமாராட்சி கிழக்கில் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளில் விவசாய செயற்பாடுகளுக்கான அனுமதியைப் பெற்றுத் ...
வடக்கின் கடற்பரப்பை கண்காணிக்க கடல் சாரணர் படையணி! அமைச்சர் டக்ளஸ் அமைச்சரவைப்பத்திரம்!